சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்த ஆப்கான் விக்கெட் கீப்பர்

Ikram Ali khil
Ikram Ali khil

நடந்தது என்ன?

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஆப்கானிஸ்தானின் இறுதி உலகக்கோப்பை லீக் போட்டியில் ஆப்கான் இளம் விக்கெட் கீப்பர் இக்ரம் அலி கில் 86 ரன்கள் விளாசினார். உலகக்கோப்பை வரலாற்றில் 18 வயதில் ஒரு வீரருடைய அதிகபட்ச ரன்கள் இதுவாகும். இதன்மூலம் சச்சின் டெண்டுல்கர் வைத்திருந்த இந்த சாதனையை முறியடித்துள்ளார் இக்ரம் அலி கில்.

உங்களுக்கு தெரியுமா..

ஆப்கானிஸ்தான் விக்கெட் கீப்பர் அகமது ஷெஷாத் காயம் காரணமாக உலகக்கோப்பை தொடரிலிருந்து விலகியதால் ஆசிய U19 கோப்பையின் இளம் விக்கெட் கீப்பர் இக்ரம் அலி கில்-ற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

கதைக்கரு

உலகக்கோப்பை தொடரில் இக்ரம் அலி கில் ஆரம்பத்தில் சற்று தடுமாறினார். இருப்பினும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஆப்கானிஸ்தானின் கடைசி உலகக்கோப்பை லீக் போட்டியில் 3வது வீரராக களமிறங்கி சிறப்பான ரன் குவிப்பில் ஈடுபட்டார். 86 ரன்கள் எடுத்திருந்த போது கிறிஸ் கெய்ல் சுழலில் வீழ்த்தப்பட்டார். அதன்பின் களமிறங்கிய ஆப்கான் வீரர்கள் நிலைக்க தவறியதால் அந்த அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

போட்டி முடிவில் இக்ரம் அலி கில் கூறியதாவது,

"என்னுடைய குறிக்கோள் இலங்கை கிரிக்கெட் லெஜன்ட்ரி விக்கெட் கீப்பர் குமார் சங்கக்காரா போல் விளையாட வேண்டும் என்பதுதான். நான் பேட்டிங் செய்ய களமிறங்கும் போது என் மனதில் அவர்தான் நியாபகத்திற்கு வருவார். நான் இதுவரை குமார் சங்கக்காராவை சந்தித்தது இல்லை.
ஆட்டத்திற்கு தேவையான சமயங்களில் ஸ்ட்ரைக் மாற்றி பவுண்டரிகளை விளாசும் திறன் கொண்டு உலகின் சிறப்பான பேட்ஸ்மேனாக திகழ்ந்த குமார் சங்கக்காரவின் பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் ஸ்டைலை பிரதியெடுத்து நான் அதைப் போலவே வெளிபடுத்தப் போகிறேன்.
கிரிக்கெட் லெஜன்ட் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை நான் முறியடித்ததை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன். 2019 உலகக்கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணியில் அதிகபட்ச தனிநபர் ரன்களான 86 அடித்தை நினைத்து மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். சதமடிக்க முடியாதது பெரும் வருத்தத்தை அளிக்கிறது. கண்டிப்பாக எதிர்வரும் சர்வதேச போட்டிகளில் சதம் விளாசுவேன்.
உலகக்கோப்பையில் விளையாட மிகவும் கடினமாக உழைத்தேன்.பல அனுபவங்கள் இத்தொடர் மூலம் எனக்கு கிடைத்தது. ஆப்கான் வீரர்கள் மட்டுமன்றி எதிரணிகளான மேற்கிந்தியத் தீவுகள், ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இந்தியா ஆகிய அணி வீரர்கள் என்னை அதிகம் வழிநடத்தினர்.
இது எனக்கு மிகுந்த நம்பிக்கையை ஊட்டியுள்ளது. வருங்காலத்தில் என்னுடைய சிறந்த பங்களிப்பை ஆப்கானிஸ்தான் அணிக்கு அளிப்பேன்."

அடுத்தது என்ன?

ஆப்கானிஸ்தான் அணி 2019 உலகக்கோப்பை தொடரில் விளையாடிய 9 போட்டிகளிலும் தோல்வியை தழுவி வெளியேறியுள்ளது. இருப்பினும் அந்த அணி எதிரணிகளுக்கு கடும் நெருக்கடியை அளித்தது குறிப்பிடத்தக்கது. இந்திய கிரிக்கெட் வாரியம் ஆப்கானிஸ்தான் அணிக்கு ஆடுகள உதவியளித்து பல உதவிகளை செய்து வருகிறது. ஆப்கான் அணியில் உள்ள சில வீரர்கள் உலகெங்கும் நடைபெறும் டி20 தொடர்களில் பங்கேற்று தங்களது சிறப்பான பங்களிப்பை அளித்து வருகின்றனர். குறிப்பாக ரஷீத் கான், முகமது நபி, முஜீப் யுவர் ரகுமான் ஆகியோர் குறிப்பிடும்படியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Quick Links

Edited by Fambeat Tamil