டெஸ்ட்-க்கு ரெஸ்ட்!!!  அடுத்த டார்கெட் இங்கிலாந்து....  அமீரின் பக்கா ப்ளான்

Mohammad Amir
Mohammad Amir

இங்கிலாந்து அணி தற்போது உலகக்கோப்பையை கைப்பற்றி அசத்தியது. இருந்தாலும் அன்றைய போட்டியை பொறுத்தவரையில் ரசிகர்களின் மனதளவில் அந்த போட்டியை வென்றது நியூஸிலாந்து அணி தான். அது ஒருபுறம் இருக்கட்டும். இங்கிலாந்து அணியின் உலகக்கோப்பை அணியில் இருந்த பாதி வீரர்கள் மற்ற நாடுகளையே பூர்வீகமாக கொண்டவர்கள். அணியின் கேப்டன் மோர்கனில் துவங்கி பென் ஸ்டோக்ஸ் வரை பல முக்கிய வீரர்கள் இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர்களே கிடையாது என்பது அனைவருக்கும் தெரியும். சமீபத்தில் அந்த அணியில் இணைந்து உலகக்கோப்பையில் கலக்கியவர் ஜோப்ரா ஆர்ச்சர். இவர் மேற்கிந்திய தீவுகளை பூர்வீகமாக கொண்டவர் என்பதும் அவரை தங்களது அணியில் இணைக்க அந்த அணி பட்ட இன்னல்கள் அனைத்தும் கிரிக்கெட் ரசிகர்களும் அறிந்ததே.

இந்நிலையில் சமீபத்தில் டெஸ்ட் போட்டிகளிலிருந்து தனது ஓய்வினை அறிவித்து ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி கொடுத்தவர் முகமது அமீர். இவருக்கு வெறும் 27 வயதே ஆவது குறிப்பிடத்தக்கது. இந்த இளம்வயதில் டெஸ்ட் போட்டிகளில் இவர் ஓய்வினை அறிவித்து மிகவும் வைரல் ஆனார். இதற்க்கு முன் இவர் டெஸ்ட் போட்டியில் பிக்சிங்-ல் ஈடுபட்டு 5 ஆண்டுகள் விளையாட தடை செய்யப்பட்டிருந்தார். எனவே இவரால் அந்த அளவுக்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இருந்தாலும் ஒருநாள் போட்டிகளில் பாக்கிஸ்தான் அணியின் முன்னணி பந்துவீச்சாளராக விளங்கிவருகிறார். தற்போது நடந்துமுடிந்த உலகக்கோப்பை தொடரில் கூட பாகிஸ்தான் அணி சார்பாக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரரும் இவரே.

இவர் கடந்த இரண்டாண்டுகளுக்கு முன்பே அதாவது 2017-ல் டெஸ்ட் போட்டிகளில் ஓய்வினை அறிவிப்பதாக இருந்துள்ளார். ஆனால் அந்த அணியின் பயிற்சியாளரான மிக்கி ஆர்த்தர் அமீரிடம் பேசி அவரின் மனதை மாற்றி அணியில் நீடிக்க வைத்துள்ளார். அதுமட்டுமின்றி அந்தாண்டு சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் இவரின் பந்துவீச்சு அபாரமாக இருந்ததால் இவர் அப்போது கண்டிப்பாக அணிக்கு தேவை எனவும் கூறியுள்ளார். இதன் படி அமீரும் தனது ஓய்வு பெறும் எண்ணத்தை மாற்றியுள்ளார். பாகிஸ்தான் அணியில் வாசிம் அக்ரம்-க்கு பின் தலைசிறந்த இடது கை வேகப்பந்து வீச்சாளராக கருதப்படுபவரும் இவரே.

Mohammad Amir
Mohammad Amir

ஆனால் சமீபத்தில் மீண்டும் ஓய்வினை அறிவிக்க ஆர்வம் காட்டிய இவரின் கருத்துக்கு பயிற்ச்சியாளர் குறுக்கே நிற்கவில்லை. இதன் விளைவாக அமீரும் அதிகாரப்பூர்வமாக டெஸ்ட் போட்டிகளில் தனது ஓய்வினை அறிவித்தார். இவரின் இந்த முடிவுக்கு பாகிஸ்தான் அணியின் ஜாம்பவான்களான வாசிம் அக்ரம் மற்றும் சோயிப் அக்தர் இருவரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த வயது ஒன்றும் அவருக்கு ஓய்வு பெறும் வயது இல்லை. அமீர் மிகவும் அவசரப்பட்டு விட்டார் என தெரிவித்தனர். இருந்தாலும் அமீரின் ஆதரவாளர்கள் சிலர் மலிங்காவைப் போல லிமிடெட் ஓவர் போட்டிகளில் அதிக கவனம் செலுத்தவே அமீர் இந்த முடிவை எடுத்ததாவும் தகவல்களை வேளியிட்டனர்.

இந்த நிலையில் இவர் 2016 ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்துகொண்டார். இதனால் இவருக்கு இங்கிலாந்து நாட்டில் 30 மாதங்கள் வசிக்க அனுமதி உண்டு. எனவே இதனை உணர்ந்தே இவர் டெஸ்ட் போட்டிகளில் ஓய்வினை அறிவித்ததாகவும், விரைவில் இங்கிலாந்து நாட்டில் குடியேற ஏற்பாடுகளும் செய்துவருதாகவும் நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகியுள்ளன . இதன் மூலம் இவரும் ஆர்ச்சரை போல இங்கிலாந்து அணியில் இணைவாரா என ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர்.

Edited by Fambeat Tamil