இங்கிலாந்து டெஸ்ட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆன்டர்சன் ஆகஸ்ட் 14 அன்று லார்ட்ஸில் நடைபெறவுள்ள இரண்டாவது ஆஸஸ் டெஸ்ட் போட்டியில் காயம் காரணமாக பங்கேற்க மாட்டார் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் உறுதிபடுத்தியுள்ளது. ஆன்டர்சன் ஒரு வருடத்திற்கும் மேலாக காலின் பின் பகுதியில் ஏற்பட்ட காயத்தினால் அவதிப்பட்டு வருகிறார்.
இவ்வருடத்தில் ஜீலை மாத ஆரம்பத்தில் லான்செட்ஷைர் அணிக்காக 37 வயதான ஜேம்ஸ் ஆன்டர்சன் விளையாடியபோது அவரது காலின் தசைப்பகுதி கிழிந்தது. இருப்பினும் முதல் ஆஸஸ் டெஸ்ட் தொடருக்கான உடற்தகுதி போட்டியில் தேர்ச்சியடைந்தார். ஆன்டர்சன் முதல் டெஸ்டில் 4 ஓவர்கள் மட்டுமே வீசி பெவிலியன் திரும்பினார். அதன்பின் அவர் ஒரு ஓவர் கூட வீச வரவில்லை. இதனால் இங்கிலாந்து பௌலிங் வரிசையின் பலம் குன்றியது. இதனை சரியாக பயன்படுத்திக் கொண்ட ஆஸ்திரேலிய அணி 251 என்ற அதிகப்படியான ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 8 விக்கெட்டுகளுக்கு 128 ரன்களுக்கு இருந்தாலும், ஸ்டிவன் ஸ்மித்தின் பொறுப்பான இன்னிங்ஸ் மூலம் பெரும் சாதனை வெற்றியை பெற்றுள்ளது.
ஜேம்ஸ் ஆன்டர்சன் கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளிலாவது பங்கேற்பார் என இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் எதிர்பார்த்துள்ளது. இங்கிலாந்து அணியில் ஆன்ட்ர்சனின் இடத்தை நிரப்ப பல வீரர்கள் உள்ளனர்.
நாம் இங்கு லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் ஜேம்ஸ் ஆன்டர்சனிற்கு மாற்று வீரராக களமிறங்க வாய்ப்புள்ள 3 நட்சத்திர இங்கிலாந்து வீரர்களைப் பற்றி காண்போம்.
#3 ஜேக் லீச்
மிகவும் பிரபலமில்லாத வீரர் ஜேக் லீச். இருப்பினும் எட்ஜ்பாஷ்டனில் நடந்த முதல் ஆஸஸ் டெஸ்ட் தொடரின் மூன்றாவது நாளில் ஆடுகளத்தின் தன்மை சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக மாறியதை நாம் காணமுடிந்தது. இந்த தன்மையை ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயான் சரியாக பயன்படுத்தி கொண்டார். ஆனால் இங்கிலாந்தின் மொய்ன் அலி பயன்படுத்தி கொள்ள தவறினார். எனவே இரண்டாவது டெஸ்டில் ஆஸ்திரேலிய பேட்டிங் வலிமையை குறைக்க இங்கிலாந்து அணி இரு சுழற்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கி அதிக வாய்ப்புள்ளது.
இதற்கு ஜேக் லீச் சரியான வீரராக இருப்பார். இவரது பௌலிங் மொய்ன் அலி பௌலிங்கை போன்று அதிக திருப்பத்துடன் இல்லாமல் போனாலும் சரியான லென்த் மற்றும் லைனில் வீசும் திறன் உடையவர். ஜேக் லீச்-சின் பந்துவீச்சில் ஸ்டிவன் ஸ்மித்தின் பேட்டிங்கை காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். ஸ்டிவன் ஸ்மித் இடது கை சுழற்பந்து வீச்சில் சிறப்பான பேட்டிங்கை வெளிபடுத்தியதில்லை. இந்த பந்துவீச்சில் ஸ்டிவன் ஸ்மித்-தின் பேட்டிங் சராசரி 35 ஆகும்.
ஜேக் லீச் 2018 அன்று கிறிஸ்ட் சர்ஜீல் நடந்த நியூசிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமானார். அறிமுகத்திலிருந்து 5 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றுள்ள இவர் 26.60 சராசரியுடன் 20 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஒரு போட்டியில் இவரது சிறந்த பௌலிங் 5/83 ஆகும். மேலும் சமீபத்தில் அயர்லாந்திற்கு எதிரான போட்டியில் இங்கிலாந்தின் தொடக்க வீரராக களமிறங்கி 92 ரன்களை பேட்டிங்கிலும் விளாசி அசத்தியுள்ளார்.
