ஆப்கானிஸ்தான் அணி அயர்லாந்து சுற்றுப்பயணம் மேற்க்கொண்டு இரண்டு ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் முதல் ஒருநாள் போட்டியில் அயர்லாந்து அணி அபார வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து இரண்டாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி பெல்பாஸ்ட் மைதானத்தில் நடைபெற்றது. அதில் டாஸ் வென்ற அயர்லாந்து கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி ஆப்கானிஸ்தானின் துவக்க வீரர்களான சஷாத் மற்றும் நூர் அலி களமிறங்கினர்.
நிதானமாக ஆட்டத்தின் துவங்கிய சிறிது நேரத்திலேயே நான்காவது ஓவரின் முதல் பந்திலேயே நூர் அலி மார்க் அடைர் ஓவரில் ஆட்டமிழந்தார். அதனைத் தொடர்ந்து களமிறங்கிய ரஹ்மத் ஷா ஷசாத் உடன் ஜோடி சேர்ந்தார். ரஹ்மத் ஷா ஒருபுறம் நிதானமாக ரன் குவிக்க மறுமுனையில் ஷசாத் வழக்கம்போல தன் அதிரடியைக் காட்டினார். பந்துவீச்சாளர்களின் பந்துகளை மைதானத்தை விட்டு பறக்க விட்டு ரசிகர்களுக்கு வானவேடிக்கை காட்டினார் ஷசாத். இந்த ஜோடியை பிரிக்க அயர்லாந்து பல பந்துவீச்சாளர்களை பயன்படுத்தி பார்த்தது. ரஹ்மத் ஷா அரைசதத்தையும், சஷாத் தனது அதிரடி சதத்தையும் இந்த போட்டியில் பதிவு செய்தனர். இறுதியில் ஆன்டி மெக்ப்ரைன் வீசிய 32வது ஓவரின் முதலாவது பந்தில் ரஹ்மத் ஷா 62 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்க அதே ஓவரின் ஐந்தாவது பந்தில் ஷசாத்-ம் தனது விக்கெட்டினை பறிகொடுத்தார்.
இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 150 ரன்கள் குவித்தது. அதனைத் தொடர்ந்து வந்த அஃபன் மற்றும் நெய்ப் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க ஷகிடி மற்றும் நிஷபுல்லா ஜார்டன் இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்த துவங்கினர். அதிரடியாக ஆடி இறுதிகட்டத்தில் அணியின் ஸ்கோரை 305 ஆக உயர்த்தியது இந்த ஜோடி. இதில் நிஷபுல்லா ஜார்டன் 60 ரன்களும் ஷகிடி 47 ரன்களும் குவித்தது குறிப்பிடத்தக்கது. அயர்லாந்து அணி சார்பில் மார்க் அடைர் 3 விக்கெட்டும், ஆன்டி மெக்ப்ரைன் 2 விக்கெட்டையும் வீழ்த்தியிருந்தனர்.
பின்னர் 306 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி அயர்லாந்து அணி களமிறங்கியது. ஆப்கானிஸ்தான் போலவே இந்த அணியிலும் துவக்க வீரர் ஜோம்ஸ் மெக்கல்லம் ஒற்றையிலக்க ரன்னில் வெளியேறினார். அதன் பின் களமிறங்கிய பால்ப்ரைன் நிதானமாக ஆடத் துவங்கினார். மறுமுனையில் ஸ்ட்ரில்லிங் அவ்வப்போது பந்துகளை பவுண்டரி விளாசினார். சிறப்பாக ஆடிய ஸ்ட்ரில்லிங் அரைசதம் விளாச அடுத்த ஓவரிலேயே நெய்ப் பந்துவீச்சில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். பால்ப்ரைன்-ம் 20 ரன்கள் எடுத்த நிலையில் அவரின் பந்தில் ஆட்டமிழந்தார். அதனைத் தொடர்ந்து வந்த எந்த வீரரும் நிலைத்து ஆடவில்லை. அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்துக் கொண்டிருந்தனர்.
அதிலும் நெய்ப் பந்தில் தான் பெரும்பாலானோர் தங்களது விக்கெட்டுகளை இழந்தனர். சீரிய இடைவெளியில் விக்கெட்டுகள் விழ இறுதியில் 179 ரன்களுக்கு அயர்லாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 126 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. சிறப்பாக பந்துவீசிய நெய்ப் 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இந்த போட்டியை வென்றதன் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என சமன்.செய்தது ஆப்கானிஸ்தான்.6 விக்கெட்டுகளை வீழ்த்திய நெய்ப் ஆட்டநாயகனாகவும் , ஸ்ட்ரில்லிங் தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.