உலகம் முழுவதும் கொண்டாடப்படும் பண்டிகைகளில் குறிப்பிடப்பட வேண்டியது கிறிஸ்துமஸ் பண்டிகையே ஆகும். வெளிநாடுகளில் இந்த பண்டிகையை ஒரு வாரம் முழுக்க புத்தாண்டு வரை கொண்டாடி மகிழ்வர். அதில் கிறிஸ்துமஸ் நாளான 25-ம் தேதிக்கு அடுத்தநாள் டிசம்'26-ரை பாக்ஸிங் டே என அழைப்பது வழக்கம். அந்நாளில் கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் விதத்தில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூஸிலாந்து ஆகிய நாடுகளில் எதாவது ஒரு அணி வருடா வருடம் டெஸ்ட் போட்டியில் பங்கேற்பது வழக்கம். அப்படி சிறப்பு மிக்க டெஸ்ட் போட்டிகளை பற்றி ஒரு அலசல்.
நியூஸிலாந்து vs இலங்கை :
இலங்கை அணி நியூஸிலாந்திற்கு சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி மற்றும் 1 டி20 போட்டிகளில் பங்கேற்கிறது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி யாருக்கும் வெற்றி தோல்வியின்றி ட்ராவில் முடிந்தது. நாளை தொடங்கவிருக்கும் போட்டி கடைசி போட்டி என்பதால் இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும் என்பதில் சந்தேகமில்லை.
நியூஸிலாந்து தரப்பில் பேட்டிங் பௌலிங் என இரண்டிலும் சமபலத்துடன் உள்ளது. அந்த அணியின் நட்சத்திர ஆட்டக்காரர்களான டாம் லதம், கேன் வில்லியம்சன் மற்றும் ரோஸ் டெய்லர் ஆகியோர் பேட்டிங்கில் நன்கு ஒத்துழைப்பு கொடுக்க வல்லவர்கள். பௌலிங் பொருத்தவரை டிம் சௌதி மற்றும் ட்ரென்ட் போல்ட் வழக்கம் போல அசத்த காத்திருக்கின்றனர்.
இலங்கை அணியை பொருத்தவரை கடந்த போட்டியில் மாத்தியூஸ் மற்றும் குஷால் மெண்டிஸ் ஆகியோரின் சதத்தால் தோல்வியிலிருந்து தப்பிப்பிழைத்தது எனலாம். பௌலிங்கை பொருத்தவரை கொஞ்சம் சறுக்கல் தான். ஏற்கனவே சொந்த மண்ணில் இங்கிலாந்து அணியிடம் தோல்வி கண்ட இலங்கை அணி இதில் வென்று காட்ட முயலும் என நம்பலாம், ஆனால் அது பெரிய மலையேற்றத்துக்கு சமமாகும்.
இடம் : கிரிஸ்ட்சர்ச் , நியூஸிலாந்து.
நேரம் : அதிகாலை 3.30 IST.
ஆஸ்திரேலியா vs இந்தியா :
இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதும் இந்த தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டி "பாக்ஸிங் டே" டெஸ்டாக மெல்போர்ன் நகரில் நடக்கிறது. இதுவரை நடந்துமுடிந்த இரு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒருமுறை வென்றுள்ளன. நாளை முன்றாவது போட்டியில் வென்று முன்னிலை பெற வேண்டும் இரு அணிகளும் மல்லு கட்டுவதால் போட்டியில் சுவாரஸ்யத்திற்கு குறையிருக்காது.
இந்தியா அணியை பொருத்தவரை அணியில் பல மாற்றங்களை புகுத்தியுள்ளது. தொடக்க வீரர்களான ராகுல் மற்றும் விஜய் ஆகியோரை அதிரடியாக நீக்கியுள்ளது. மாயங்க் அகர்வால் நாளை முதன் முறையாக களமிறங்கவுள்ளார். மேலும் ரோஹித் மற்றும் ஜடேஜா ஆகியோர் அணியில் இணைந்துள்ளனர். பேட்டிங்கில் கோலி, புஜாரா, மற்றும் ரஹானே அப்படியே தொடர்கின்றனர். பௌலிங்கில் உமேஷ் யாதவ் மட்டும் நீக்கப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலியா அணியில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. பின்ச் மட்டும் காயம் காரணமாக அவதிப்படுகிறார். அவருக்கு மாற்றாக வேறேதும் வீரரை களமிறக்க வாய்ப்புள்ளது. பௌலிங் பொருத்தவரை நால்வர் கூட்டணி அப்படியே தொடர்கிறது.
இடம் : மெல்போர்ன், ஆஸ்திரேலியா.
நேரம் : அதிகாலை 5.30 IST.
தென் ஆப்பிரிக்கா vs பாகிஸ்தான்:
தென் ஆப்பிரிக்காவிலும் வருடா வருடம் "பாக்ஸிங் டே " டெஸ்ட் போட்டி நடத்தப்படுவது வழக்கம். இம்முறை அந்த அணி பாகிஸ்தானுடன் மோதுகிறது. இரு அணிகளும் மோதும் முதல் போட்டி இதுவே ஆகும்.
பாகிஸ்தான் அணியை பொருத்தமட்டில் நியூஸிலாந்து அணியுடனான அதிர்ச்சி தோல்வியினால் பல விமர்சனங்களை சந்தித்துள்ளது. எனவே அதற்க்கு பரிகாரம் தேட ஒரு வாய்ப்பாக இந்த தொடர் அமைந்துள்ளது எனலாம். அணியில் பேட்டிங் மற்றும் பௌலிங் என பலம்பொருந்திய அணியாகவே காட்சியளிக்கிறது. அசார் அலி , பாபர் அசாம் மற்றும் ஹாரிஸ் சோஹைல் ஆகியோர் உள்ளனர், அவர்களுக்கு பலமாக பௌலிங்கில் ஹசன் அலி, பாஹீம் அஸ்ரப் மற்றும் யாசிர் ஷா ஆகியோரும் உள்ளனர்.
தென் ஆப்பிரிக்கா அணியை பொருத்தமட்டில் பேட்டிங்கில் ஆம்லா,பாப் டுப்லெசிஸ் மற்றும் டீன் எல்கேர் அசத்த உள்ளனர். பௌலிங்கில் பிலேண்டர், ரபாடா மற்றும் நிகிடி ஆகியோர் அசுர பலம் கொண்டுள்ளனர்.
இரு அணிகளிலும் வேகப்பந்துவீச்சு பலமாக உள்ளதால் இந்த டெஸ்ட் போட்டியில் அனல் பறப்பது நிச்சயம். எனவே இந்த போட்டியில் வெற்றியாளரை கணிப்பது கடினமே.
இடம் : சென்சுரின், தென் ஆப்பிரிக்கா.
நேரம் : பகல் 1.30 IST.