தற்போது நடந்து முடிந்த ஐபிஎல் 12 வது சீசனுக்கான ஏலத்தில் அதிக தொகைக்கு (8.4 கோடிக்கு) ஏலத்தில் எடுக்கப்பட்டு அனைவரையும் வியக்க வைத்தவர் தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி. வலது கை சுழல் பந்து ஆல்ரவுண்டரான இவர் தமிழக அணிக்காக விளையாடிவருகிறார்.
2018 விஜய் ஹசாரே தொடரில் இவர் தமிழக அணிக்காக தனது முதல் ஆட்டத்தை குஜராத் அணிக்கு எதிராக களம் கண்டார். இரண்டாவது ஆட்டத்திலேயே சர்விஸ் அணிக்கு எதிராக 10 ஓவர்கள் பந்து வீசி 38 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றி தமிழக அணிக்கு வெற்றியை பெற்றுத்தந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அந்த தொடரின் முடிவில் இவர் 9 ஆட்டங்களில் 22 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இரண்டாவது வீரர் ஆவார். இவருடைய பவுலிங் சராசரி 16.68 மட்டுமே வைத்துள்ளார். பவுலிங்ல் மட்டுமின்றி பேட்டிங்கிலும் இவர் சிறந்த ஆவ்ரேஜ் வைத்துள்ளார்.
இவர் 13 வயதில் தனது பள்ளி அணிக்காக விக்கெட் கீப்பராக கிரிக்கெட் பயணத்தை தொடங்கினார். தனது கல்லூரி படிப்பினை சென்னையிலுள்ள எஸ்.ஆர்.எம் பழ்கலைக்கழகத்தில் கட்டிட கலை பட்ட படிப்பை பயின்றார். தனது படிப்பின் சுமை காரணமாக விளையாட்டில் அதிக கவனம் செலுத்த இயலவில்லை. பின்னர் கல்லூரி முடித்த பிறகு இரண்டு வருடம் நிறுவனத்தில் பணிபுரிந்தார். இவர் கிரிக்கெட் மீது கொண்ட ஆர்வத்தினால் மீண்டும் வேகபந்து வீச்சாளராக உள்ளூர் போட்டியில் ஆட தொடங்கினார். பந்து வீச்சின் போது ஏற்பட்ட காயம் காரணமாக இவரால் ஆறு மாதங்கள் விளையாட இயலவில்லை. தனது பந்து வீச்சு தன்மையை முழுவதும் மாற்றிக்கொண்டு சுழல் பந்து வீச்சாளராக உள்ளூர் போட்டிகளில் விளையாடினார். இவர் சுழல் பந்தில் எட்டு வகையாக வீசும் தண்மை கொண்டவர்.

வருண் சக்கரவர்த்தி 2018 டிஎன்பிஎல் தொடரில் மதுரை அணிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்டார். மதுரை அணிக்காக விளையாடிய அவர் அந்த தொடரில் 9 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியிருந்தார். மேலும் இறுதிப்போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 4 ஓவர்கள் பந்து வீசி வெறும் 9 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர், இதில் ஒரு மெய்டன் ஓவரும் அடங்கும். இவருடைய சிறப்பான பந்துவீச்சினால் மதுரை அணி முதல் முறையாக டிஎன்பிஎல் கோப்பையை கைப்பற்றியது. இந்த தொடரில் அதிக டாட் பால் வீசிய வீரரும் இவரே .இந்த தொடரில் சுமார் 125 டாட் பால்கள் வீசியுள்ளார். இவர் எட்டு வகையான சுழல் பந்து வீசுவதினால் அதை பேட்ஸ்மேன்கள் கணிப்பது மிகவும் அரிது.
இவர் கடந்த ஐபிஎல் சீசனில் சென்னை அணிக்கு வலைப்பயிற்சியில் வீரர்களுக்கு பந்து வீசியுள்ளார். வருண் முதல்முறையாக பந்து வீசிய சென்னை அணி வீரர் டேரன் பிராவோ ஆவார். அவருக்கு பந்து வீசுகையில் முதல் இரண்டு பந்துகள் புல் டாஸ் ஆக போட்டதாகவும் பின்பு நன்றாக வீசியதாகவும் தற்போது அவர் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். சென்னை அணி வீரர்கள் தன்னுடன் நன்றாக பழகியதாகவும் மேலும் இம்ரான் தாகிர் தனக்கு சில அறிவுரைகள் வழங்கியதாகவும் கூறினார். கொல்கத்தா அணியின் கேப்டனான தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் இவரை தன்னுடன் கொல்கத்தாவில் வலைப்பயிற்ச்சிக்கு அழைத்து சென்று அங்குள்ள வீரர்களான குல்தீப் யாதவ், பியுஷ் சாவ்லா மற்றும் சுனில் நரேன் ஆகியாருடன் வருன் சக்கரவர்த்தியை பந்து வீச வைத்துள்ளார்.

ஐபிஎல் ஏலத்தில் இவரை வாங்க பல அணிகள் முன் வந்த போதிலும் கடைசியில் பஞ்சாப் அணி இவரை அதிக தொகையான 8.4 கோடிக்கு ஏலம் எடுத்தது. இவரின் அடிப்படை விலை 20 லட்சமாக இருந்தது கடைசியில் அது 42 மடங்கு அதிகரித்து 8.4கோடியாக மாறியது. பஞ்சாப் அணியின் கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் தமிழக வீரராக இருப்பதால் இவரின் தன்மையை அறிந்து அணியில் இவரை பயன்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபிஎல்-லில் சிறப்பாக பந்து வீசும் பட்சத்தில் இவர் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படலாம்.