இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டி கடந்த ஜனவரி 12-ஆம் தேதி நடைபெற்றது. அதில் இந்திய அணி தோல்வியைத் தழுவியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்தத் தொடரின் இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று முன்தினம் அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 50 ஆவது ஓவரில் வெற்றியை பெற்றது. இந்த வெற்றிக்கு பின்னர் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் கூறியதைப் பற்றி இங்கு விரிவாக காண்போம்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிய 2வது ஒருநாள் போட்டி ஜனவரி 15ஆம் தேதி நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் பேட்டிங்கை தேர்வு செய்தார். 50 ஓவர்கள் முடிவில்9 விக்கெட் இழப்பிற்கு 298 ரன்கள் குவித்தது. சிறப்பாக விளையாடிய ஷான் மார்ஷ் சதம் விளாசினார். இவர் 131 ரன்கள் விளாசினார். அதிரடியாக விளையாடிய மேக்ஸ்வெல் 47 ரன்களை அடித்தார்.இந்திய அணியில் சிறப்பாக பந்து வீசிய புவனேஸ்வர் குமார் தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
299 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி. இந்திய அணியில் ஷிகர் தவான் மற்றும் ரோஹித் சர்மா சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். அதிரடியாக பவுண்டரிகளை விளாசிய ஷிகர் தவான் 32 ரன்களில் அவுட் ஆகி வெளியேறிவிட்டார். ரோகித் சர்மாவும் 42 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார்.
அதன் பின்பு இந்திய அணியின் கேப்டன் கோலியும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியும் ஆட்டத்தை கையில் எடுத்தனர். மிகச் சிறப்பாக விளையாடிய கோலி சதம் விளாசினார். சதம் அடித்த மறுகணமே அவுட்டாகி வெளியேறிவிட்டார் விராட் கோலி. இந்நிலையில் தோனி மற்றும் தினேஷ் கார்த்திக் இருவரும் போட்டியை கையில் எடுத்தனர். சிறப்பாக விளையாடிய தோனி இந்த ஆண்டின் தனது இரண்டாவது அரை சதத்தை பூர்த்தி செய்தார். அதன் பின்பு இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.சிறப்பாக விளையாடிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.
இந்த போட்டியின் முடிவில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் கூறியது என்ன என்றால், "நாங்கள் சிறப்பாகத்தான் செயல்பட்டோம்.ஷான் மார்ஷ் மற்றும் மேக்ஸ்வெல் சிறப்பாக விளையாடினர். இருந்தாலும் தோனி கடைசி வரை களத்தில் இருக்கும்போதே தெரியும் நாங்கள் வெற்றி பெற முடியாது என்றுகூறினார். தோனியை அவுட் செய்திருந்தால் நாங்கள் நிச்சயம் வெற்றி பெற வாய்ப்பு இருந்திருக்கும். ஆனால் அவர் எங்களிடம் இருந்து வெற்றியை பறித்து விட்டார். இந்த தோல்வியினால் நாங்கள் துவண்டு விட மாட்டோம், நிச்சயம் அடுத்த போட்டியில் இதைவிட சிறப்பாக செயல்படுவோம்" என்று ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் கூறினார். தோனி இந்த 2019 ஆம் ஆண்டில் 2 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளார். அந்த இரு போட்டிகளிலும் அரை சதம் விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது.