உலககோப்பை தொடரானது மிகபிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இதில் தற்போதைய நிலையின் படி ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்ரிக்க அணிகள் அரையிறுதி செல்லும் வாய்ப்பினை தவறவிட்டன. இந்நிலையில் மற்ற எட்டு அணிகளும் அரையிறுதி போட்டிக்கு செல்லும் நோக்கோடு விளையாடி வருகின்றன. இதில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போட்டியான ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் போட்டியானது இன்று நடைபெற்றது. இதுவரை கடைசி 27 ஆண்டுகளில் இங்கிலாந்து அணி உலககோப்பை தொடரில் ஆஸ்திரேலியாவை வென்றதே இல்லை. அதேபோல் தற்போது கடைசியாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்ற 11 ஒருநாள் போட்டிகளில் இங்கிலாந்து 10 போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தது. எனவே இந்த போட்டி கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. லண்டன் நகரின் லார்ட்ஸ் மைதானத்தில் துவங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி ஆஸ்திரேலிய அணி முதலில் பேட் செய்தது. அந்த அணியின் துவக்க வீரர்களாக பின்ச் மற்றும் வார்னர் களமிறங்கினர். இங்கிலாந்து அணி சார்பில் வுட் முதல் ஓவரை வீசினார். ஆரம்பம் முதலே இவர்கள் இருவரும் நேர்த்தியாக ஆடி வந்தனர். முதல் 10 ஓவர்கள் முடியும் போது விக்கெட் இழப்பின்றி இந்த ஜோடி 44 ரன்கள் மட்டுமே குவித்திருந்தது. அதன் பின் கிடைக்கும் பந்துகளை எல்லாம் பவுண்டரிகளாக விளாசி இந்த ஜோடி 100 ரன்களையும் கடந்தது. இது இந்த உலககோப்பை தொடரில் இவர்களின் மூன்றாவது 100 ரன் பார்ட்னர்ஷிப் ஆகும். அதன் பின் இருவரும் அடுத்தடுத்து அரைசதத்தை கடந்தனர். அப்போது வார்னர் 53 ரன்களில் இருந்தபோது மொயின் அலி வீசிய பந்தில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அதன் பின்னர் காவாஜா களமிறங்கினார். இவர் ஒருமுனையில் நிதானமாக ஆட மறுமுனையில் பின்ச் அதிரடியாக ஆடிவந்தார். இருவரும் இணைந்து மூன்றாவது விக்கெட்டுக்கு 50 ரன்கள் குவித்தனர். காவாஜா 23 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்டோக்ஸ் பந்தில் போல்ட் ஆனார்.
அடுத்து அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரமான ஸ்மித் களமிறங்கினார். இவர் பின்ச் உடன் ஜோடி சேர்ந்து இங்கிலாந்து பந்துவீச்சாளர்களின் பந்துகளை வெளுத்து வாங்கினார். மறுமுனையில் பின்ச் இந்த உலககோப்பை தொடரில் தனது இரண்டாவது சதத்தினை பதிவுசெய்தார். சதமடித்த சில நிமிடங்களிலே அவர் ஆர்ச்சர் பந்தில் ஆட்டமிழந்தார். அதிரடி ஆட்டக்காரரான மேக்ஸ்வெல் அப்போது களமிறக்கப்பட்டார். ஆனால் அவரால் இதில் சோபிக்க முடியவில்லை வெறும் 12 ரன்கள் மட்டுமே எடுத்து வுட் பந்தில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். அதனைத் தொடர்ந்தே ஸ்மித்தும் 38 ரன்களில் வெளியேறினார்.
பின்னர் களமிறங்கிய வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். அலெக்ஸ் கேரி மட்டும் நிலைத்து நின்று கடைசி வரை ஆட்டமிழக்காமல் 38 ரன்கள் குவித்தார். இறுதியில் ஆஸ்திரேலிய அணி 50 ஓவர் முடிவில் 285 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து அணி சார்பில் வோக்ஸ் 2 விக்கெட்டும், ஆர்ச்சர், மொயின் அலி, ஸ்டோக்ஸ் மற்றும் வுட் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
பின்னர் 286 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. அந்த அணி சார்பில் போர்ஸ்டோ மற்றும் வின்ஸ் துவக்க வீரர்களாக களமிறங்கினர். ஆட்டம் துவங்கிய ஆரம்பத்திலேயே இங்கிலாந்து அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. இரண்டாவது பந்திலேயே வின்ஸ் ரன் எதுவும் எடுக்காமல் பெஹன்ட்ராப் பந்தில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் ரூட் களமிறங்கினார். அடுத்து இந்த ஜோடியும் நீடிக்கவில்லை. ரூட் ஸ்டார்க் பந்தில் ஆட்டமிழக்க அடுத்து வந்த கேப்டன் மோர்கனும் ஸ்டார்க் வலையில் விழுந்தார். மறுமுனையில் சிறப்பாக ஆடிவந்த போர்ஸ்டோ பெஹன்ட்ராப் பந்தில் கம்மிங்ஸ் இடம் கேட்ச் ஆனார். இங்கிலாந்து அணி 54 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்து தவித்தது.
அப்போது ஜோடி சேர்ந்தது ஸ்டோக்ஸ் - பட்லர் கூட்டணி. இருவரும் இணைந்து இங்கிலாந்து அணிக்கு நம்பிக்கையை அளித்தனர்.சிறப்பாக ஆடி இலக்கினை துரத்த துவங்கினர். இந்த ஜோடி இணைந்து ஐந்தாவது விக்கெட்டுக்கு 71 ரன்கள் குவித்தனர். பட்லர் 25 ரன்களில் இருந்த போது ஸ்டைனிஸ் பந்தில் தனது விக்கெட்டினை பறிகொடுத்தார். பின்னர் வோக்ஸ் ஸ்டேக்ஸ் உடன் ஜோடி சேர்ந்தார். சிறப்பாக ஆடி வந்த ஸ்டோக்ஸ் தனது அரைசதத்தை நிறைவு செய்தார். அதன் பின் அணியின் வெற்றிக்காக அதிரடியாக ஆடத் துவங்கினர் அவர். ஆனால் அது நீடிக்க வில்லை. அவர் 89 ரன்களில் இருந்தபோது ஸ்டார்க்-ன் துள்ளியமான யாக்கரில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் வந்த வீரர்கள் யாரும் நிலைத்து ஆடவில்லை. இறுதியில் இங்கிலாந்து அணி 44.4 ஓவர்களில் 221 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் போட்டியை 64 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வென்றது. இதில் ஆஸ்திரேலிய அணி சார்பில் பெஹன்ட்ராப் 5 விக்கெட்டுகளும், ஸ்டார்க் 4 மற்றும் ஸ்டைனில் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். சதமடித்து அசத்திய ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.