இந்திய அணியானது இம்முறை உலககோப்பை தொடரில் சிறப்பான துவக்கத்தினை தந்துள்ளது. தான் மோதிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது இந்தியா. அதிலும் குறிப்பாக இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்களைத் தான் இந்த இரண்டு வெற்றியும் சாரும். முதல் போட்டியில் ரோகித் ஷர்மா மற்றும் இரண்டாவது போட்டியில் ஷிகர் தவான் என அடுத்தடுத்து சதம் விளாசி அசத்தினர். ஆனால் தற்போது ஷிகர் தவான் தனது கையின் கட்டை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக உலககோப்பை தொடரிலிருந்து மூன்று வாரங்களுக்கு பங்கு பெறமாட்டார் என அறிவிக்கப்பட்டது. எனவே அவருக்கு பதிலாக ரிஷப் பண்ட் அல்லது அம்பத்தியு ராயுடு அணியில் மாற்று வீரராக அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்திய கிரிக்கெட் வாரியம் ஷிகர் தவான் விரைவில் காயத்திலிருந்து குணமடைவார். எனவே அவருக்கு பதிலாக மாற்று வீரர்கள் யாரையும் தேர்வு செய்யப்போவதில்லை என அறிவித்தது. இதனால் தற்போதைய இந்திய அணியில் நான்காவது இடத்தில் களமிறங்கி வரும் ராகுல் ரோகித் ஷர்மாவுடன் துவக்க வீரராக களமிறங்குவார் என்பது நம் அனைவரும் அறிந்ததே. ஆனால் மிகவும் சர்ச்சைக்குள்ளான அந்த நான்காம் இடத்தில் எந்த வீரர் களமிறங்குவார் என்பதில் பெரிய கேள்விக்குறி எழுந்துள்ளது.
#) விஜய் சங்கர்
தற்போதைய இந்திய அணியை பொருத்த வரையில் நான்காவது இடத்தில் களமிறங்க வாய்ப்புள்ள வீரர்கள் தினேஷ் கார்த்திக் மற்றும் விஜய் சங்கர் தான். தமிழகத்தை சேர்ந்த இந்த இரண்டு வீரர்களும் தற்போது இந்த நான்காவது இடத்திற்கு பெரும் போட்டியாக உள்ளனர். அதில் ஐசிசி உலககோப்பை தொடரை அறிவிக்கும் போதே விஜய் சங்கர் தான் நான்காவது இடத்தில் விளையாடுவார் என அவரை தேர்வு செய்தது தேர்வுக்குழு. இவர் உலககோப்பை தொடருக்கு முன்னர் நான்காவது இடத்தில் அந்த அளவிற்கு களமிறங்காவிட்டாலும் நியூசிலாந்து அணிக்கெதிரான தொடரில் சிறப்பாக விளையாடியது மற்றும் இவரின் பந்து வீச்சு திறமை என இரண்டையும் கருத்தில் கொண்டே இவர் அணியில் தேர்வு செய்யப்பட்டார். அதுமட்டுமின்றி அம்பத்தியு ராயுடுவின் மோசமான ஆட்டமே இவரை இந்த இடத்திற்கு அழைத்து வந்தது. ஆல்ரவுண்டராக விளங்கும் இவர் இந்திய அணியில் இடம்பிடிக்கும் பட்சத்தில் அணிக்கு பந்துவீச கூடுதலாக ஒரு பந்து வீச்சாளராகவும் செயல்படுவார். பேட்டிங்கிலும் தன்னால் முடிந்த அளவிற்கு இந்திய அணிக்கு உதவுவார்.
#2) தினேஷ் கார்த்திக்
பல ஆண்டுகளாக இந்திய அணியில் நிலையான இடம் கிடைக்காமல் தவிப்பவர் தினேஷ் கார்த்திக். இவர் விக்கெட் கீப்பராக தனது கிரிக்கெட் பயணத்தை தொடர்ந்தாலும் தோணி இந்திய அணியில் நீங்காத இடத்தினை பிடித்ததால் இவர் தன்னை சிறப்பான பேட்ஸ்மேனாகவே மாற்றிக் கொண்டார். தற்போதைய உலககோப்பை அணியில் தேணிக்கு மாற்று விக்கெட் கீப்பராகவே இவர் தேர்வு செய்யப்பட்டார். இருப்பினும் இவர் இந்திய அணியின் நான்காம் இடத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக விளையாடி சிறந்த சராசரியையும் வைத்துள்ளார்.
அதுமட்டுமின்றி சமீப காலமாக பினிஷராக விளங்கும் இவர் தனது அனுபவத்தின் மூலம் அணியின் சூழ்நிலையை உணர்ந்து விளையாடும் தன்மை கொண்டவர். இவரின் அனுபவம் இந்திய அணிக்கு பெரிதும் உதவும். எனவே அடுத்து நடைபெறவிருக்கும் 5 லீக் போட்டிகளில் இந்த இருவரும் குறைந்தது ஒரு போட்டியிலாவது விளையாடுவர். இருந்தாலும் அடுத்து நடைபெறவிருக்கும் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ள நியூசிலாந்து அணிக்கெதிரான போட்டியில் எந்த வீரர் களமிறங்குவார் என்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தினேஷ் கார்த்திக் மற்றும் விஜய் சங்கர் இவர்கள் இருவரும் கிட்டத்தட்ட 50-50 வாய்ப்புள்ளது.
#3 ரிஷப் பண்ட்
தற்போதைய உலககோப்பை அணியில் கண்டிப்பாக இடம் பிடிப்பார் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட வீரர் ரிஷப் பண்ட். ஆனால் கடைசியாக விளையாடிய தொடரில் அவர் தடுமாறியதால் அவருக்கு பதிலாக அணியில் தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டார். தற்போதைய உலககோப்பை இந்திய அணியில் ஷிகர் தவானைத் தவிர வேறு எந்த இடது கை பேட்ஸ்மேனும் இல்லை. எனவே இவர் அணியிலிருந்தால் அணிக்கு கூடுதல் பலம் சேரும். அதிரடி ஆட்டக்காரரான இவர் 40வது ஓவருக்கு பின் களமிறங்கினால் தனது அதிரடியால் அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தும் தன்மை கொண்டவர் இவர். தற்போது ஷிகர் தவானுக்கு பதிலாக மாற்று வீரர்கள் யாரையும் தேர்வு செய்யப்போவதில்லை என அறிவித்துள்ளது பிசிசிஐ. இருந்தாலும் தவானுக்கு காயம் குணமடையாத பட்சத்தில் இவரே உலககோப்பை அணியில் சேர்க்கப்படுவார். அதுமட்டுமின்றி இவர் அணியில் இருக்கும் பட்சத்தில் இவரை நான்காவது இடத்நிற்கு களமிறக்கும் அணி நிர்வாகம். என்னதான் அதிரடி வீரராக இருந்தாலும் இவர் அணி இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் போது பொறுப்புடன் விளையாடாமல் தேவையற்ற ஷாட்களை ஆடி தனது விக்கெட்டை இழந்து விடுகிறார் இவர். இன்னும் அனுபவம் வரும் போது அதனை உணர்ந்து அதற்கேற்ப தன்னை மாற்றிக்கொண்டு கட்டாயம் விரைவில் இந்திய அணிக்கு திரும்புவார் இவர்.