உலகக் கோப்பையில் இந்திய அணியின் கிங் மேக்கர்கள் ஆல் ரவுண்டர்களே

இந்திய அணியின் ஆல் ரவுண்டர்கள் விஜய் சங்கர், கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா
இந்திய அணியின் ஆல் ரவுண்டர்கள் விஜய் சங்கர், கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா

உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் வரும் 30ஆம் தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. இந்த தொடருக்கான இந்திய அணி உட்பட அனைத்து அணிகளும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டன. கிட்டத்தட்ட அனைத்து அணிகளும் இங்கிலாந்து சென்று விட்டனர். இந்த உலக கோப்பை தொடரில் போட்டியை மாற்றும் அளவிற்கு முக்கிய பங்களிக்கும் நபர்களாக இருப்பவர்கள் ஆல் ரவுண்டர்கள் தான். அவர்களின் செயல்பாட்டை பொருத்தே அணிகளின் வெற்றி தோல்வி தீர்மானிக்கப்படும். இந்த உலகக் கோப்பையின் கிங் மேக்கர்கள் ஆல் ரவுண்டர்கள் தான். அனைத்து அணிகளிலும் சிறந்த ஆல்ரவுண்டர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்திய அணியின் ஆல் ரவுண்டர்கள் குறித்த தொகுப்பை காணலாம்.

ஹர்திக் பாண்டியா

இந்திய அணியை பொருத்த வரை ஹர்திக் பாண்டியா அனைத்து நாடுகளுக்கும் சிம்ம சொப்பனமாக வலம் வருகிறார். இளம் வீரரான இவர் பந்து வீச்சு, பேட்டிங் என இரண்டிலும் சிறப்பாக விளையாடுகிறார். விக்கெட் விழாத நேரத்தில் எதிர் அணியில் விக்கெட் கைப்பற்றி இந்திய அணிக்கு பக்க பலமாக உள்ளார். பேட்டிங்கை பொறுத்தவரை விக்கெட்டுகள் விழுந்திருக்கும் நேரத்தில் அதிரடியை காட்டுவதால் இவரால் சில போட்டிகள் வெற்றி பெற்றுக் கொள்ளலாம் என கணிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய ஃபார்ம் இவருக்கு கூடுதல் பலமாக அமையும்.

கேதர் ஜாதவ்

பாண்டியாவிற்கு அடுத்து கேதர் ஜாதவ் இந்தியாவிற்கு கூடுதல் பலமாக உள்ளார். பேட்டிங்கில் இவரது பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. விக்கெட்டை இழக்காமல் நிலைத்து ஆடும் திறன் கொண்டவராக கேதர் ஜாதவ் உள்ளார். அதிரடியாக ஆடி வேகமாக ரன் அடிக்கும் திறனும் கொண்டவர். பந்து வீச்சை பொருத்தவரை இவருடைய ஆ ஃப் ஸ்பின் கணித்து ஆடுவது சற்று கடினமே. இவருடைய பந்து வீச்சில் ரீலிஸ் பாயிண்ட் தான் இவருக்கான சிறப்பு. பகுதி நேர பந்து வீச்சாளர் என்றாலும் இக்கட்டான நேரத்தில் பல விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

ரவீந்திர ஜடேஜா

இந்திய அணியில் இடம் பெற்றுள்ள மற்ற இரண்டு ஆல் ரவுண்டர்கள் ரவீந்த்ர ஜடேஜா மற்றும் விஜய் சங்கர். ஜடேஜாவை பொருத்தவரை அவருக்கு இது இரண்டாவது உலகக் கோப்பை தொடர், இம்முறை இவர் பந்து வீச்சு ஆல் ரவுண்டராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இடது கை சுழற் பந்து வீச்சாளரான இவர் தேவைப்படும் போது விக்கெட்களையும், எதிரணியின் ரன் ரேட்டை கட்டுப் படுத்தும் எகானமி பந்து வீச்சாளராகவும் இருக்கிறார். பேட்டிங்கை பொருத்தவரை விக்கெட்கள் விழும் பட்சத்தில் அணியை காப்பாற்றி பொறுப்புடன் விளையாட வேண்டிய பொறுப்பு உள்ளது.

விஜய் சங்கர்

பத்து போட்டிகளில் கூட இந்திய அணிக்காக விளையாடாத விஜய் ஷங்கர் உலக கோப்பையில் இடம் பிடித்தது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. இருப்பினும் அவரும் உலகக் கோப்பை ரேசில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரை இந்திய அணியில் பேட்டிங் ஆல் ரவுண்டராக தேர்வு செய்துள்ளனர். பேட்டிங்கில் அவருடைய பங்களிப்பை பார்த்திருந்தாலும். பந்து வீச்சில் இன்னும் பெரிய அளவில் சோபிக்க வில்லை, அதற்கான வாய்ப்பும் கிடைக்க வில்லை. உள்ளூர் போட்டிகள் மற்றும் ஐபிஎல் ஆட்டத்திறன் அடிப்படையில் தேர்வாகியுள்ளார். இவர் பீல்டிங்கிலும் அசத்துவார் என்பது குறிப்பிடதக்கது. இவரை பற்றி பலருக்கு தெரிந்திருக்காத காரணத்தால் இவரை இந்திய தனது துருப்புச் சீட்டாக பயன் படுத்தலாம்.

Quick Links

Edited by Fambeat Tamil
App download animated image Get the free App now