இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான அம்பத்தி ராயுடு சமீப காலங்களில் இந்திய அணியில் முக்கிய வீரராக திகழ்ந்தார். ஆனால் கடைசியாக ஒருசில போட்டிகளில் இவரின் சொதப்பலான ஆட்டத்தால் உலகக்கோப்பை அணியில் இவருக்கு இடம் கிடைக்கவில்லை. காயம் காரணமாக சில வீரர்கள் அணியிலிருந்து விலகியும் இவரை அணியில் சேர்ப்பதில் இந்திய அணி நிர்வாகம் ஆர்வம் காட்டவில்லை. இந்நிலையில் சர்வதேச போட்டிகளில் இனி தான் விளையாடப் போவதில்லை என இன்று தனது ஓய்வினை அறிவித்தார் ராயுடு . இது குறித்து இந்த தொகுப்பில் விரிவாக காண்போம்.
அம்பத்தி ராயுடு 2004 ஆம் ஆண்டிலேயே இந்திய அணியின் யு-19 உலகக்கோப்பை அணியின் கேப்டனாக செயல்பட்டார். அந்த தொடருக்கு பின் அந்த அணியில் விளையாடிய வீரர்கள் அனைவரும் இந்திய அணியில் அறிமுகமாக துவங்கினர். இவர் ரஞ்சி தொடரில் ஹைதராபாத் மற்றும் பரோடா அணிக்காக சிறப்பாக விளையாடி இந்திய அணி நிர்வாகத்தின் கவனத்தை ஈர்த்தார். இதன் மூலமாக இவருக்கு 2007 ஆம் ஆண்டு ICL தொடரில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. இதன் மூலம் வெளிநாட்டு வீரர்களுடன் இணைந்து அவர் அந்த தொடரில் விளையாடினார். ஆனால் அதுவே ஆரம்பத்தில் அவருக்கு வினையாக அமைந்தது. பிசிசிஐ-யிடம் அனுமதி பெறாமல் அந்த தொடரில் ராயுடு விளையாடியதன் மூலம் அவரை ஒரு ஆண்டு பிசிசிஐ தடை செய்தது.
அந்த தடை முடிந்த பின் 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாட துவங்கினார் இவர். அதன் பின் 2013 ஆம் ஆண்டு ஜிம்பாவே அணிக்கெதிரான தொடரின் மூலம் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அறிமுகமானார் இவர். பின் பல போட்டிகளில் விளையாடிய ராயுடு 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை அணியிலும் இடம்பெற்றார்.
ஆனால் மோசமான ஆட்டத்தினால் இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்ட இவர் கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அதிரடியாக விளையாடி அசத்தினார். இதன் மூலம் இவருக்கு மீண்டும் இந்திய அணியில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. அப்போது இந்திய அணி நான்காம் இடத்திற்கான சரியான வீரர் இல்லாமல் தவித்து வந்தது. அந்த இடத்தில களமிறக்கப்பட்ட இவர் சதத்தினை விளாசி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
அதன் பின் நடைபெற்ற அனைத்து போட்டிகளிலும் இவரையே நான்காம் இடத்தில இந்திய அணி விளையாட வைத்தது. ஆனால் கடைசியாக நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கெதிரான தொடரில் இவர் சரியாக விளையாடாததால் இவருக்கு பதிலாக இந்திய அணி நிர்வாகம் விஜய் ஷங்கரை அணியில் சேர்த்தது.
அதற்கு விஜய் ஷங்கர் பேட்டிங், பௌலிங் மற்றும் பீல்டிங் என மூன்றிலும் அசத்துவதாலே அவரை அம்பத்தியு ராயுடுக்கு பதிலாக அணியில் சேர்த்துள்ளோம் என தேர்வுக்குழு தலைவர் தெரிவித்தார். இதனை கலாய்க்கும் விதமாக ராயுடு, நான் இந்த உலகக்கோப்பை தொடரை 3டி கண்ணாடி அணிந்து தான் பார்க்கப்போகிறேன் என ட்விட்டரில் பதிவிட்டார். இது மிகவும் வைரலானது.
உலகக்கோப்பை துவங்கியபோது அணியில் மாற்று வீரர்களாக இவரும் ரிஷாப் பந்த் இடம் பெற்றிருந்தனர். அதாவது அணியில் எதாவது வீரர் காயமாகி வெளியேறும் போது இவர்கள் அணியில் சேர்க்கப்படுவர். அந்த வகையில் முதலில் ஷிகர் தவான் காயம் காரணமாக விலக, அவருக்கு பதிலாக பந்த் அணியில் சேர்க்கப்பட்டார்.
அதனை தொடர்ந்து சமீபத்தில் விஜய் ஷங்கரும் காயம் காரணமாக உலகக்கோப்பை தொடரிலிருந்து விலக அவருக்கு பதிலாக இந்திய அணி நிர்வாகம் இது வரை ஒரு சர்வதேச ஒருநாள் போட்டி கூட விளையாடாத மயங்க் அகர்வாலை தேர்வு செய்தது. இதனால் சமூகவலைத்தளங்களில் ரசிகர்கள் இப்போதும் அணியில் ராயுடுவை சேர்க்கவில்லை என கலாய்த்து வந்தனர். இறுதியில் இதன் பின்பும் தமக்கு அணியில் வாய்ப்பு கிடைக்க போவதில்லை என்பதை உணர்ந்த இவர் இன்று சர்வதேச போட்டிகளிலிருந்து தனது ஓய்வை அறிவித்தார்.
இவர் 2015 உலகக்கோப்பை தொடரிலும் ஒரு போட்டியில் கூட களமிறக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. கடைசிவரை இவரின் உலகக்கோப்பை கனவு நிறைவேறாமலே கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ளா ராயுடு.