இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின் தற்போதைய சர்வதேச பௌலிங் தரவரிசை பட்டியலில் ஏழாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங் தரவரிசை பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடர் டிசம்பர் 6ம் தேதி தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த இரு வாரங்களில் 4 சர்வதேச டெஸ்ட் தொடர்கள் நடைபெற்றதால் டெஸ்ட் தரவரிசை பட்டியலில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. அதன்படி இங்கிலாந்தை சேர்ந்த ஜானி பேர்ஸ்டோவ் , வங்கதேச பேட்ஸ்மேன் மொமினுள் ஹாக் மற்றும் பாகிஸ்தான் பௌலர் யாசிர் ஷா போன்ற வீரர்கள் தங்களது அணிகளின் வெற்றிக்கு சிறப்பான பங்களிப்பை அளித்ததால் டெஸ்ட் தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளனர்.
ஜானி பேர்ஸ்டோவ், கொழும்பு- வில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் 110 மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் 15 என விளாசி, இங்கிலாந்து அணி இலங்கைக்கு எதிராக 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற உதவினார். அத்துடன் இலங்கையையில் சுற்றுப்பயணம் செய்த இங்கிலாந்து அணி டெஸ்ட் தொடரை 0-3 என வென்றது.
சிட்டகாங்- கில் நடைபெற்ற வங்கதேசம் மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் முதலாவது டெஸ்ட் போட்டியில் மொமினுள் முதல் இன்னிங்சில் 120 மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் 12 ரன்களை விளாசி வங்கதேச அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற உதவினார்.
துபாயில் நடைபெற்ற நியூசிலாந்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் யசிர் ஷா 184 ரன்களை கொடுத்து 14 விக்கெட்டுகளை வீழ்த்தி உலக சாதனை படைத்துள்ளார். அத்துடன் பாகிஸ்தான் அணி தொடரை சமன் செய்ய மிகவும் உறுதுணையாக இருந்துள்ளார்.
இவர்களின் அற்புதமான ஆட்டத்தால் இவர்களுக்கு ஆட்டநாயகன் விருது கிடைத்தது மட்டுமல்லாமல் சர்வதேச டெஸ்ட் தரவரிசை பட்டியலிலும் முன்னேற மிகவும் உதவி புரிந்துள்ளது. நவம்பர் 28 ம் தேதி புதன்கிழமையன்று ஐசிசி புதிய டெஸ்ட் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.
ஜானி பேர்ஸ்டோவ் பேட்டிங் தரவரிசை பட்டியலில் மீண்டும் டாப் 20ல் இடம்பிடித்துள்ளார்.இவர் டெஸ்ட் பேட்டிங் தரவரிசை பட்டியலில் தற்பொழுது 6 இடங்கள் முன்னேறி 16 வது இடத்தில் உள்ளார். மொமினுள் பேட்டிங் தரவரிசையில் 11 இடங்கள் முன்னேறி 24 வது இடத்தில் உள்ளார். யசிர் ஷா சர்வதேச பௌலிங் தரவரிசையில் 9 இடங்கள் முன்னேறி 10வது இடத்தில் உள்ளார்.
இவர்கள் மட்டுமல்லாமல் இன்னும் சில வீரர்களும் தங்களது சிறப்பான பேட்டிங் மற்றும் பௌலிங்கால் தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளனர்.
டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் விராட் கோலி தொடர்ந்து முதல் இடத்தில் வகிக்கிறார். அஸார் அலி 3 இடங்களில் முன்னேறி 12 வது இடத்திலும், குசல் மென்டிஸ் 8 இடங்கள் முன்னேறி 20வது இடத்திலும், பென் ஸ்டோக்ஸ் 5 இடங்கள் முன்னேறி 31வது இடத்திலும், ரோசன் சில்வா 5 இடங்கள் முன்னேறி 48வது இடத்திலும், ஷேன் டவ்ரிச் 7 இடங்கள் முன்னேறி 58வது இடத்திலும், ஜோஸ் பட்லர் 3 இடங்கள் முன்னேறி 18வது இடத்திலும்,ஹரிஸ் சோஹைல் 33 இடங்கள் முன்னேறி 38வது இடத்திலும், பாபர் ஆஜாம் 24 இடங்கள் முன்னேறி 39வது இடத்திலும், பென் ஃபோக்ஸ் 4 இடங்கள் முன்னேறி 50வது இடத்திலும் உள்ளனர்.
நியூசிலாந்து அணியின் பேட்ஸ்மேன் ஹென்றி நிக்கோல்ஸ் தனது கிரிக்கெட் வாழ்வில் தனது அதிகபட்ச ரேங்கினை எட்டியுள்ளார். இவர் 3 இடங்கள் முன்னேறி 17வது இடத்தை பிடித்துள்ளார்.
பௌலிங் தரவரிசையில் கஜிஸோ ரபாடா முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார். முதல் இடம் வகித்த ஜேம்ஸ் ஆண்டர்சன் கொழும்புவில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பங்குபெறாததால் தனது ஒரு சதவீத பாய்ண்டை இழந்து இரண்டாவது இடத்தில் உள்ளார். அதாவது 9 பாய்ன்ட்டுகளை இழந்துள்ளார். இவர் ரபாடாவை விட 8 பாய்ன்ட்டுகள் பின்தங்கியுள்ளார்.
எழுத்து : பிடிஐ
மொழியாக்கம் : சதீஸ்குமார்