இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் தகுந்த நம்பிக்கையுடனும் பக்குவத்துடனும் ஆந்திராவிலிருந்து கிரிக்கெட் களத்திற்கு கிளம்பினார், ஒரு இளம் வீரர். தமது பல அபாரம் ஆட்டங்களால் ரசிகர்களின் மனம் கவர்ந்த இவர், இந்திய கிரிக்கெட்டின் மிகப்பெரிய வீரராக உருவெடுப்பார் என பலரும் நினைத்த வேளையில், தொடர்ந்து இந்திய சீனியர் அணியில் இடம்பிடிக்க தவறினார். தொடர்ந்து 10 ஆண்டுக்கும் மேலாக கிரிக்கெட் களத்தில் பல்வேறு பரிணாமங்களில் விளையாடிய இவர், இறுதியாக 2019 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடிப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், அதிர்ஷ்டம் அவருக்கு கை கொடுக்கவில்லை. இவருக்கு மாறாக ஒரு 3டி வடிவங்களில் செயல்படும் மாற்று வீரர் அணியில் அறிவிக்கப்பட்டார். ஏன் இவருக்கு பதிலாக ஒரு புதிய ஆல்ரவுண்டர் இடம் பெற்றார் என பல்வேறு கிரிக்கெட் விமர்சகர்களும் இந்திய தேர்வு குழுவினரை விமர்சித்தனர். உலகக் கோப்பை தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், காயம் காரணமாக அந்த 3டி வீரரும் விலகி அவருக்கு பதிலாக வேறொரு பேட்ஸ்மேன் தற்போது அணியில் இணைவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தொடர்ந்து காத்திருப்பு பட்டியலில் இடம்பெற்று ஏமாற்றம் அடைந்த பின்னர், ஒருவழியாக அனைத்துத்தரப்பு கிரிக்கெட் போட்டிகளிலும் ஓய்வு பெறுவதாக அறிவித்து தனது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார், இந்த வீரர். ஆம்! நான் கூறுவது அனைத்தும் அம்பத்தி ராயுடுவின் இந்த எதிர்பாராத முடிவை பற்றி தான். எனவே, தனது வாழ்வில் சந்தித்த பல ஏற்றத்தாழ்வுகளை பற்றி இந்த தொகுப்பு எடுத்துரைக்கின்றது.
2002-ஆம் ஆண்டு நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய அணியில் இடம் பெற்று தனது அபார ஆட்டத்தால் 177 ரன்கள் குவித்து எதிரணியை மிரள வைத்தார். அதற்கடுத்து நடைபெற்ற ரஞ்சி டிராபியில் 698 ரன்களைக் குவித்து ஒட்டுமொத்த சீசனில் அதிக ரன்களைக் குவித்த வீர்ர்களில் மூன்றாமிடம் பிடித்து பெருமையும் பெற்றார், இந்த இளம் வீரர். அந்த சீசனில் ஒரே போட்டியில் ஒரு சதம், ஒரு இரட்டை சதம் என மொத்தம் இரு சதங்களை அடித்து அனைவரது பார்வையையும் தன் பக்கம் ஈர்த்தார். சில வருடங்களுக்குப் பின்னர், நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பை தொடரில் தினேஷ் கார்த்திக், இர்பான் பதான், ஆர்.பி.சிங், ஷிகர் தவான் மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகியோருடன் அந்த அணியில் இடம் பெற்றார், அம்பத்தி ராயுடு. தற்போது சர்வதேச போட்டிகளில் கொடிகட்டிப் பறக்கும் இவர்களுக்கு கேப்டனாகவும் அந்தத் தொடரை வழிநடத்தினார், அம்பத்தி ராயுடு. தொடரை ஓரளவுக்கு வழிநடத்தி தனது பேட்டிங் சராசரியை 24.83 என்றவகையில் கட்டமைத்தார். இருப்பினும், களத்தில் தனது கோபத்தினை வெளி காட்டியதால், முக்கியமான பாகிஸ்தான் அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் இவர் விளையாட தடை விதிக்கப்பட்டது. இதனால், பல்வேறு கிரிக்கெட் விமர்சகர்களும் சரமாரியாக இவரை விமர்சித்தனர். இருப்பினும், களத்திற்கு திரும்பி போதிய பாரம் உடன் விளங்கிய இவர் சில அரசியல் சூழ்ச்சிகளாலும் அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டார்.