சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் மிக முக்கியமான தொடர் என்றால், அது உலக கோப்பை தொடர் தான். இந்த உலகக் கோப்பை தொடரானது, நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை என்ற வீதம் நடத்தப்படும். இந்த உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணி, தலைசிறந்த அணிகளில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. இந்த ஆண்டு நடைபெற உள்ள உலக கோப்பை தொடரிலும், ஆஸ்திரேலிய அணி மிக வலுவான அணிகளில் ஒன்றாக உள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை தொடரில், ஆஸ்திரேலிய அணியின் வெற்றி பயணங்களைப் பற்றி இங்கு காண்போம்.
#1) இங்கிலாந்து அணிக்கு எதிராக ( 111 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி )
2015 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை தொடரின் லீக் சுற்றில், இங்கிலாந்து அணியும், ஆஸ்திரேலிய அணியும் மோதியது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது. ஆரோன் பினிச் மற்றும் டேவிட் வார்னர் ஆகிய இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். டேவிட் வார்னர், 18 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட்டாகி வெளியேறினார். அடுத்து வந்த ஷேன் வாட்சன், முதல் பந்திலேயே டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அதன் பின்பு பேட்டிங் செய்ய வந்த ஆஸ்திரேலிய அணியின் முக்கிய பேட்ஸ்மேனான ஸ்டீவன் ஸ்மித், வெறும் 5 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
மிடில் ஆர்டரில் சிறப்பாக பேட்டிங் செய்த ஜார்ஜ் பெய்லி, 55 ரன்கள் அடித்தார். அடுத்து வந்து அதிரடியாக விளையாடிய மேக்ஸ்வெல், 40 பந்துகளில் 66 ரன்கள் விளாசினார். இறுதிவரை தனி ஒருவராக போராடிய ஆரோன் பினிச், 135 ரன்கள் விளாசினார். இறுதியில் ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 342 ரன்கள் குவித்தது.
343 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. இயான் பெல் மற்றும் மொயின் அலி ஆகிய இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். இயான் பெல் 36 ரன்கள் அடித்து, இங்கிலாந்து அணிக்கு நல்ல தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தார். அடுத்து வந்த ஜோ ரூட், வெறும் 5 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து வந்த இங்கிலாந்து அணியின் கேப்டன் இயான் மோர்கன், டக் அவுட்டாகி வெளியேறினார்.
மிடில் ஆர்டரில் சிறப்பாக விளையாடிய டெய்லர், 98 ரன்கள் விளாசினார். இறுதியில் இங்கிலாந்து அணி 41 ஓவர்களின் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 231 ரன்கள் மட்டுமே அடித்தது. எனவே ஆஸ்திரேலிய அணி 111 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
#2) ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக ( 275 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி )
2015 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை தொடரின் லீக் சுற்றில், ஆப்கானிஸ்தான் அணியும், ஆஸ்திரேலிய அணியும் மோதியது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி வெளுத்து வாங்கிய டேவிட் வார்னர், 133 பந்துகளில் 178 ரன்கள் விளாசினார். இதில் 19 பவுண்டரிகளும், 5 சிக்சர்களும் அடங்கும். அடுத்து வந்து சிறப்பாக விளையாடிய ஸ்டீவன் ஸ்மித் 95 ரன்கள் விளாசினார். மிடில் ஆர்டரில் அதிரடியாக விளையாடிய மேக்ஸ்வெல், 39 பந்துகளில் 88 ரன்கள் விளாசினார். இறுதியில் ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 417 ரன்கள் குவித்தது.
418 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிகக் கடினமான இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி களமிறங்கியது. ஜாவத் அகமடி மற்றும் உஸ்மான் காணி ஆகிய இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். இருவருமே பவர் பிளே ஓவர்களில் தங்களது விக்கெட்டை பறிகொடுத்தனர். அடுத்து வந்து நிதானமாக விளையாடிய மங்கள், 33 ரன்கள் அடித்தார். மற்ற அனைத்து பேட்ஸ்மேன்களும் சொற்ப ரன்களில் அவுட் ஆகி வெளியேறினர். இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி 37 அவர்களின் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, வெறும் 142 ரன்கள் மட்டுமே அடித்தது. எனவே ஆஸ்திரேலிய அணி 275 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.