ஆஸ்திரேலிய அணி இந்தியாவைத் தொடர்ந்து யு.எ.இக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் தொடரில் விளையாடியது. இநத தொடரில் பாகிஸ்தான் அணியின் முன்னணி வீரர்களான சப்ராஸ் அகமது, பாபர் அஸாம், பஃகர் ஜமான் மற்றும் சதப் கான் ஆகியோருக்கு ஓய்வளித்து மற்ற வீரர்களுக்கு வாய்ப்பளித்தது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம். பாகிஸ்தான் அணியின் கேப்டனான சப்ராஸ் அகமது இல்லாத காரணத்தால் சோயிப் மாலிக் அணியை வழிநடத்துவார் என அறிவிக்கப்பட்டது. இந்த தொடரின் முதல் நான்கு போட்டிகளிலும் தோல்வியடைந்து தொடரை 4-0 என்ற கணக்கில் இழந்திருந்தது பாகிஸ்தான். இந்நிலையில் ஐந்தாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியானது துபாய் மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் சோயிப் மாலிக் பங்கேற்காததால் இமாட் வாசிம் அணியை வழிநடத்தினார். இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் இமாட் வாசிம் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
இதன்படி ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரர்களான உஸ்மான் காவாஜா மற்றும் ஆரோன் பின்ச் களமிறங்கினர். இருவரும் சிறப்பாக ஆடி பாகிஸ்தான் பந்து வீச்சாளர்களுக்கு நெருக்கடி கொடுத்தனர். அடுத்தடுத்து அரைசதமும் விளாசி அசத்தினர். சிறப்பாக ஆடிய பின்ச் 53 ரன்களகல் இருந்தபோது உஸ்மான் சின்வாரி பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ஷேன் மார்ஷ் துவக்க வீரரான காவாஜா உடன் ஜோடி சொர்ந்து அணியின் ஸ்கோரை சீராக உயர்த்தினார். ஷேன் மார்ஷ் அரைசதம் அடித்து அசத்த மறுமுனையில் நேர்த்தியாக விளையாடிய காவாஜா 2 ரன்னில் சதத்தினை தவறவிட்டு உஸ்மான் சின்வாரி பந்தில் யாசிர் ஷா-விடம் கேட்ச் ஆனார். அடுத்து வந்த மேக்ஸ்வேல் ஆரம்பம் முதலே அதிரடியைத் துவங்கினார். பாகிஸ்தான் பந்து வீச்சாளர்களை பதம் பார்த்தார் மேக்ஸ்வெல். இறுதியில் மேக்ஸ்வெல் 33 பந்துகளில் 70 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்க அடுத்து வந்த வீரர்கள் அனைவரும் செற்ப ரன்களில் வெளியேறினர். கடைசில் ஆஸ்திரேலிய அணி 50 ஓவர் முடிவில் 327 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது.
பின்னர் 328 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நேக்கி பாகிஸ்தான் அணி களமிறங்கியது. அந்த அணியில் துவக்க வீரர்களாக மாசூட் மற்றும் அபிட் அலி களமிறங்கினர். முதல் ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது பாகிஸ்தான் அணிக்கு. கடந்த போட்டியில் சதமடித்த அபிட் அலி பெரன்ட்ராப் பந்தில் டக் அவுட்டாகி வெளியேறினார். அடுத்து களமிறங்கிய ஹாரிஸ் சோயில் மாசூட் உடன் ஜோடி சேர்ந்து ரன்களை குவிக்க துவங்கினார். இருவரும் சிறப்பாக ஆடி வந்தனர். இவர்களின் விக்கெட்டை வீழ்த்த ஆஸ்திரேலியா பல பந்து வீச்சாளர்களை முயற்சி செய்தது.
மாசூட் அரைசதம் அடித்த அடுத்த பந்திலேயே தனது விக்கெட்டை இழந்தார். பின் களமிறங்கிய ரிஸ்வான் 12 ரன்களில் வெளியேற உமர் அக்மல் ஹாரிஸ் சோயில் உடன் இணைந்தார். அதிரடியாக விளையாடிய ஹாரிஸ் சோயில் சதம் விளாசினார். மறுமுனையில் இருந்த உமர் அக்மலும் அதிரடியைக் காட்ட அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. உமர் அக்மல் 43 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்த ஓவரிலேயே ஹாரிஸ் சோயில்-ம் 130 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேற கேப்டன் இமாட் வாசிம் மட்டும் நிலைத்து ஆடி அரைசதம் அடித்தார்.
இறுதியில் பாகிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில் 307 ரன்கள் மட்டுமே அடித்தது. எனவே 20 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. இதனால் தொடரை 5-0 என்ற கணக்கில் கைப்பற்றியது ஆஸ்திரேலியா. பாகிஸ்தான் அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 5-0 என சொந்த மண்ணில் இழப்பது இதுவே முதல் முறை. இதற்கு முன் மேற்கிந்திய தீவுகள், நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கெதிராக தொடரை 5-0 என இழந்துள்ளது. இந்த போட்டியை வென்றதன் மூலமாக தொடர்ச்சியாக 8 போட்டிகளில் வெற்றி கண்டுள்ளது ஆஸ்திரேலிய அணி. 33 பந்துகளில் 70 ரன்கள் குவித்த மேக்ஸ்வெல் ஆட்ட நாயகனாகனாகவும், ஆரோன் பின்ச் தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.