அதிரடிக்கு பெயர் போன ஐபிஎல் தொடரானது, கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 11 வருடமாக நமது இந்தியாவில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஐபிஎல் தொடரில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும். அதில் அதிரடிக்கு பெயர் போன அணிகளில் ஒன்று, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி. அதற்கு முக்கிய காரணம் ஏபி டி வில்லியர்ஸ் தான். பல போட்டிகளில் தனி ஒருவராக போராடி பெங்களூரு அணியை வெற்றி பெறச் செய்திருக்கிறார். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
இவர் தனது அதிரடியின் மூலம் பல ரசிகர்களை தன் வசம் கவர்ந்துள்ளார். இவர் மைதானத்தின் அனைத்து திசைகளிலும் சிக்ஸர் அடிக்க கூடியதில் வல்லவர். எனவேதான் கிரிக்கெட் ரசிகர்கள் இவரை MR.360° என்று அழைத்து வருகின்றனர். ஏபி டி வில்லியர்ஸ் சிக்ஸர் மழை பொழிந்த மூன்று போட்டிகளை பற்றி இங்கு காண்போம்.
#1) ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் Vs குஜராத் லயன்ஸ் ( 2016 ஆம் ஆண்டு )
2016 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் லீக் சுற்றில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், குஜராத் லயன்ஸ் அணியும் மோதியது. இந்தப் போட்டியில் பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்த போட்டியில் ஏபி டி வில்லியர்ஸ் இறுதி வரை நிலைத்து நின்று வெளுத்து வாங்கினார். கடைசி ஓவர் வரை சிக்ஸர் மழை பொழிந்த ஏபி டி வில்லியர்ஸ், 52 பந்துகளில் 129 ரன்கள் விளாசினார். அதில் 10 பவுண்டரிகளும், 12 சிக்சர்களும் அடங்கும். இவருக்கு ஜோடியாக விளையாடிய விராட் கோலியும், இந்த போட்டியில் சதம் விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது அதிரடியால் பெங்களூர் அணி 20 ஓவர்களின் முடிவில் 248 ரன்கள் குவித்தது. இந்த கடினமான இலக்கை குஜராத் லயன்ஸ் அணி சேஸ் செய்ய முடியாமல், 19 ஓவர்களின் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 104 ரன்கள் மட்டுமே எடுத்தது. எனவே பெங்களூர் அணி 144 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ஏபி டி வில்லியர்ஸ் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.
#2) ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் Vs கிங்ஸ் லெவன் பஞ்சாப் ( 2017 ஆம் ஆண்டு )
2017 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் லீக் சுற்றில், பெங்களூர் அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதியது. இந்தப் போட்டியில் பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்த போட்டியில் வாட்சன் மற்றும் கேதார் ஜாதவ் போன்ற முக்கிய பேட்ஸ்மேன்கள் விரைவிலேயே தங்களது விக்கெட்டை பறிகொடுத்தனர். போட்டியின் இக்கட்டான சூழ்நிலையில் தனது அதிரடியின் மூலம் பெங்களூர் அணியை சரிவிலிருந்து மீட்டார் ஏபி டி வில்லியர்ஸ். இறுதிவரை தனி ஒருவராக போராடிய ஏபி டி வில்லியர்ஸ், 46 பந்துகளில் 89 ரன்கள் விளாசினார். இதில் 3 பவுண்டரிகளும், 9 சிக்ஸர்களும் அடங்கும். ஆனால் இந்தப் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
#3) ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் Vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ( 2014 ஆம் ஆண்டு )
2014 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் லீக் சுற்றில், பெங்களூர் அணியும், ஹைதராபாத் அணியும் மோதியது. இந்த போட்டியில் ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது. டேவிட் வார்னரின் அதிரடியால் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி, 20 ஓவர்களின் முடிவில் 155 ரன்கள் அடித்தது. இந்த இலக்கை பெங்களூர் அணி செஸ் செய்யும்பொழுது, விராட் கோலி, கிறிஸ் கெயில் போன்ற முன்னணி பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் தங்களது விக்கெட்டை பறிகொடுத்தனர். மிடில் ஆர்டரில் தனி ஒருவராக போராடி பெங்களூர் அணியை ஏபி டி வில்லியர்ஸ் வெற்றி பெறச் செய்தார். இந்த போட்டியில் ஏபி டி வில்லியர்ஸ் 41 பந்துகளில் 89 ரன்கள் விளாசினார். அதில் 8 பவுண்டரிகளும், 6 சிக்ஸர்களும் அடங்கும்.