2019 ஐபிஎல் தொடரில் டேவிட் வார்னரின் அதிரடி பேட்டிங்கை கண்டு ஆஸ்திரேலிய அணி நிர்வாகம் மிகுந்த மகிழ்ச்சியுடன் உள்ளது. ஐபிஎல் தொடரில் மிக அருமையான பேட்டிங் சாதனைகளை தன் வசம் வைத்துள்ள டேவிட் வார்னர் ஒரு வருட தடைக்குப் பிறகு இந்த வருட ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக வெளிபடுத்தி அந்த அணியை பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற வைத்துள்ளார். இவ்வருட ஐபிஎல் சீசனில் 12 போட்டிகளில் பங்கேற்றுள்ள இவர் 8 அரைசதங்கள் மற்றும் 1 சதத்தினை விளாசியுள்ளார். இவ்வருட ஐபிஎல் தொடரில் டேவிட் வார்னரின் கடைசி 6 இன்னிங்ஸ் ரன்கள்: 70, 51, 50, 67, 57, 37 மற்றும் 81.
ஆனால் வார்னரின் இந்த அதிரடி ஆட்டத்திறன் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரராக வெளிபடுத்துவாரா என்பது சந்தேகம் தான். இருப்பினும் இந்த நூற்றாண்டின் சிறந்த பேட்ஸ்மேன் மற்றும் உலகின் தலைசிறந்த தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர். மீண்டும் ஆஸ்திரேலிய அணிக்கு திரும்பியுள்ள டேவிட் வார்னர் மூன்றாவது வீரராக களமிறங்குவார் என தகவல்கள் கசிந்துள்ளன. இன்று பிரிஸ்பனில் நடைபெறவுள்ள நியூசிலாந்து XI அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக ஆரோன் ஃபின்ச் மற்றும் உஸ்மான் கவாஜா களமிறங்கினர்.
இந்த பயிற்சி ஆட்டத்தில் தற்போது சிறந்த ஆட்டத்திறனுடன் திகழும் தொடக்க ஆட்டக்காரர்களுக்கு ஆஸ்திரேலிய அணி நிர்வாகம் அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளது. இவ்வருட தொடக்கத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான போட்டியில் இவர்களது ஆட்டம் சிறப்பாக இருந்தது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான தொடரில் 10 போட்டிகளில் குறைந்தது 50 ரன்கள் பார்ட்னர் ஷிப்பை 7 முறை சரியாக கடைபிடித்து வந்தனர். இவர்களது அதிகபட்ச பார்ட்னர் ஷிப் ரன்களாக 193, 209, 134 ஆகும்.
வார்னரை மூன்றாவதாக இறக்கியிருப்பது பலருக்கு பெருத்த அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது. இது ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியை எவ்வளவு பாதிக்கும் என தெரியவில்லை. பயிற்சி ஆட்டம் தொடங்குவதற்கு முன்பு பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர், டேவிட் வார்னரின் மூன்றாவது வரிசை பேட்டிங் பற்றி தெரிவித்துள்ளதாவது:
" ஆஸ்திரேலிய அணி தற்போது சிறந்த தொடக்க ஆட்டக்காரர்களுடன் திகழ்கிறது. டெஸ்ட் போட்டிகளில் ஃபின்ச் மற்றும் கவாஜா சிறப்பான தொடக்கத்தை ஆஸ்திரேலிய அணிக்கு அளித்து வந்தனர். தற்போது கடைசி இரு 50 ஓவர் கிரிக்கெட்டில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். டேவிட் வார்னர் உலகின் சிறந்த தொடக்க ஆட்டக்காரர். ஷான் மார்ஷ் நம்பர் 3 மற்றும் நம்பர் 4 பேட்டிங் வரிசையில் சிறப்பான ஆட்டத்தை கடந்த காலங்களில் வெளிபடுத்தியுள்ளார். ஸ்டிவன் ஸ்மித் அவருக்கு விருப்பமான இடத்தில் பேட் செய்யலாம். இவர் எந்த இடத்தில் இறங்கினாலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் திறமை படைத்துள்ளார். எனவே ஆஸ்திரேலிய அணியில் டாப் 5 பேட்ஸ்மேன்களும் சதங்களை விளாசும் திறமை உடையவர்கள்.
டேவிட் வார்னர் நம்பர்-3 பேட்ஸ்மேனாகவும் முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டிவன் ஸ்மித் நான்காவது பேட்ஸ்மேனாகவும் களமிறக்கப்படுவார்கள்.