2015 உலகக் கோப்பை தொடரில் இவர் இடம்பெற்ற போதிலும் ஒரு போட்டியில் கூட விளையாடுவதற்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. இருப்பினும், நடைபெற்ற ஐபிஎல் தொடரில் 602 ரன்களைக் குவித்து தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலில் நான்காம் இடம் பிடித்தார். இதன்மூலம், மீண்டும் சர்வதேச போட்டிகளுக்கு திரும்ப அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், எதிர்பாராத விதமாக யோ-யோ டெஸ்டில் தோல்வி அடைந்து ஏமாற்றம் அளித்தார். சில வாரம் இடைவெளியிலேயே மீண்டும் யோ-யோ டெஸ்டில் தேர்ச்சியடைந்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் இடம் பெற்றார், அம்பத்தி ராயுடு. எனவே, இந்திய அணியில் நீண்ட நாட்களுக்கு தேடுதலுக்கு உள்ளான நான்காமிடத்தில் களமிறங்கும் பேட்ஸ்மேனாக இவர் அறியப்பட்டார்.
தொடர்ந்து கடந்த ஆண்டு முழுவதும் இவர் அணியில் இடம் பெற்று இருந்தாலும் நடப்பாண்டில் இந்தியா விளையாடிய ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான தொடரில் சோபிக்க தவறினார். இவரின் பார்ம் கேள்விக்குறியானதன் பேரில், 15 பேர் கொண்ட உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இவர் புறக்கணிக்கப்பட்டார். இந்த வருடம் நடைபெற்ற ஐபிஎல் தொடரிலும் இவரது செயல்பாடுகள் தொடர்ந்து ஏமாற்றம் அளித்தன. இருப்பினும், அணியின் காத்திருப்பு வீரராக இவர் அறிவிக்கப்பட்டார். உலக கோப்பை தொடரில் இவருக்கு பதிலாக இடம்பெற்ற ஆல்ரவுண்டர் விஜய் சங்கர் காயம் அடைந்து தொடரில் இருந்து வெளியேறிய நிலையில் அவருக்கு பதிலாக மயங்க் அகர்வால் இடம்பெற்றது அம்பத்தி ராயுடுவின் ரசிகர்களுக்கு மேலும் கோபத்தைக் கிளப்பியது.
எவரும் எதிர்பார்த்திராத வகையில், இன்று சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக கூறி தனது ஓய்வு கடிதத்தை இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு அனுப்பி அதிர்ச்சியளித்தார், அம்பத்தி ராயுடு. இத்தகைய எதிர்பாராத நிகழ்வு கிரிக்கெட் உலகில் இன்று பேசும் பொருளானது இது மட்டுமல்லாமல் இன்று ஐஸ்லாந்து கிரிக்கெட் வாரியம் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அம்பத்தி ராயுடு வை தங்களது அணியில் இணையுமாறு உதவிக்கரம் நீட்டியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.