பொதுவாக சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் பேட்ஸ்மேன்கள், பந்துகளை உற்று கவனித்து விளையாட வேண்டும். நீண்ட நேரம் நிலைத்து நின்று விளையாட வேண்டும் என்பதால், பந்துகளை கடைசி வரை உற்று கவனித்து விளையாடினால் மட்டுமே ரன்களை அடிக்க முடியும். இவ்வாறு டெஸ்ட் போட்டிகளில் பல நுணுக்கங்களை தெரிந்த வீரர்கள் பலர் உள்ளனர். அவர்கள் ஒரே இன்னிங்சில் 700+ பந்துகளை தாக்குப்பிடித்து விளையாடியுள்ளனர். அந்த வீரர்களைப் பற்றி இங்கு காண்போம்.
#1) லியோனார்ட் ஹட்டன் ( 847 பந்துகள் )
இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர் இங்கிலாந்து அணியின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராகத் திகழ்ந்த ஹட்டன். இவர் டெஸ்ட் போட்டிகளில் நீண்ட நேரம் நிலைத்து நின்று விளையாடி ரன்களை அடிக்கக் கூடியவர். 1938 ஆம் ஆண்டு ஓவல் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதினர். இந்த போட்டியில் நீண்ட நேரம் நிலைத்து நின்று அற்புதமாக விளையாடிய ஹைட்டன், 847 பந்துகளில் 364 ரன்கள் குவித்தார். இதில் 35 பவுண்டரிகளும் அடங்கும். இவர் மொத்தம் 79 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, அதில் 6971 ரன்களையும், 19 சதங்களையும் விளாசியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் இவரது பேட்டிங் சராசரி 56.22 ஆகும். இவர் இங்கிலாந்து அணிக்காக ஒரு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் கூட விளையாடியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
#2) கிளென் டர்னர் ( 759 பந்துகள் )
இவர் நியூசிலாந்து அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவராக திகழ்ந்தவர். 1972 ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதினர். இந்த டெஸ்ட் போட்டியில் மிகச் சிறப்பாக விளையாடிய டர்னர், 759 பந்துகளில் 259 ரன்கள் விளாசினார். இதில் 22 பவுண்டரிகளும் அடங்கும். இவர் நியூசிலாந்து அணிக்காக 41 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். அதில் 2991 ரன்களையும், 7 சதங்களையும் விளாசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. டெஸ்ட் போட்டிகளில் இவரது பேட்டிங் சராசரி 44.64 ஆகும்.
#3) பாப் சிம்ப்சன் ( 743 பந்துகள் )
இந்தப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருப்பவர் ஆஸ்திரேலிய அணியை சேர்ந்த பாப் சிம்ப்சன். 1964 ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதினர். இவர் இந்த போட்டியில் நீண்ட நேரம் நிலைத்து நின்று விளையாடி ரன்களை சேர்த்தார். இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய சிம்ப்சன், 743 பந்துகளில் 311 ரன்களை விளாசினார். இதில் 23 பவுண்டரிகளையும், 1 சிக்சரையும் விளாசியுள்ளார்.
இவர் ஆஸ்திரேலிய அணிக்காக மொத்தம் 62 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். அதில் 4869 ரன்களையும், 10 சதங்களையும், 27 அரை சதங்களையும் அடித்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் இவரது பேட்டிங் சராசரி 46.81 ஆகும். இவரும் ஆஸ்திரேலிய அணிக்காக ஒரு சர்வதேச ஒருநாள் போட்டிகளில் கூட விளையாடியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.