#2 சாம் கர்ரான்
இடதுகை வேகப்பந்து வீச்சாளரான சாம் கர்ரான் தான் வீசும் அனைத்து பௌலிங்கையும் ஸ்விங்காக வீச முயற்சி செய்து அதற்குண்டான பலனை பெற்றுள்ளார். 2018ல் பாகிஸ்தானிற்கு எதிரான தொடரில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தன்னை நிருபித்தார்.
சாம் கரானின் மிகச்சிறந்த சர்வதேச போட்டியாக உலகின் நம்பர் 1 அணியான இந்திய அணிக்கு எதிராக சொந்த மண்ணில் கடந்த வருடம் நடந்த டெஸ்ட் தொடரில் வந்தது. சாம் கர்ரான ஒரு பௌலராகவே இங்கிலாந்து அணியில் தேர்வு செய்யப்பட்டார். ஆனால் சிறந்த பௌலிங்குடன் சேர்ந்து நம்பர் 7 பேட்டிங் வரிசையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சில போட்டிகளில் இங்கிலாந்தின் டாப் ஆர்டர் மற்றும் மிடில் ஆர்டர் சொதப்பும் போது சாம் கர்ரான கடைநிலையில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இங்கிலாந்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
இங்கிலாந்திற்கு வெற்றி வாய்ப்புகளை தேடித் தந்த சாம் கர்ரான் அந்த டெஸ்ட் தொடரின் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் இலங்கையில் நடந்த டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து, இலங்கையை வைட்வாஷ் செய்து அசத்தியது. அதற்கு முன்னனி காரணமாக சாம் கர்ரான் திகழ்ந்தார். இவர் இதுவரை 10 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 30 சராசரியுடன் 18 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அத்துடன் பேட்டிங்கில் 32 சராசரியை தன்வசம் வைத்துள்ளார். ஒரு போட்டியில் சாம் கர்ரானின் அதிகபட்ச ரன்கள் 78 ஆகும்.
#1 ஜோஃப்ரா ஆர்ச்சர்
இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 251 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவிய போது பெரும்பாலானோர் ஆஸ்திரேலிய பௌலிங்கை நகைத்தனர். ஸ்டுவர் பிராட், கிறிஸ் வோக்ஸ், மொய்ன் அலி, பென் ஸ்டோக்ஸ் ஆகிய பௌலர்கள் ஸ்டிவன் ஸ்மித்தை முதல் ஆஸஸ் டெஸ்ட் போட்டியின் இரு டெஸ்ட் இன்னிங்ஸிலும் கட்டுபடுத்த தவறினர். அந்த டெஸ்ட் போட்டியின் இறுதி நாளன்றும் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் நிலையான ஆட்டத்தை வெளிபடுத்தாமல் 146 ரன்களில் தங்களது இரண்டாவது இன்னிங்ஸில் சுருண்டனர்.
எட்ஜ்பாஷ்டனில் நடந்த போட்டிக்கு பின்னர் இங்கிலாந்தின் அதிரடி பௌலர் ஜோஃப்ரா ஆர்ச்சர் இரண்டாவது கவுண்டி டிவிஷனில் குளுக்கோஷாட்ஷைர் அணியின் பேட்டிங் வலிமையை குன்றச் செய்து 27 ரன்களை மட்டுமே அளித்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இங்கிலாந்து அணி தற்போது வரை ஸ்டிவன் ஸ்மித்தின் விக்கெட்டை எவ்வாறு வீழ்த்துவது என தெரியாமல் விழித்து வருகிறது. எனவே லார்ட்ஸ் டெஸ்டில் ஜோஃப்ரா ஆர்ச்சரை களமிறக்க இதுவே சரியான சமயமாகும். 2019 உலகக்கோப்பை தொடரில் இயான் மோர்கனின் முன்னணி மற்றும் விருப்ப பௌலராக ஆர்ச்சர் திகழ்ந்தார். காயம் காரணமாக விலகியுள்ள ஜேம்ஸ் ஆன்டர்சனின் இடத்தை இவரால் மட்டுமே நிரப்ப இயலும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. லார்ட்ஸ் டெஸ்ட் தொடங்க இன்னும் ஒரு வாரம் உள்ள நிலையில் இங்கிலாந்து அணி நிர்வாகம் ஒரு சரியான முடிவை எடுத்தல் அவசியமானதாகும். இம்முடிவின் மூலமாகவே இரண்டாவது டெஸ்டில் இங்கிலாந்தின் வெற்றி வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.