சச்சின், தோனி போன்ற வீரர்களுக்கு நிகராக அதிக ரசிகர்களை கொண்ட ஒரு வெளிநாட்டு வீரர் என்றால் அது தென் ஆப்ரிக்காவைச் சேர்ந்த அதிரடி பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் தான். மைதானத்தின் அனைத்து திசைகளிலும் சிக்சர் அடிக்க கூடிய திறமை படைத்தவர் இவர். இதனால் தான் இவரை கிரிக்கெட் ரசிகர்கள் MR.360° என்று அழைத்து வருகின்றனர். இன்று அவருக்கு பிறந்தநாள். இவர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பல சாதனைகளை படைத்துள்ளார். இவரது பிறந்தநாளை முன்னிட்டு அவர் படைத்த ஒரு சில சாதனைகளை பற்றி இங்கு காண்போம்.
#1) ஒருநாள் போட்டிகளில் அதிவேக சதம் அடித்த ஒரே வீரர்:
பொதுவாக தென் ஆப்பிரிக்க அணி ஒருநாள் போட்டியில் விளையாடும் பொழுது, தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்தால், ஏபி டி வில்லியர்ஸ் தான் அணியை சரிவிலிருந்து மீட்பார். சில சமயங்களில் தொடக்க ஆட்டக்காரரான அம்லா போன்ற வீரர்கள் நிலைத்து நின்று விளையாடி விட்டால், இவர் 40 ஓவர்களுக்கு மேல்தான் பேட்டிங் ஆட வருவார். அந்த கடைசி 10 ஓவர்களில் தான் போட்டி விறுவிறுப்பாக இருக்கும். பொதுவாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் அனைத்து பேட்ஸ்மேன்களும் களத்தில் நிலைத்து விட்டால் தான் அதிரடியை தொடங்குவார்கள். ஆனால் ஏபி டி வில்லியர்ஸ் பேட்டிங் செய்ய வந்த சிறிது நேரத்தில் தனது அதிரடியை ஆரம்பித்துவிடுவார். இதனால்தான் தனக்கென்று தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கியுள்ளார்.
2015ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் தென்ஆப்பிரிக்க அணி மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் மோதின. அந்தப் போட்டியில் 10 சிக்ஸர்கள், மற்றும் 8 பவுண்டரிகளை விளாசிய ஏபி டி வில்லியர்ஸ் வெறும் 31 பந்துகளில் சதத்தை விளாசினார். இதன்மூலம் ஒருநாள் போட்டிகளில் குறைந்த பந்துகளில் சதம் அடித்த ஒரே வீரர் என்ற சாதனையை படைத்தார். இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருப்பவர் நியூசிலாந்து அணியை சேர்ந்த கோரி ஆண்டர்சன். இவர் 2014ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில், வெறும் 36 பந்துகளில் சதத்தை விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
#2) அதிவேக அரைசதம் அடித்த ஒரே வீரர்:
அதிவேக சதம் அடித்த ஏபி டி வில்லியர்ஸ் தான், ஒருநாள் போட்டிகளில் அதி வேக அரைசதம் அடித்த ஒரே வீரர் என்ற இரண்டு சாதனையையும் தன் வசம் வைத்துள்ளார். இவர் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் அதிவேக சதம் அடித்த இந்தப் போட்டியில்தான் அதிவேக அரை சதமும் அடித்துள்ளார். இந்தப் போட்டியில் வெறும் 16 பந்துகளில் தனது அரைசதத்தை அடித்துள்ளார். இந்த போட்டியில் இவர் அதிரடியாக விளையாடுவதற்கு முக்கிய காரணம், தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் தங்களது விக்கெட்டை கொடுக்காமல், இருவரும் சதம் அடித்துள்ளனர்.
அந்தப் போட்டியில் தென்னாபிரிக்க அணி 247 ரன்கள் வரை ஒரு விக்கெட்டை கூட இழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டியில் ஏபி டி வில்லியர்ஸ் வெறும் 44 பந்துகளில் 149 ரன்கள் விளாசினார். இதில் 16 சிக்சர்களையும் 9 பவுண்டரிகளையும் விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது.