இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரில் தற்போது இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்தபோட்டி தொடரை மேலும் பரபரப்பாக்கியதில் ஆஸ்திரேலிய கேப்டன் ‘டிம் பெய்ன்’ மற்றும் இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் ‘ரிஷாப் பண்ட்’ இவ்விருவரின் பங்கு முக்கியமானது. இவ்விருவருக்குமிடையே நடைபெற்ற வார்த்தை மோதல்கள் போட்டியை பரபரப்பாகவும், சுவாரசியமாகவும் ஆக்கியது.
‘டிம் பெய்ன்’, ‘ரிஷாப் பண்ட்’ ஐ நோக்கி “ஒருநாள் போட்டி அணியில் உனக்கு இடம் இல்லையே, ஆனாலும் நீ இங்கு தங்கியிருந்து நானும் எனது மனைவியும் சினிமாவுக்கு செல்லும் போது எனது குழந்தைகளை பார்த்துக்கொள்ளும் வேலையை செய்” எனக்கூற பதிலுக்கு ‘ரிஷாப் பண்ட்’, டிம் பெய்ன்-ஐ கிண்டல் செய்யும் விதமாக “தற்காலிக கேப்டன் என்றால் என்ன தெரியுமா ? . நான் அவரை இங்கு நேரடியாக பார்த்துக் கொண்டிருக்கிறேன். அவருக்கு பேசுவதற்கு மட்டும் தான் தெரியும் ” என்று பதிலடி கொடுத்தார்.
சமீபத்தில் ஆஸ்திரேலிய பிரதமர் இரு அணி வீரர்களுக்கும் தனது மாளிகையில் விருந்தளித்து கௌரவப்படுத்தினார். அப்போது பிரதமர் ரிஷப் பண்டிடம் , “நீதானே ஆஸீ கேப்டனை கிண்டல் செய்தது” என விசாரிக்கும் அளவுக்கு ரிஷப்பண்ட்-ஐ அங்கு பிரபலபடுத்தியுள்ளது.

இந்நிலையில் ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் மனைவி ‘போனி பெய்ன்’, பிரதமர் மாளிகையில் அளித்த விருந்தில் கலந்து கொண்டார். அப்போது போனி பெய்ன் தனது இரு குழந்தைகளுடன், ரிஷப் பண்ட் உடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
அந்த புகைப்படத்தை போனி பெய்ன் தனது இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளத்தில் “சிறந்த குழந்தை பராமரிப்பாளர்” என்ற தலைப்பில் பகிர அது உடனே வைரலானது. ரசிகர்கள் மத்தியில் அந்த புகைப்படம் பெரும் வரவேற்பை பெற, பிரபலங்கள் பலரும் அந்த புகைப்படத்தை பகிர்ந்து கருத்துக்களையும் வெளியிட அது ரிஷப் பண்ட்டை மட்டுமல்லாது ‘போனி பெய்ன்’ யும் உலகெங்கும் பிரபலமாக்கியது.
பிரபலங்கள் பலரும் தங்களது புகைப்படங்களை பகிர்ந்து கொள்ளும் ‘இன்ஸ்டாகிராம்’ சமூக வலைதளத்தில் போனி பெய்ன்-ஐ சுமார் 5000 பேர் மட்டுமே பின்தொடர்ந்தனர். ஆனால் இந்த வைரல் புகைப்படத்திற்கு பிறகு அவரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை சுமார் 36000 ஆக உயர்ந்துள்ளது.

இதுகுறித்து ‘இன்ஸ்டாகிராம்’ தளத்தில் ரசிகர் ஒருவர் இந்த ஃபாலோயர் எண்ணிக்கை அதிகரித்தது குறித்து கேள்வி எழுப்ப அதற்கு போனிபைன் “இதற்கு காரணம் ரிஷப் பண்ட் இன் ரசிகர்கள் மட்டுமே” என பதிலளித்துள்ளார். இந்த பதிவும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

களத்தில் நடைபெறும் வார்த்தை மோதல்களிலும், அணிக்காக ரன்கள் குவிப்பதிலும் ரிஷப்பண்ட்-ன் கையே ஓங்கி உள்ளது. தற்போது சிட்னியில் நடைபெற்று வரும் நான்காவது டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட் ஆட்டமிழக்காமல் அபாரசதம் அடித்து, ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் போட்டியில் சதமடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற சிறப்பைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது . அதுமட்டுமல்லாமல் ஆஸ்திரேலிய மண்ணில் சதமடித்த முதல் ஆசிய விக்கெட் கீப்பர் என்ற சாதனைக்கும் சொந்தக்காரர் ஆனார் ரிஷாப் பண்ட். ஆஸ்திரேலிய மண்ணில் அதிக ரன்கள் அடித்த விக்கெட் கீப்பர்களில் இரண்டாம் இடம் வகிக்கிறார் இவர். இந்த தொடரில் அவர் 20 கேட்ச்கள் மற்றும் 250+ ரன்கள் குவித்து சாதனை படைத்தார்.