தற்போது உலககோப்பை தொடரானது நடைபெற்று வரும் வேளையில் ஆஸ்திரேலியா ஏ அணியானது இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு ஐந்து ஒருநாள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் முதல் போட்டியானது இன்று நார்த்தாம்ப்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலிய ஏ அணியானது நார்தாம்டன்ஷரி கவுண்டி அணியை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஹெட் பந்து வீச்சை தேர்வு செய்தார். கடந்த உலககோப்பை போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடிய மிட்சில் மார்ஷ் இந்த போட்டியில் ஆஸ்திரேலியா ஏ அணிக்காக விளையாடினார்.
நார்த்தாம்ப்டன்ஷரி அணி சார்பில் லிவி மற்றும் நியூட்டன் துவக்க வீரர்களாக களமிறங்கினர். போட்டி துவங்கிய ஐந்தாவது ஓவரிலேயே லிவி 5 ரன்கள் மட்டும் எடுத்த நிலையில் ஹேஸல்வுட் பந்தில் ஆட்டமிழந்தார். அதன் பின் களமிறங்கிய அந்த அணியின் கேப்டன் கோப் களமிறங்கினார். இவர் நியூட்டனுடன் இணைந்து சிறப்பாக ஆடினார். இந்த ஜோடி இரண்டாவது விக்கெடாடுக்கு 98 ரன்கள் குவித்தது. சிறப்பாக ஆடிய கோப் 49 ரன்னில் அகர் பந்தில் ஆட்டமிழக்க அதனைத் தொடர்ந்தே அரைசதம் விளாசிய நியூட்டனும் மிட்சில் மார்ஷ் பந்தில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.
அடுத்து வந்த எந்த வீரரும் ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து வெளியேறினர். மறுமுனையில் நிலைத்து ஆடிய வேகிலி தனது அரைசதத்தை கடந்து பின் அவரும் ஆட்டமிழக்க இறுதியில் அந்த அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 262 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக அகர் 3 விக்கெட்டுகளையும், மிட்சில் மார்ஷ் மற்றும் ஹேஸல்வுட் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
பின்னர் 263 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா ஏ அணி களமிறங்கியது. அந்த அணி சார்பில் மேத்யூ வேட் மற்றும் டீ ஷார்ட் துவக்க வீரர்களாக களமிறங்கினர். இருவரும் இணைந்து அணிக்கு நல்ல துவக்கத்தை தந்தனர். பின் டீ ஷார்ட் 7 ரன்னில் இருந்தபோது அஸாருல்லா பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஹெட் வேடுடன் இணைந்து சிறப்பாக ஆடினார். ஹெட் ஒரு முனையில் நிதானமாக ஆட மறுமுனையில் வேட் வெளுத்து வாங்கினார். இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 85 ரன்கள் குவித்தனர். அப்போது ஹெட் 30 ரன்களில் இருந்தபோது டாம் சோலி பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஹேன்ஸ்கேம் அதிரடியை காட்டத்துவங்கினார். மறுமுனையில் வெளுத்து வாங்கிய வேட் 67 பந்துகளில் 117 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். அதன் பின்னர் மிட்சில் மார்ஷ்-ன் அதிரடியுடன் ஆஸ்திரேலிய அணி 36 வது ஓவரிலேயே வெற்றி இலக்கை எட்டியது. இதில் நார்த்தாம்ப்டன் அணி சார்பில் அதிகபட்சமாக டாம் சோலே 2 விக்கெட்டுகளும், ஹஸாருல்லா மற்றும் ப்ளேதர்விக் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 1-0 என முண்ணிலை பெற்றது ஆஸ்திரேலிய ஏ அணி.