டெஸ்ட் போட்டிகளில் ஒரு இன்னிங்சில் சதம் அடிப்பதே பல வீரர்களுக்கு கடினமாக இருக்கும் சூழ்நிலையில், ஒருவர் இரு இன்னிங்சிலும் ‘இரட்டை சதம்’ அடித்து அசத்தியுள்ளார். அதைப் பற்றிய தகவல்களை இங்கு காண்போம்.
இந்த அரிய சாதனை படைத்தவர் இலங்கை வீரர் ‘ஏஞ்சலோ பெரேரா’. 28 வயதான இவர் இலங்கையில் தற்போது நடைபெற்றுவரும் 4 நாள் உள்ளூர் போட்டியில் இந்த சாதனையை படைத்துள்ளார். ‘நோண்டிஸ்கிரிப்ட்ஸ் கிரிக்கெட் கிளப்’ (என்.சி.சி) அணிக்காக களம் கண்ட இவர், தனக்கு எதிராக விளையாடிய ‘சிங்களீஸ் ஸ்போர்ட்ஸ் கிளப்’ அணிக்கு எதிராக இந்த சாதனையை படைத்துள்ளார். ‘ஏஞ்சலோ பெரேரா’ நோண்டிஸ்கிரிப்ட்ஸ் அணியின் கேப்டன் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் தனது முதல் இன்னிங்சில் 203 பந்துகளை சந்தித்து 201 ரன்கள் குவித்தார். தனது இரண்டாவது இன்னிங்ஸில் தனது அணி 44 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி கொண்டிருக்கும் பொழுது உள்ளே நுழைந்தார். இவர் தன் வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்த இவருடன் இணைந்த சக வீரர் ‘பாதும் நிசான்கா’ 167 ரன்கள் சேர்க்க, ஏஞ்சலோ பெரேரா 268 பந்துகளை சந்தித்து 231 ரன்கள் குவித்து சாதனை படைத்தார்.
போட்டி நடைபெற்ற (எஸ்.எஸ்.சி) மைதானம் பேட்டிங்குக்கு மிகவும் சாதகமாக இருந்ததால் இரு அணிகளும் மாறி மாறி ரன்கள் குவிக்க இந்த போட்டி டிராவில் முடிந்தது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியின் குறைந்தபட்ச இன்னிங்ஸ் ஸ்கோர் 444 ரன்கள் ஆகும். இவர் இச்சாதனையை இலங்கைக்காக சர்வதேச போட்டிகளில் ஆடியுள்ள முன்னாள் பந்துவீச்சாளர்கள் ‘தமிகா பிரசாத், ‘சசித்ர செனநாயகே’ ஆகியோருக்கு எதிராக எடுத்துள்ளார்.
இதுபோன்ற ஒரு சாதனை கிரிக்கெட்டில் நடைபெறுவது இது முதல் முறை அல்ல. இதற்கு முன்பாக 1938-ஆம் ஆண்டு இங்கிலாந்து வீரர் ‘ஆர்தர் ஃபேக்’ கென்ட் அணிக்காக விளையாடி 244 மற்றும் 202* ரன்களை சசெக்ஸ் அணிக்கு எதிராக எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 81 ஆண்டுகளுக்கு பிறகு பெரேரா இச்சாதனையை மீண்டும் படைத்துள்ளார்.
சாதனை படைத்துள்ள ‘ஏஞ்சலோ பெரேரா’ சர்வதேச அளவில் இலங்கை அணிக்காக 4 ஒருநாள் போட்டிகளிலும், 2 டி-20 போட்டிகளில் விளையாடி உள்ளார். ஆனால் அவரின் சர்வதேச சாதனை சிறப்பானதாக அமையவில்லை. நான்கு ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று உள்ள இவர் வெறும் 8 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளார். மேலும் 2 டி-20 போட்டிகளில் விளையாடி 4 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.
ஆனால் இவர் சமீபகாலமாக உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்து வருகிறார். தற்போது நடைபெற்று வரும் ஒரு போட்டித் தொடரில் 2 இரட்டை சதங்களை அடித்த ஒரே வீரராக வலம் வருகிறார். மேலும் சமீபத்தில் நடந்த ‘அயர்லாந்து-ஏ’ அணிக்கு எதிரான போட்டி தொடரில் ‘இலங்கை-ஏ’ அணிக்காக பங்கேற்று சிறப்பாக ரன்கள் குவித்துள்ளார்.
சமீபத்தில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடந்த டெஸ்ட் தொடரில் இலங்கை அணி 2-0 என மோசமான தோல்வியை சந்தித்தது. எனவே இலங்கை அணியில் பல மாற்றங்கள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வரும் ஏஞ்சலோ பெரேராவுக்கு மீண்டும் சர்வதேச போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைக்கும் என நம்பலாம்.
செய்தி : விவேக் இராமச்சந்திரன்.