சுரேஷ் ரெய்னாவிற்கு தோனி ரசிகரின் கடிதம்

Suresh Raina
Suresh Raina

டியர் சுரேஷ் ரெய்னா,

கைக்கு வந்த கேட்ச்சை கோட்டை விட்டது, தட்டு தடுமாறி 14 பந்துகளில் 8 ரன்கள் அடித்தது, இருந்த ஒரே ஒரு DRS ரீவீவையும் வீணாக்கியது; இது தான் ஐபிஎல் இறுதிப் போட்டியில் உங்களின் பங்களிப்பு. இதற்காக உங்களை பலரும் விமர்சித்து வருகிறார்கள். ஆனால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் முதுகெலும்பே நீங்கள் தான் என்பதை அவர்கள் உணரவில்லை.

கடந்த பத்து சீசன்களாக சென்னை அணிக்காக நீங்கள் கடுமையாக உழைத்துள்ளீர்கள். களத்தில் நீங்கள் காண்பித்த உற்சாகத்தை என்றும் எங்களால் மறக்க முடியாது. என்னைப் பொருத்தவரை உங்களின் ஒரே தவறு – அதற்கு நீங்கள் ஒன்றும் செய்ய முடியாது என்பது வேறு விஷயம் – “எதை தொட்டாலும் பொன்னாகும்” தோனியின் தலைமையில் விளையாடியது தான்.

ஏனென்றால், ரசிகர்களை தன் கைக்குள் வைத்துள்ளார் தோனி. சென்னை ரசிகர்கள் தோனியை கடவுளுக்கு நிகராக போற்றுகிறார்கள். தனது அற்புதமான பினிஷிங் டச்சால் ஒட்டுமொத்த அரங்கத்தையே வசீகரிக்கும் தோனி, போட்டியில் தன்னை தவிர்த்து 21 வீரர்கள் இருக்கிறார்கள் என்பதையே மறக்கடித்து விடுகிறார். ஒட்டொமொத்த விசில் போடு ஆர்மியும் தோனியின் ஆட்டத்திற்காக காத்திருக்க, நீங்கள் அமைதியாக நின்று அணிக்கு தேவையானவற்றை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். இந்த தன்னம்பிக்கையும் மன தைரியமும் தான் உங்களை சென்னை அணியில் மிக உயரத்திற்கு கொண்டு சென்றுள்ளது.

Dhoni and Raina
Dhoni and Raina

மொத்த ரசிகர் கூட்டமும் தோனியின் பேட்டிங் திறமையில் லயித்திருக்க, நீங்கள் உங்கள் பங்கிற்கு கடும் உழைப்பையும் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்துவீர்கள். உங்களுக்கு வெற்றியும் புகழும் உடனடியாக கிடைக்கவில்லை என்பது எங்களுக்கு நன்றாக தெரியும். உங்களையும் தோனியையும் இணைத்து பேசும் போது, பல நினைவுகள் என் மனதில் தோன்றுகின்றன. என்னைப் போன்ற சென்னை அணியின் தீவிர ரசிகர்களுக்கு நீங்களும் தோனியும் பல சுவையான, மறக்க முடியாத நினைவுகளை அளித்துள்ளீர்கள்.

2010-ம் ஆண்டு. ஐபிஎல் இறுதிப் போட்டி. மும்பையை அதன் சொந்த மைதானத்தில் எதிர்கொள்கிறது சென்னை அணி. அந்த சமயத்தில் உங்கள் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. நீங்கள் அந்த எதிர்பார்ப்பை ஏமாற்றவில்லை. அந்தப் போட்டியில் 12 ஓவர்களுக்கு 67/3 என்ற இக்கட்டான நிலையில் அணி இருந்த போது, நீங்களும் தோனியும் மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சாளர்களை பொறுமையாக கையாண்டு 72 ரன்கள் பார்டனர்ஷிப் சேர்த்தனர். கடைசி வரை ஆட்டமிழக்காமல், 35 பந்துகளில் நீங்கள் எடுத்த 57 ரன்கள் விலை மதிப்பற்றவை.

அன்று போட்டியில் வெற்றி பெற்று முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ். நீங்களும் தோனியும் சேர்ந்து களத்தில் பேட்டிங் பிடித்தால் எந்த ஒரு பந்துவீச்சாளர்களுக்கும் நடுக்கம் ஏற்படும். இதே பார்ட்னர்ஷிப்பை பல சர்வதேச போட்டிகளில் இந்திய அணிக்காக நீங்கள் இருவரும் படைத்துள்ளீர்கள்.

இந்திய அணியில் உங்கள் இடம் கேள்விக்குறியான போது, உங்கள் திறமையை காண்பிக்க கூடிய ஒரே இடமாக ஐபிஎல் மடுமே திகழ்ந்தது. ரசிகர்களை நீங்கள் ஒருபோதும் ஏமாற்றியதில்லை. சென்னை அணிக்காக ஒவ்வொரு சீசனிலும் 400-க்கு குறையாமல் ரன்கள் அடித்தீர்கள். இந்த சாதனையை நினைத்து நாங்கள் நிச்சியம் பெருமிதம் அடைவோம்.

Suresh Raina
Suresh Raina

T20 போட்டியில் மூன்றாவது வீரராக களம் இறங்குவது அவ்வுளவு எளிதான விஷயம் அல்ல. ஆட்டத்தின் முதல் பந்திலிருந்தே தயாராக இருக்க வேண்டும். தொடக்க வரிசை பேட்ஸ்மேன்கள் சரியாக ரன்களை சேர்க்கவில்லை என்றாலோ நிறைய பந்துகளை வீணடித்தாலோ, அந்த அழுத்தம் முழுவதும் உங்கள் மீதே விழும். அணியை இக்கட்டிலிருந்து காப்பாற்ற சந்தோஷமக அதை நீங்கள் ஏற்று கொள்வீர்கள்.

ஒரு புறம் விக்கெட்டையும் காப்பாற்றிக் கொண்டு, அதே சமயத்தில் ரன்களை அடிக்க வேண்டிய முக்கியமான பணி ஒன்-டவுன் பேட்ஸ்மனுடையது. ஒவ்வொரு சீசனிலும் இதை கச்சிதமாக செய்து சென்னை அணிக்காக பல மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ்களை நீங்கள் விளையாடியுள்ளீர்கள். ஆனால், இன்று ஒரே ஒரு சீசனில் மோசமாக விளையாடியதால், பலரும் உங்களை மோசமாக விமர்சிக்கிறார்கள். அவர்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளட்டும். அதைப் பற்றி எனக்கு கவலையில்லை. அடுத்த சீசனிலும் சென்னை அணியில் நீங்கள் தக்கவைக்கப்படுவீர்கள் என தோனியின் மீதும் அணி நிர்வாகத்தின் மீதும் எனக்கு நம்பிக்கை உள்ளது.

தோனி, சென்னையின் தத்துப் பிள்ளை என்றால், சென்னை அணியின் “சூப்பர் கிங்” நீங்கள் தான். இந்த சமயத்தில் உங்களுக்கு நான் கூறு விரும்பது, வேறு எதையும் யோசிக்காமல் சந்தோஷமாக உலக கோப்பையில் இந்தியா விளையாடுவதை கண்டு களியுங்கள்.

உங்கள் எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

இப்படிக்கு

தோனியின் தீவிர ரசிகன்

Quick Links

Edited by Fambeat Tamil