இலங்கை அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் பகல் இரவாக நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டி கடந்த 24ம் தேதி பிரிஸ்பேன் நகரில் தொடங்கியது.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்ந்தெடுத்த இலங்கை அணிக்கு ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்கள் பெரும் தொல்லை கொடுத்தனர். குறிப்பாக தனது முதல் டெஸ்டில் விளையாடும் ஜே ரிச்சர்ட்சன் மற்றும் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் ஆகியோரின் வேகப்பந்து வீச்சில் இலங்கை அணி முழுமையாக நிலைகுலைந்து 56.4 ஓவர்களில் 144 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இலங்கை அணியில் அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் டிக்வெல்லா அதிரடியாக விளையாடி 64 ரன்கள் சேர்த்தார். ஆஸ்திரேலிய அணி தரப்பில் சிறப்பாக பந்து வீசிய கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளையும், ஜே ரிச்சர்ட்சன் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு மார்கஸ் ஹாரிஸ் 44 ரன்கள் சேர்த்து நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தாலும் விக்கெட்டுகளை சீராக இழந்ததால் ஆஸி அணி 82-4 என தடுமாற்றத்தை சந்தித்தது. இந்நிலையில் 5-வது விக்கெட்டுக்கு கைகோர்த்த லாம்புசங்கே & டிராவிஸ் ஹெட் ஜோடி இலங்கை பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்டு ரன்கள் சேர்த்தது.
இந்த ஜோடியின் சிறப்பான ஆட்டத்தால் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்றது தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய லாம்புசங்கே டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தனது முதலாவது அரைசதத்தை கடந்தார். இவருடன் கைகோர்த்து மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டிராவிஸ் ஹெட் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 4-வது அரைசதத்தை கடந்தார்.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய லாபுசங்கே 81 ரன்களிலும் ஹெட் 84 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இந்த ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 166 ரன்கள் குவித்தது சிறப்பம்சமாகும். அடுத்து களமிறங்கிய அறிமுக வீரர் குர்தீஸ் பேட்டர்சன் 30 ரன்களையும், ஸ்டார்க் 26 ரன்கள் எடுக்க ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சில் 106.2 ஓவர்களில் 323 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. இலங்கை அணியில் சிறப்பாக பந்துவீசிய லக்மால் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
பின்னர் 179 ரன்கள் பின்தங்கிய நிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி இந்த முறையும் தொடர்ந்து விக்கெட் அணிவகுப்பு நடத்தியது. ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்சின் துல்லியமான வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இலங்கை அணி வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர். இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட்டுக்கு 17 ரன்கள் எடுத்திருந்த இலங்கை அணி, இன்றைய 3-ம் நாள் ஆட்டத்தில் தனது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 139 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது.
இலங்கை அணியில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் திரிமன்னே 34 ரன்கள் சேர்த்தார். அற்புதமாக பந்து வீசிய ஆஸ்திரேலிய அணி வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் 6 விக்கெட்டுகளை அள்ளினார்.
இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் மற்றும் 40 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அசத்தியது. அபாரமாக பந்து வீசி இந்த டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய ‘பேட் கம்மின்ஸ்’ ஆட்டநாயகன் விருது பெற்றார். இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி இந்த தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.
சமீபத்தில் நடந்த இந்தியாவுக்கு எதிரான தொடரில் அடிமேல் அடி வாங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு இந்த வெற்றி நிச்சயம் சிறப்பானதாகும். இவ்விரு அணிகள் இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற பிப்ரவரி 1-ம் தேதி கான்பரா நகரில் நடைபெற உள்ளது.