வரலாற்று சிறப்புமிக்க 'ஆஷஸ்' டெஸ்ட் தொடர் வருகிற ஆகஸ்ட்-1 ஆம் தேதி முதல் இங்கிலாந்தில் தொடங்கி நடைபெற உள்ளது. இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெறும் மிகப்பெரிய ஒரு போட்டியாகும் இது. இரு அணிகளுமே களத்தில் நீயா? - நானா? என மல்லுக்கட்டுவதால் இந்த போட்டியில் சுவாரசியத்துக்கும், பரபரப்புக்கும் பஞ்சம் இருக்காது.
இந்நிலையில் இந்த புகழ்பெற்ற ஆஷஸ் தொடருக்கான 17 பேர் கொண்ட அணியை ஆஸ்திரேலிய அணி இன்று அறிவித்துள்ளது.
ஆஸ்திரேலிய அணியின் டெஸ்ட் கேப்டனான 'டிம் பைன்' இந்த தொடரிலும் ஆஸி அணியை வழி நடத்த உள்ளார். 'டிம் பைன்' ஆஸி அணியின் விக்கெட் கீப்பர் என்ற போதிலும் சமீபத்திய பேட்டிங் ஃபார்மினால் மற்றொரு விக்கெட் கீப்பரான 'மேத்யூ வேட்' நீண்ட காலத்துக்குப் பின் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். எனவே வேட் ஒரு பேட்ஸ்மேனாக அணியில் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் நடைபெற்று முடிந்த உலகக் கோப்பையில் மிகச் சிறப்பாக விளையாடி அனைவரது கவனத்தையும் ஈர்த்த விக்கெட் கீப்பர் 'அலெக்ஸ் கேரி'-க்கு இந்த அணியில் இடம் கிடைக்கவில்லை. சிறப்பாக விளையாடியும் கேரி-க்கு இடமில்லாதது சமூக வலைதளங்களில் பலராலும் விமர்சிக்கப்பட்டு வருகிறது. மேலும் சமீபகாலமாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த 'பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப்'-ம் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
மேலும் கடந்த வருடம் பந்தை சேதப்படுத்திய தொடர்பாக தடை விதிக்கப்பட்ட வீரர்களான 'டேவிட் வார்னர்', 'ஸ்டீவ் ஸ்மித்' மற்றும் 'கேமரூன் பான்கிராஃப்ட்' ஆகிய மூவரும் இந்த ஆஷஸ் தொடருக்கான அணியில் இடம் பிடித்துள்ளனர். தடைக்காலம் முடிந்த பிறகு இந்த மூன்று வீரர்களும் ஒன்றாக இணைந்து விளையாட போகும் முதல் தொடர் இதுவாகும்.
உலக கோப்பை போட்டியில் காயத்தினால் பாதியில் விலகிய முன்னணி பேட்ஸ்மேன் 'உஸ்மான் கவாஜா' அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். காயத்தின் தன்மையைப் பொருத்து இவர் போட்டியில் களம் இறங்குவது முடிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சமீபகாலமாக பந்துவீச்சில் அசத்தி வந்த 'மைக்கேல் நேசர்' அறிமுக வீரராக ஆஸ்திரேலிய அணியில் இடம் பிடித்துள்ளார். சிறந்த ஆல் ரவுண்டராக இவர் கடந்த ஆஸ்திரேலிய உள்ளூர் சீசனில் பேட்டிங்கில் 5 அரைச் சதங்களுடன் 43.72 என்ற சிறந்த சராசரியை கொண்டுள்ளார். மேலும் பந்துவீச்சில் மொத்தம் 33 விக்கெட்டுகளை அந்த தொடரில் வீழ்த்தி அசத்தியுள்ளார் நேசர்.
மேலும் சமீபத்தில் ஒருநாள் போட்டியில் இருந்து நீக்கப்பட்ட வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் மூத்த வேகப்பந்து வீச்சாளரான 'பீட்டர் சிடில்' மற்றும் சமீபத்தில் தனது வேகப்பந்துவீச்சில் எல்லோரையும் அசத்திய 'ஜேம்ஸ் பேட்டின்சன்' ஆகியோர் நீண்ட இடைவெளிக்கு பிறகு அணிக்கு திரும்பியுள்ளனர். இதன் மூலம் ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சு மேலும் வலுப்பெற்றுள்ளது.
ஆஷஸ் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி விபரம்.
டிம் பைன் (கேப்டன்), கேமரூன் பான்கிராஃப்ட், பேட் கம்மின்ஸ், மார்க்கஸ் ஹாரிஸ், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா, மார்கஸ் லுபுஷாங்கே, நேதன் லயன், மிட்செல் மார்ஷ், மைக்கேல் நேசர், ஜேம்ஸ் பேட்டின்சன், பீட்டர் சிடில், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மேத்யூ வேட், டேவிட் வார்னர்.