உலக கோப்பை போட்டிகள் நடந்து வரும் நிலையில் 'ஆஸ்திரேலியா ஏ' அணி இங்கிலாந்து மண்ணில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இங்கிலாந்து உள்ளூர் கிளப் அணிகளுக்கு இடையேயான போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகிறது.
இந்நிலையில் ஆஸ்திரேலிய-ஏ அணி இன்று நடைபெற்ற போட்டியில் உள்ளூர் அணியான 'டெர்பி' கிளப் அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய-ஏ அணி கேப்டன் 'டிராவிஸ் ஹெட்' முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி களமிறங்கிய டெர்பி அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. அந்த அணியின் அனுபவ வீரர் 'கோடுல்மேன்' 12 ரன்களிலும், டாம் லேஸ் 7 ரன்களிலும் ஆட்டம் இழந்து வெளியேறினர். ஆனால் அதன் பின்னர் களமிறங்கிய மேட்சன் மற்றும் டூ பிளோய் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்கள் சேர்த்தனர்.
ஆஸ்திரேலிய-ஏ அணி வீரர்களின் அனுபவம் வாய்ந்த பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்ட மேட்சன் 48 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். ஆனால் மறுமுனையில் நங்கூரம் பாய்ச்சியது போல நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்திய 'டூ பிளோய்' சதம் அடித்து அசத்தினார். அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இவர் 115 ரன்களில் 'ஆண்ட்ரூ டை' பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
அடுத்து களமிறங்கிய வீரர்கள் அதிரடியாக ஆடும் நோக்கத்துடன் விளையாடியதால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர். முடிவில் டெர்பி அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 283 ரன்களை குவித்தது. ஆஸ்திரேலிய-ஏ அணி தரப்பில் சிறப்பாக பந்து வீசிய ஆண்ட்ரூ டை 6 விக்கெட்டுகளை அள்ளினார்.
பின்னர் 284 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய-ஏ அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் டார்ஷி ஷார்ட் 4 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். ஆனால் சென்ற போட்டியின் சத நாயகன் 'மேத்யூ வேட்' மறுமுனையில் தனது சரவெடியை தொடங்கினார்.
டெர்பி அணி வீரர்களின் அனுபவமில்லாத பந்துவீச்சை சர்வ சாதாரணமாக எதிர்கொண்ட வேட் மைதானத்தில் நாலாபுறமும் சிதறடித்து ரன்கள் சேர்த்தார். இவருக்கு பக்கபலமாக கேப்டன் டிராவிஸ் ஹெட் நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தார்.
தொடர்ந்து அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய மேத்யூ வேட் 45 பந்துகளில் சதத்தை எட்டி அமர்க்களப்படுத்தினார். சதம் அடித்த பிறகும் தனது ருத்ர தாண்டவத்தை மேத்யூ வேட் நிறுத்தவில்லை. இதனால் ஆஸ்திரேலிய-ஏ அணி வெற்றி இலக்கை நோக்கி அதிவேகமாக பயணித்தது.
மறுமுனையில் தனது அரைசதத்தை கடந்த ஹெட் 68 ரன்களில் ஜேம்ஸ் டெய்லர் பந்துவீச்சில் போல்டு ஆகி வெளியேறினார். ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்து வைப்பார் என எண்ணிய மேத்யூ வேட் 155 ரன்களில் ஆட்டமிழந்து டெர்பி அணி வீரர்களை நிம்மதி பெருமூச்சு விட வைத்தார். இவரின் இந்த 71 பந்து இன்னிங்சில் 14 பவுண்டரிகள் மற்றும் 11 சிக்சர்கள் அடங்கும்.
இதன் பின்னர் களமிறங்கிய அனுபவ வீரர்களான பீட்டர் ஹேன்ட்ஸ்காம்ப் மற்றும் மிச்செல் மார்ஷ் ஆகியோர் சிறப்பாக விளையாடி வெற்றி இலக்கை எட்ட வைத்தனர். ஆஸ்திரேலியா ஏ அணி 35.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 287 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலிய-ஏ அணி தனது அடுத்த ஒரு நாள் ஆட்டத்தில் 'வார்செஸ்டெர்ஷைர்' அணியை வருகிற 25-ஆம் தேதி எதிர்கொள்கிறது.