உலகில் தற்போது வளர்ந்து வரும் அணிகளில் ஆப்கானிஸ்தான் முக்கிய இடம் வகிக்கிறது.காரணம் அவர்கள் கிரிக்கெட் மீது வைத்துள்ள ஈடுபாட்டின் விளைவுதான். கடந்த ஐந்தாண்டுகளாகப் பல நட்சத்திர வீரர்களை ஆப்கானிஸ்தான் உருவாக்கிக் கொண்டு வருகிறது. கிரிக்கெட்டிலும் பல உச்சங்களைத் தொட்டிருக்கிறது ஆப்கானிஸ்தான் அணி.
ஆப்கானிஸ்தானின் கிரிக்கெட் பயணமானது 2008ஆம் ஆண்டு உயிர் பெற்றது. ஐசிசி நடத்தும் உலக கிரிக்கெட் லீக் டிவிசன் ஐந்தில் முதன்முதலாகப் பங்கு பெற்றது. இரண்டே ஆண்டுகளில் தனது முதல் பிரதான கிரிக்கெட் போட்டியான டி 20 உலக கோப்பையில் பங்கேற்றது ஆப்கன் அணி. 2015 உலக கோப்பையில் பங்கேற்று ஸ்காட்லாந்து அணியை ஒரு விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது ஆப்கானிஸ்தான் அணி. இதுவே அவர்களின் வளர்ச்சிக்கு அச்சாரமாக அமைந்தது.பின்பு 2016ம் ஆண்டு நடந்த டி20 உலகக் கோப்பையில் அந்தத் தொடரின் சாம்பியன்களாக உருவெடுத்த மேற்கிந்திய தீவுகள்அணியைத் தோற்கடித்தத்த ஒரே அணி ஆப்கானிஸ்தானெனப் பெருமையைப் பெற்றது.
2017 ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் ஏலத்தில் ஆப்கானிஸ்தான் இளம் வீரர்களான ரஷித் கான் மற்றும் முகமது நபி ஆகியோரை சன்ரைசர்ஸ் அணி தேர்வு செய்தது.ஐபிஎல்-லில் பல முன்னணி பேட்ஸ்மேன்களுடன் ஆடிய அனுபவம் இவர்களை சூப்பர் ஸ்டார்களாக மாற்றியது. அதன்பின் இந்த ஆண்டு நடந்த ஐபிஎல் ஏலத்தில் மற்றொரு ஆப்கன் வீரர் முஜிபுர் ரஹ்மான் பஞ்சாப் அணியால் வாங்கப்பட்டார். இவரும் தன் மாயாஜால சுழல் பந்து வீச்சால் பலரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.
ஆப்கானிஸ்தான் அணியின் வளர்ச்சியைக் கண்காணித்த ஐசிசி அவர்களுக்கு டெஸ்ட் போட்டியை ஆடும் அந்தஸ்தை வழங்கியுள்ளது.கடந்த ஜூன் மாதம் இந்தியாவுடன் தனது முதல் டெஸ்ட் போட்டியில் களம் கண்டது ஆப்கானிஸ்தான் அணி.
பின் அபரிவிதமான வளர்ச்சி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி தற்போதுள்ள பல முன்னணி அணிகளுக்கு சவால் விடும் நிலையில் உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு ஆசிய கோப்பையில் அனைத்து அணிகளுக்குமே மிகவும் அச்சுறுத்தலாக அமைந்தது ஆப்கானிஸ்தான். இலங்கை வங்கதேசம் எதிரான போட்டிகளில் வெற்றியைக் குவித்திருந்தது ஆப்கானிஸ்தான் அணி. இந்தியாவுக்கு எதிரான போட்டியிலும் சமன் செய்திருந்தது.
சென்னையில் என்ன செய்கிறார்கள் ??
சென்னையில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா விளையாட்டு அறிவியல் மையத்தில் ஆப்கானிஸ்தான் சீனியர் அணியினர் மற்றும் வளர்ந்து வரும் அணியினர் (emerging team ) பயிற்சிக்காக வந்துள்ளனர். அடுத்த ஆண்டு உலக கோப்பையில் களம் காண உள்ள ஆப்கானிஸ்தான் சீனியர் அணியும் இப்பயிற்சியில் தம்மை மேம்படுத்திக்கொள்ள பங்கேற்றுள்ளனர்.
ரஷித் கான், முகமத் ஷாசாத்,முஜிபுர் ரஹ்மான், போன்ற பல முன்னணி வீரர்கள் ஐக்கிய அமீரகத்தில் நடக்கும் டி 10 போட்டிகளில் பங்கேற்றுள்ள நிலையில் அவர்களும் இம்மாத இறுதியில் சென்னை வர உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆப்கானிஸ்தான் உலக கோப்பைக்கு முன்பாக 7 ஒருநாள் போட்டிகள் 3 டி20 போட்டிகள் ஒரு டெஸ்ட் எனக் கிரிக்கெட்டில் கவனம் செலுத்தவுள்ளது.
உலக கோப்பையில் பல அணிகளை ஆப்கானிஸ்தான் தோற்கடிக்கும் எனப் பல ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் ஆர்வலர்கள் கூறிவருகின்றனர்.