மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் பாக்ஸிங் தின டெஸ்ட் போட்டிகளைப் பற்றி ஒரு பார்வை.
கிறிஸ்துமஸ் உலகம் முழுவதும் கொண்டாடப்படும் விழா, இந்த விழா நாட்களில் கிரிக்கெட் ரசிகர்களுக்கு முதலாவதாக நினைவிற்கு வருவது பாக்ஸிங் தின டெஸ்ட் போட்டியாகும். பாக்ஸிங் தினம் என்பது கிறிஸ்துமஸ் நாளான 25ஆம் தேதிக்கு அடுத்த நாள் பெரும்பாலான நாடுகளில் கொண்டாடப்பட்டு வருகின்றன. இந்நாளில் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் டெஸ்ட் போட்டிகள் நடப்பது வழக்கம். இந்த டெஸ்ட் போட்டிகளுக்கும் பாக்ஸிங் தினத்திற்க்குமான வரலாற்றைப் பற்றி இங்கு பார்க்கலாம்.
மெல்போர்ன் கிரிக்கெட் மைதானமானது ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய மைதானமாகும், உலகளவில் 10 ஆவது பெரிய மைதானமாக உள்ளது. இருக்கை திறன் அடிப்படையில் உலகின் பெரிய கிரிக்கெட் மைதானமாகும் MCG. உலகின் மற்ற விளையாட்டு மைதானத்தைவிட உயரமான ஒளி விளக்குகளையும் இந்த மைதானமே கொண்டுள்ளது. 1853 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இம்மைதானத்தில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையே முதல் டெஸ்ட் போட்டி 1877 ஆம் ஆண்டு நடைபெற்றன, முதல் ஒருநாள் போட்டியும் இவ்விரண்டு அணிகளுக்கிடையே 1971 ஆம் ஆண்டு நடைபெற்றன.
ஆஸ்திரேலியா உள்ளூர் போட்டிகளான ஷில்டில் விக்டோரியா மற்றும் நியூ சவுத் வேல்ஸ் அணிகளுக்கிடையேயான டெஸ்ட் போட்டி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் 1892 ஆம் ஆண்டு நடைபெற்றன. இப்போட்டி கிறிஸ்துமஸ் நாட்களில் விளையாடப்பட்டன, இப்போட்டி பாக்ஸிங் தினத்தன்று ஆரம்பம் ஆகவில்லை எனினும் போட்டியின் காலம் பாக்ஸிங் தினத்தன்று வரை நீடிக்கும் என்பதால் விளையாட்டு வீரர்கள் தங்களது குடும்பத்துடன் நேரத்தைச் செலவிட முடியாமல் வருந்தினார்கள்.
மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் முதல் பாக்ஸிங் தின டெஸ்ட் போட்டியானது 1950 ஆம் ஆண்டு நடைபெற்றது. ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையே நடைபெற்ற ஆஷஸ் தொடரில் இப்போட்டி டிசம்பர் 22 முதல் டிசம்பர் 27 ஆம் தேதிவரை நடைபெற்றன. இதன்பின்பு 1953 முதல் 1967 வரை பாக்ஸிங் தின டெஸ்ட் போட்டியானது இம்மைதானதில் நடைபெறவில்லை. 1974-1975 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற 6 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரின் மூன்றாவது போட்டியானது மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் பாக்ஸிங் தினத்தன்று நடைபெற்றன, இறுதியில் இப்போட்டி டிராவில் முடிந்தது.
1975 ஆம் ஆண்டில் நடைபெற்ற பாக்ஸிங் தின போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணி பங்கேற்றன. இப்போட்டியை காண மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் 86,000 ரசிகர்கள் திரண்டனர். மேற்கிந்திய தீவுகள் அணியே வெற்றி பெறும் எனப் பெரிதும் எதிர்பார்க்க பட்டன, மே.தீவுகள் அணிக்கு கிளைவ் லாயிட் கேப்டனாகச் செயல்பட்டார், இவரது அணியே முதலில் பேட் செய்தது. ஜெஃப் தாம்சன் மற்றும் டென்னிஸ் லில்லி தனது பந்துவீச்சில் மே.தீ அணியைச் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க செய்தனர். பின்பு பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி சாப்பெல் மற்றும் ரெட்பாத் சத்ததின் உதவியுடன் 485 ரன்கள் சேர்த்தன. தாம்சன் மற்றும் லில்லி அசத்தலான பந்துவீச்சின் மூலம் மே.தீவுகள் அணி பின்னடைவை சந்தித்தாலும் லாயிடின் சதம்மூலம் 312 ரன்களை சேர்த்து ஆஸ்திரேலியா அணிக்கு 52 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. பின்பு ஆஸ்திரேலியா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றன. ஆஸ்திரேலியா அணி அந்தத் தொடரையும் 5-1 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்றன. இதன் காரணமாகவே தொடர்ந்து இன்றளவிலும் பாக்ஸிங் தின போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
1980 ஆம் ஆண்டு மெல்போர்ன் கிரிக்கெட் சங்கம் மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் ஆண்டுதோறும் பாக்ஸின் தின டெஸ்ட் போட்டிகளை நடத்த அனுமதி பெற்றன. கிரிக்கெட் ரசிகர்களின் வருகை மற்ற போட்டிகளைவிட இப்போடிக்கு அதிகமாக இருப்பதால் சங்க நிர்வாகிகள் இப்போட்டிகளை ஆண்டுதோறும் நடத்த முயன்றனர். 1980 ஆம் ஆண்டிற்க்கு பின்பு அனைத்து வருடமும் பாக்ஸிங் தின டெஸ்ட் போட்டியை நடத்தி வருகின்றனர், இடையில் 1989 ஆண்டு மட்டும் ஒருநாள் போட்டி நடைபெற்றன.
தற்பொழுது இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான 3-வது டெஸ்ட் போட்டி பாக்ஸிங் தின போட்டியாக நடைபெறவுள்ளன.