ஆஸ்திரேலிய அணி தற்போது பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்க்கொண்டு ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் பாகிஸ்தான் அணி பல முன்னணி வீரர்களுக்கு ஓய்வளித்து மற்ற வீரர்களை வைத்து தொடரில் விளையாடி வருகிறார். கேப்டன் சப்ராஸ் அகமதுக்கு ஓய்வளிக்கப்பட்டதால் ஷோயிப் மாலிக் கேப்டனான அணியை வழிநடத்துகிறார். இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளும் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் பட்சத்தில் தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் ஆஸ்திரேலியா களமிறங்கியது. இந்த போட்டி அபுதாபியில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச் பேட்டிங்யை தேர்வு செய்தார்.
அதன் படி பின்ச் மற்றும் காவாஜா ஆகியோர் துவக்க வீரர்களாக களமிறங்கினர். முதல் ஓவரிலேயே காவாஜா உஸ்மான் சினாவாரி பந்தில் டக் அவுட்டாகி வெளியேறினார். அடுத்து களமிறங்கிய ஷேன் மார்ஷ் ஆறாவது ஓவரில் 14 ரன்களில் ஜுனைத் கான் பந்தில் ஆட்டமிழக்க ஆஸ்திரேலிய அணி 20 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தவித்தது. அப்போது களமிறங்கிய ஹேன்ஸ்கோம் கேப்டன் பின்ச் உடன் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். அதிரடியாக ஆடிய ஹேன்ஸ்கோம் 47 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி மூன்றாவது விக்கெட்டுக்கு 84 ரன்கள் சேர்த்தது. மறுமுனையில் நிதானமாக ஆடிய பின்ச் அரைசதத்தை கடந்தார். ஸ்டைனிஸ் 10 ரன்களில் வெளியேற அடுத்து வந்த மேக்ஸ்வெல் பாகிஸ்தான் பந்து வீச்சாளர்களின் பந்துகளை மைதானத்தை விட்டு பறக்கவிட்டார். பின்ச் இறுதியில் 90 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன் மூலம் தனது ஹாட்ரிக் சதத்தினை 10 ரன்களில் தவறவிட்டார்.

அதிரடியாக ஆடிய மேக்ஸ்வெல் 71 ரன்களில் இருந்தபோது ரன் அவுட் ஆனார். 50 ஓவர் முடிவில் ஆஸ்திரேலிய அணி 266 ரன்கள் குவித்தது. அலெக்ஸ் கேரி 25 ரன்னுடனும், கம்மிங்ஸ் 2 ரன்னுடனும் களத்திலிருந்தனர். பாகிஸ்தான் அணி சார்பில் முகமது அஸ்னயின்யை தவிர மற்ற அனைவரும் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
பின்னர் 267 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிது பாகிஸ்தான். பாகிஸ்தான் அணி சார்பில் இமாம் உல் அக் மற்றும் மாசூட் ஆகியோர் துவக்க வீரர்களாக களமிறங்கினர். ஆட்டத்தின் துவக்கத்திலேயே மாசூட் 2 ரன்னில் கம்மிங்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த ஹாரிஸ் சோயில் 1 ரன்னிலும், ரிஸ்வான் ரன் எதுவும் எடுக்காமலும் ஒரே ஓவரில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதனால் பாகிஸ்தான் அணி 16 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அடுத்து களமிறங்கிய கேப்டன் ஷோயிப் மாலிக் தன் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர் இமாம் உடன் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். சிறப்பாக ஆடிய இமாம் 46 ரன்களில் மேக்ஸ்வெல் பந்தில் ஆட்டமிழந்தார். இதனைத் தொடர்ந்து ஷோயிப் மாலிக் 31 ரன்களிலும், உமர் அக்மல் 36 ரன்களிலும், இமாடீ வாசிம் 41 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதற்கடுத்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க பாகிஸ்தான் அணி 44.4 ஓவரில் 186 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆஸ்திரேலிய அணி சார்பில் அதிகபட்சமாக சாம்பா 4 விக்கெட்டுகளையும், கம்மிங்ஸ் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதன் மூலம் 80 ரன்கள் வித்தியாசத்தில் போட்டியை வென்றது ஆஸ்திரேலியா. தொடரையும் 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்டுகளை கைப்பற்றிய கம்மிங்ஸ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.