இங்கிலாந்தில் நடைபெற்று வரும் கவுண்டி கிரிக்கெட்டில் பங்கேற்க இந்திய டெஸ்ட் அணியின் துனைக் கேப்டன் அஜின்க்யா ரகானே இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் கோரிக்கை வைத்துள்ளார். பிசிசிஐ அனுமதி அளித்தால் ஹாம்ப்ஸைர் அணிக்காக மே, ஜீன், ஜுலை ஆகிய மாதங்களில் நடைபெறவிருக்கும் கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடுவார். எதிர்வரும் டெஸ்ட் சேம்பியன்ஷிப்-பிற்கு முன்பாக அஜீன்க்யா ரகானேவின் இந்த முடிவு அவரது பேட்டிங் திறனை மேம்படுத்த அதிகம் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அஜின்க்யா ரகானே எவ்வித ஆட்சேபனை (NOC) சான்றிதழ் கேட்டு இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் விண்ணப்பித்துள்ளார். அத்துடன் உச்சநீதிமன்றம் நியமித்துள்ள நிர்வாகிகள் குழுவிற்கும் இதன் ஒரு நகலை அனுப்பியுள்ளார். 4 நாள் டெஸ்ட் கவுண்டி கிரிக்கெட்டில் ஹாம்ஸைர் அணிக்காக விளையாட அனுமதிக்குமாறு மும்பை கிரிக்கெட்டர் அஜின்க்யா ரகானே இந்த கடிதத்தில் அனுமதி கோரியுள்ளார். பிசிசிஐ தலைவர் ராகுல் ஜோஹ்ரி இந்த கடிதத்தை நிர்வாக குழுவிற்கு அனுப்பியுள்ளார்.
தற்போது நடந்துவரும் 12வது ஐபிஎல் தொடரில் ரகானேவின் ஆட்டத்திறன் மிகவும் மோசமாக உள்ளது. அடுத்த மாத இறுதியில் இங்கிலாந்தில் நடைபெற உள்ள 2019 ஐசிசி உலகக் கோப்பையில் இந்திய அணியில் இவரது பெயர் இடம்பெறவில்லை. எனவே உலகக் கோப்பைக்குப் பிறகு நடைபெறவிருக்கும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு பயிற்சி எடுக்கும் விதத்தில் ரகானே உலகக் கோப்பை நடைபெறும் காலத்தில் கவுண்டி கிரிக்கெட்டில் பங்கேற்க இங்கிலாந்து செல்ல முடிவு செய்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் வாரியமும் எந்தவித ஆட்சேபனையும் தெரிவிக்காமல் அஜின்க்யா ரகானே கவுண்டி கிரிக்கெட்டில் பங்கேற்க அனுமதி அளித்துள்ளது. இந்திய கிரிக்கெட் வாரியம் கடைசியாக விராட் கோலி மற்றும் ஜெட்டிஸ்வர் புஜாரா ஆகியோருக்கு கவுண்டி கிரிக்கெட்டில் பங்கேற்க அனுமதி அளித்தது. அஜின்க்யா ரகானே எடுத்துள்ள இந்த முடிவு அவரது கிரிக்கெட் திறனை மேலும் மேம்படுத்தி மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக பேட்டிங்கை வெளிபடுத்த உதவிகரமாக இருக்கும்.
அஜின்க்யா ரகானே தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். இந்த தொடரில் பெரிதும் இவரது தலைமையிலான அணி சோபிக்காமல் 8 போட்டிகளில் 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அத்துடன் ரகானேவிற்கும் இந்த ஐபிஎல் சீசன் சிறப்பானதாக இல்லை. இந்த ஐபிஎல் சீசனில் இதுவரை விளையாடிய போட்டிகளில் 208 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். இனிவரும் போட்டிகளிலாவது ரகானேவின் அதிரடி ஆட்டத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர்.
இவருடன் புஜாரா, இஷாந்த் சர்மா, ரவிச்சந்திரன் அஸ்வின், பிரத்வி ஷா, மயான்க் அகர்வால், ஹனுமா விகாரி ஆகியோரையும் இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டில் விளையாட வைக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. புஜாராவிற்கு ஏற்கனவே கவுண்டி கிரிக்கெட்டில் 3 வருட ஒப்பந்தம் உள்ளது குறிப்பிடத்தக்கது. மற்ற வீரர்களையும் விளையாட வைக்க பிசிசிஐ 3 கவுண்டி அணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.