ஆஸ்திரேலிய வீரர் ஜேம்ஸ் பவுல்க்னர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பதிவால் சர்ச்சையில் சிக்கி உள்ளார். அது குறித்து விரிவாக பார்ப்போம். ஜேம்ஸ் பவுல்க்னர் நேற்று தனது 29வது பிறந்தநாளை கொண்டாடினார். தன் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இரவு விருந்து சென்றதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டிருந்தார். அந்த புகைப்படத்தில் ஜேம்ஸ் பவுல்க்னர், அவருடைய அம்மா, அவருடைய நெருங்கிய நண்பர் ஆகியோர் இருந்தனர். அந்தப் புகைப்படப் பதிவின் தலைப்பில், " என்னுடைய ஐந்து வருட ஆண் நண்பர் மற்றும் என்னுடைய அம்மாவுடன் பிறந்தநாள் இரவு உணவு சாப்பிடுகிறேன்", என்று குறிப்பிட்டிருந்தார்.
ஆண் நண்பர் என்று அவர் குறிப்பிட்டு இருந்ததால் அவர் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என்ற முடிவுக்கு வந்து விட்டனர் ரசிகர்கள். இந்த செய்தி காட்டுத் தீ போல பரவியது. அவருக்கு ஆதரவாக பலரும் பதிவிட்டனர். கிரிக்கெட் ரசிகர்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது இந்த செய்தி. ஆஸ்திரேலியாவில் ஓரினச்சேர்க்கை சட்டப்படி குற்றம் இல்லை என்று 2017 ஆம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்டு உள்ளது. இந்நிலையில் தான் ஓரினச்சேர்க்கையாளர் இல்லை என்றும் நான் இன்ஸ்டாகிராமில் போட்ட பதிவு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார் பவுல்க்னர். இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியுள்ளதாவது :
நேற்று இரவு நான் போட்ட பிறந்தநாள் பதிவு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. நான் ஓரினச்சேர்க்கையாளர் அல்ல. இருப்பினும் அதற்கு ஓரினச்சேர்க்கையாளர் சமூகம் எனக்கு அளித்த ஆதரவு மகிழ்ச்சியாக உள்ளது. ராப் என்னுடைய உயிர் தோழன், அவரும் நானும் ஒரே வீட்டில் ஐந்து வருடங்களாக ஒன்றாக வாழ்ந்து வருகிறோம். நேற்றோடு அவரும் நானும் சேர்ந்து வசிக்க ஆரம்பித்து ஐந்து ஆண்டுகள் ஆகின்றன. அதைத் தான் அந்தப் பதிவில் ஐந்து வருடம் ஒன்றாக இருக்கிறோம் என்று குறிப்பிட்டிருந்தேன். அது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி ".
இவ்வாறு அவர் கூறியுள்ளார். ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியமும் இந்த விஷயம் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
ஜேம்ஸ் பவுல்க்னருடைய பதிவு அவருடைய தொழில் பங்குதாரர் மற்றும் அவருடைய வீட்டில் ஐந்து வருடங்களாக ஒன்றாக இருக்கும் நண்பரின் உண்மையான பிரதிபலிப்பாக இருந்தது. அவருடைய பதிவு குறித்து அவரிடம் விசாரிக்காமலேயே அவர் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என்று ஊடகங்கள் புரளியை கிளப்பியுள்ளன. பவுல்க்னரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியமும் ஓரினச்சேர்க்கையாளர் சமூகத்திற்கு எப்போதும் ஆதரவாக இருப்போம், இந்த விஷயத்தில் இருந்து வெளியே வருவது உணர்ச்சிகரமான நேரமாக இருக்கும்"
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. ஜேம்ஸ் பவுல்க்னர் ஆஸ்திரேலிய அணிக்காக ஒரே ஒரு டெஸ்ட் போட்டி, 69 ஒருநாள் போட்டிகள் மற்றும் 24 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். 2015 ஆம் உலககோப்பை இறுதிப் போட்டியில் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார் பவுல்க்னர். அவர் கடைசியாக 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி 22ஆம் தேதி இலங்கைக்கு எதிராக நடந்த டி20 போட்டியில் பங்கேற்றிருந்தார். அதற்கு பிறகு பார்மின்றி தவித்ததால் அணியில் இருந்து கழட்டிவிடப்பட்டார்.