ஆப்கானிஸ்தான் அணி அயர்லாந்து சுற்றுப்பயணம் மேற்க்கொண்டு இரண்டு ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் முதல் ஒருநாள் போட்டி பெல்பாஸ்ட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் கேப்டன் நெய்ப் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி ஸ்டிரில்லிங் மற்றும் ஜேம்ஸ் மெக்கல்லம் ஆகியோர் துவக்க வீரர்களான களமிறங்கினர்.
ஆரம்பத்திலிருந்தே தடுமாறி வந்த மெக்கல்லம் 4 ரன்னில் இருந்த போது டவ்லட் ஜார்டன் வீசிய பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ஆன்டி பால்பிரினியும் 4 ரன்னில் தனது விக்கெட்டை டவ்லட் ஜார்டனிடம் இழந்தார். இதனால் ஆப்கானிஸ்தான் அணி 35 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அடுத்து களமிறங்கிய போர்டர்பீல்டு துவக்க வீரர் ஸ்ட்ரில்லிங் உடன் இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இருவரும் சிறப்பாக ஆடினர். நிதானமாக ஆடிவந்த ஸ்டிரில்லிங் அரைசதத்தை கடந்தார். அதனைத் தொடர்ந்து கேப்டன் போர்டர்பீல்டு-ம் தனது அரைசதத்தை பதிவு செய்தார். இருவரும் இணைந்து மூன்றாவது விக்கெட்டுக்கு 99 ரன்கள் சேர்த்தனர்.
போர்டர்பீல்டு 53 ரன்கள் எடுத்த நிலையில் ரஷீத் கான் பந்தில் ஆட்டமிழந்தார். அதனைத் தொடர்ந்து ஸ்ட்ரில்லிங்-ம் 71 ரன்னில் தனது விக்கெட்டை நெய்ப் பந்தில் இழந்தார். அதன் பின்னர் களமிறங்கிய அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் தங்களது விக்கெட்டுகளை மளமளவென இழந்தனர். இறுதியில் அயர்லாந்து அணி 210 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அயர்லாந்து வீரர்கள் 6 பேர் வெறும் ஒற்றை இலக்கில் தங்களது விக்கெட்டுகளை இழந்தது குறிப்பிடத்தக்கது. ஆப்கானிஸ்தான் அணி சார்பில் டவ்லட் ஜார்டன் மற்றும் அப்டப் ஆலம் தலா மூன்று விக்கெட்டுகளும், ரஷீத் கான் இரண்டு விக்கெட்டும், நெய்ப் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் 211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆப்கானிஸ்தான் அணி களமிறங்கியது. அந்த அணி சார்பில் முகமது சஷாத் மற்றும் சஷாய் துவக்க வீரர்களாக களமிறங்கினர். துவக்கம் முதலே அந்த அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதிரடி ஆட்டக்காரரான சஷாத் வெறும் இரண்டு ரன்னில் முர்டாக் பந்தில் ஆட்டமிழந்தார். அதனைத் தொடர்ந்து ரஹ்மத் ஷாவும் 4 ரன்னில் முர்டாக் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த அஃகன் ஒரு புறம் நிலைத்து ஆட மறுமுனையில் சஷாய் 14 ரன்னிலும், ஷகிடி 12 ரன்னிலும், நபி 27 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் அஃகன் 29 ரன்னில் இருந்தபோது ரன்கின் பந்தில் தனது விக்கெட்டை இழந்தார். அடுத்து வந்த வீரர்கள் அனைவரும் மளமளவென தங்களது விக்கெட்டுகளை இழக்க இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி 138 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதன் மூலம் அயர்லாந்து அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் முதலாவது ஒருநாள் போட்டியைக் கைப்பற்றியது. ரஷீத் கான், முஜ்ஷீப் ரஹ்மான், நபி என பல முன்னணி வீரர்களுடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி அயர்லாந்து அணியுடன் தோல்வியடைந்தது ரசிகர்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. சிறப்பாக பந்துவீசி நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றிய மார்க் அடைர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து இரு அணிகளும் மோதும் அடுத்த ஒருநாள் போட்டி மே 21 அன று நடைபெறவுள்ளது.
Published 20 May 2019, 07:29 IST