தங்களது நாட்டில் நடைபெற்ற தொடருக்கு பின்னர், தென் ஆப்பிரிக்க அணியின் தேர்வுக்குழுவினர் உலக கோப்பை தொடருக்கான அணியை வெளியிட்டுள்ளனர். இந்த அணியில் சில ஆச்சரியங்கள் அடங்கியுள்ளன. அவற்றில் குறிப்பிடத்தக்கது, ஆட்டத்தின் துவக்க வீரராக குயின்டன் டி காக் உடன் களமிறங்க போகும் வீரர் யார் என்பதுதான். அனுபவம் மிகுந்த ஹாஷிம் அம்லாவா அல்லது திறமை வாய்ந்த எய்டன் மார்க்கரம்மா என்ற கேள்வி சற்று நீடித்து வருகிறது. துவக்க ஆட்டக்காரராக களமிறங்கும் வீரரின் பங்கு எந்த ஒரு அணிக்கும் முக்கியமானது தான். ஏனெனில், இவர்கள் சிறப்பாக செயல்பட்டு ரன்களை குவித்தால் மட்டுமே ஒரு கௌரவமான ஸ்கோரை இந்த அணி சுலபமாக எட்ட முடியும். இது அமலா மற்றும் எய்டன் மார்க்கரம்மை தற்போது சார்ந்துள்ளது.
இதுவரை 174 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள ஹசிம் அம்லா, 7910 ரன்களை குவித்துள்ளார். மேலும், இவரது பேட்டிங் சராசரி 49.74 என்ற வகையில் அற்புதமாக உள்ளது. ஒருநாள் போட்டியில் இவர் 27 சதங்களை குவித்துள்ளார். 36 வயதான இவர், தென் ஆப்பிரிக்க அணியின் பேட்டிங்கில் முக்கிய தூணாக விளங்கி வருகிறார். மேலும் இவரது ஆட்டம் அணி மிகப் பெரிய ஸ்கோரை குவிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும். அசாத்தியமாக மிட்விக்கெட் திசையில் பவுண்டரி அடிக்கும் திறன் பெற்றிருக்கிறார். இவரது பலமான திறமையே தற்போது பலமற்றதாக மாற்றியுள்ளது. கடந்து 2018 ஆம் ஆண்டில் அடிக்கடி எல்பிடபிள்யூ மூலம் பல ஆட்டங்களில் ஆட்டமிழந்துள்ளார். கடந்த ஆண்டில் 11 போட்டிகளில் விளையாடி வெறும் 315 ரன்கள் மட்டுமே குவித்துள்ளார். மேலும், இவரது கடந்த ஆண்டின் சராசரி 28.6 என்ற வகையில் மோசமாக அமைந்தது. அப்படியே 2019ம் ஆண்டில் வந்து பார்த்தால், மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெற்ற "டி20 சேலஞ்ச்' எனப்படும் உள்ளூர் தொடரில் கோப்ரா அணியில் இடம்பெற்றிருந்தார். இதன்மூலம் உலக கோப்பை தொடரின் பார்முக்கு திரும்புவார் என்ற நம்பிக்கை ரசிகர்களுக்கு இருந்தது. ஆனால் அந்தத் தொடரின் 8 போட்டியில் விளையாடி 92 ரன்கள் மட்டுமே குவித்தார். எனவே, இங்கிலாந்து மைதானங்களில் இவரின் ஆட்டம் எடுபடுமா என்பதில் சற்று கேள்வி எழுந்துள்ளது.
மற்றொரு வீரரான எய்டன் மார்க்கரம், எத்தகைய சூழ்நிலையிலும் உணர்ந்து சிறப்பாக விளையாடக்கூடிய வீரராவார். இதுவரை வெறும் 18 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே தென் ஆப்பிரிக்கா அணிக்காக இவர் விளையாடி உள்ளார். கடந்த சில மாதங்களாக இவரின் சர்வதேச செயல்பாடுகள் திருப்திகரமாக அமையவில்லை. கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இவர் போதிய ஆட்டத்திறனை நிரூபிக்க தவறினார். 24 வயதான இவர், உள்ளூர் போட்டிகளில் மற்றும் இங்கிலாந்தின் கவுண்டி கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி நம்பிக்கை அளித்துள்ளார். "மொமென்ட்டம் ஒன் டே கப்" தொடரில் ஐந்து இன்னிங்சில் விளையாடி 542 ரன்களை குவித்து ஆச்சரியப்படுத்தினார். ஹேம்ஸ்ஃபைர் அணிக்காக 10 போட்டிகளில் விளையாடி ஒரு சதம் உட்பட நான்கு அரைச்சதங்களையும் குவித்தார். எனவே அணியில் ஹாஷிம் அம்லாவை நம்பி இருக்கும் வேளையில் இளம் வீரர்களுக்கும் வாய்ப்பளிக்கலாம் என்பது ஒட்டுமொத்த ரசிகர்களின் விருப்பம் ஆகும். ஏற்கனவே, அணியில் இடம்பெற்ற அனுபவ வீரர்களான டுபிளிசிஸ், டுமினி, டேவிட் மில்லர் இம்ரான் தாஹிர், டேல் ஸ்டெயின் போன்றோர் உள்ளதால் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.