இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு.

Aus vs Sl test trophy
Aus vs Sl test trophy

இலங்கை அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இத்தொடரின் முதல் டெஸ்ட் போட்டி பிரிஸ்பேன் நகரில் நாளை ‘பகலிரவு’ ஆட்டமாக தொடங்க உள்ளது. இந்நிலையில் இந்த போட்டிக்கான 11 பேர் கொண்ட அணியை ஆஸ்திரேலிய அணி இன்று அறிவித்துள்ளது. இரண்டு புதுமுக வீரர்கள் இடம் பிடித்துள்ள அந்த அணி விவரத்தை இங்கு காண்போம்.

சமீபத்தில் நடந்த இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை உள்ளூரில் முதல்முறையாக இறந்த ஆஸ்திரேலிய அணிக்கு கடும் விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் தற்போது துவங்க உள்ள இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் புதிய மாற்றமாக இரண்டு புதுமுக வீரர்கள் அணியில் இடம் பிடித்துள்ளனர்.

காயம் காரணமாக ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் விலகியுள்ள நிலையில் அவருக்கு பதிலாக இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அசத்திய வேகப்பந்து வீச்சாளர் ‘ஜே ரிச்சர்ட்சன்’ டெஸ்ட் அணியில் முதல்முறையாக இடம்பிடித்துள்ளார்.

Aus debut player
Aus debut player

மேலும் கடந்த வாரம் நடந்த இலங்கைக்கு எதிரான 3 நாள் பயிற்சி போட்டியில் இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்து (157* & 102*) ஆட்டமிழக்காமல் இருந்த ‘குர்தீஸ் பேட்டர்சன்’ முதன்முறையாக ஆஸ்திரேலிய அணிக்காக சர்வதேச போட்டிகளில் களம் காண உள்ளார்.

வேகப்பந்துவீச்சாளர் பீட்டர் சிடில் 12வது ஆட்டக்காரராக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். சமீபத்தில் இந்தியாவுக்கு எதிராக சிட்னியில் நடந்த டெஸ்ட் போட்டியில் இருந்து இந்த போட்டிக்காக அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பி வந்த தொடக்க ஆட்டக்காரர் ஆரோன் பின்ச்சுக்கு பதிலாக இந்த போட்டியில் ‘ஜோ பர்ன்ஸ்’ தொடக்க வீரராக சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் ஷான் மார்ஷ்க்கு பதிலாக பேட்டர்சன், ஜோஷ் ஹேசில்வுட்க்கு பதிலாக ஜே ரிச்சர்ட்சன் அறிமுக வீரர்களாக களம் காண உள்ளனர்.

Aus openers
Aus openers

மேலும் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது ஆஸ்திரேலிய அணியின் துணை கேப்டன்களாக அறிவிக்கப்பட்ட ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் மிட்செல் மார்ஷ் ஆகிய இருவரும் இந்த போட்டிக்கான அணியில் இடம்பெறவில்லை. எனவே இத்தொடருக்கான ஆஸ்திரேலிய அணியின் புதிய துணை கேப்டன்களாக ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் ‘டிராவிஸ் ஹெட்’ மற்றும் வேகப்பந்துவீச்சாளர் ‘பேட் கம்மின்ஸ்’ நியமிக்கப்பட்டுள்ளனர். அணியை ‘டிம் பைன்’ வழிநடத்துவார். பகலிரவு போட்டியாக நடைபெறும் இந்த டெஸ்ட் போட்டியில் ‘பிங்க்’ நிற பந்து பயன்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி விவரம்.

டிம் பைன் (கேப்டன்), மார்கஸ் ஹாரிஸ், ஜோ பர்ன்ஸ், உஸ்மான் காவாஜா, மார்கஸ் லம்பசாங்கே, டிராவிஸ் ஹெட், குர்தீஸ் பேட்டர்சன், பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஜே ரிச்சர்ட்சன், நாதன் லயன்.

ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோரின் தடைக்கு பின்னர் அணியில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வரும் ஆஸ்திரேலிய அணிக்கு இதுவரை பெரிய வெற்றி கிடைக்கவில்லை. தற்போதைய மாற்றமாவது ஆஸ்திரேலிய அணிக்கு ஒரு தொடர் வெற்றியை தேடித்தருமா என்பதை பொறுத்திருந்துதான் காண வேண்டும்.

முதல் டெஸ்ட் போட்டி நாளை பிரிஸ்பேன் நகரில் ‘பகலிரவு‘ ஆட்டமாக நடைபெற உள்ளது. இந்தப் போட்டி இந்திய நேரப்படி காலை 08:30 மணிக்கு தொடங்கி நடைபெறும்.