
தமது 22 ஆவது வயதிலேயே போதிய உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய இவர், சர்வதேச போட்டிகளில் விளையாடுவதற்கு தயாராகிய போது சற்று அதிர்ச்சி அளிக்கப்பட்டது. 2007ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியன் கிரிக்கெட் லீக் தொடரில் இவர் விளையாட நேர்ந்தது. தலைசிறந்த எதிரிகளுக்கு எதிராக விளையாடி அற்புதமான சில இன்னிங்ஸ்களை அளித்தார். இருப்பினும், இவரது சர்வதேச கிரிக்கெட் வாழ்வில் மீண்டும் ஒரு முட்டுக்கட்டை போடப்பட்டது. 2009ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் வாரியம் 79 இந்திய வீரர்களை தெரிந்தெடுத்து உள்ளூர் அளவிலான போட்டியில் விளையாட செய்தது. எதிர்பார்த்த வகையில் இல்லாமல் மீண்டும் ஐதராபாத் அணிக்கு விளையாட தொடங்கினார், அம்பத்தி ராயுடு. அதன் பின்னர், உலகின் மிகப்பெரிய டி20 தொடரின் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக பங்கேற்று தமது ஆட்டத்திறனை அவ்வப்போது வெளிப்படுத்தி வந்தார். இதனால் பல கோடி ரசிகர்களின் மனதை வென்றார். ஒருவழியாக இவரது உள்ளூர் மற்றும் ஐபிஎல் தொடரின் செயல்பாடுகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் சர்வதேச அறிமுகம் கண்டார். அதோடு மட்டுமல்லாமல், 2014-ம் ஆண்டில் நடைபெற்ற இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிக்கு எதிரான தொடரிலும் இடம்பெற்றிருந்தார். அதில் இலங்கை அணிக்கு எதிரான சர்வதேச ஒருநாள் போட்டியில் தனது முதலாவது சதத்தை பூர்த்தி செய்து தனது ஆட்டத்திறனை நிரூபித்தார்.