இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 , 4 டெஸ்ட், 3 ஓடிஐ போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. டி20 தொடர் 1-1 என டிரா ஆனது. 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இன்று அடிலெய்டில் இந்திய நேரப்படி அதிகாலை 5:30 மணிக்குத் தொடங்கியது.
டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. பயிற்சி ஆட்டத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக பிரித்வி ஷா- விற்கு பதிலாக முரளி விஜய் கே.எல். ராகுலுடன் தொடக்க வீரராக களமிறங்கினார். ஆட்டத்தின் முதல் ஓவரை ஸ்ட்ராக் வீசினார். ராகுல் முதல் ஓவரில் 6 பந்துகளில் 2 ரன்களை அடித்தார். இரண்டாவது ஓவரில் ஹசில்வுட் வீசிய பந்தில் ஆரோன் ஃபின்ச்-டம் கேட்ச் ஆனார் கே.எல்.ராகுல். இதனால் இந்திய அணியின் தொடக்க வீரர்களின் சொதப்பல் தென்னாப்பிரிக்கா தொடர் முதல் இன்று வரை தொடர்ந்து கொண்டுதான் வருகிறது.
பின்னர் புஜாரா களமிறங்கினார். 7வது ஓவரில் ஸ்ட்ராக் வீசிய பந்தில் விக்கெட் கீப்பர் பெய்னி- யிடம் கேட்ச் ஆனார் விஜய். இவர் மொத்தமாக 22 பந்துகளை எதிர்கொண்டு 1 பவுண்டரியுடன் 11 ரன்களை அடித்தார். அதன்பின் இந்திய அணியின் நம்பிக்கை நாயகன் விராட் கோலி களமிறங்கினார். இவர் தொடக்கம் முதலே சற்று தடுமாறினார். 10 வது ஓவரில் பேட் கமின்ஸ் வீசிய பந்தில் தவறான ஷாட்டை அடித்ததால் கவாஜா- விடம் கேட்ச் ஆனார். கோலி மொத்தமாக 16 பந்துகளில் 3 ரன்களை மட்டுமே எடுத்து வெளியேறினார். இந்திய அணி 11 ஓவரில் 19 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அதன் பின் களமிறங்கிய துணை கேப்டன் ரகானே சற்று நம்பிக்கை தரும் விதமாக ஆட்டத்தை தொடங்கினார். ஆனால் 21வது ஓவரில் ஹசில்வுட் வீசிய பந்தில் கோலியைப் போலவே தவறான ஷாட்டால் பீட்டர் ஹாண்ட்ஸ் கோம்-இடம் கேட்ச் ஆனார். இவர் மொத்தமாக 31 பந்தில் 1 சிக்சருடன் 13 ரன்களை அடித்தார். பின்னர் களமிறங்கிய ரோஹித் சர்மா அதிரடியாக விளையாட ஆரம்பித்தார். இடையிடையே பவுண்டரி மற்றும் சிக்சர்களை விளாசித் தள்ளினார். 38வது ஓவரில் சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் வீசிய முதல் பந்தில் சிக்சரை விளாசினார் ரோஹித் சர்மா. இரண்டாவது பந்திலும் முதல் பந்தைப் போலவே சிக்சர் அடிக்க முயன்ற போது மார்கஸ் ஹாரிஸிடம் கேட்ச் ஆனார். இவர் மொத்தமாக 61 பந்துகளை எதிர்கொண்டு 3 சிக்சர்கள் மற்றும் 2 பவுண்டரிகளுடன் 36 ரன்களை அடித்தார்.
அதன்பின் வந்த ரிஷப் ஃபன்ட் ஸ்ட்ராக் ஓவரில் பவுண்டரிகள் மற்றும் சிக்சர்களை பறக்க விட்டார். ஆனால் அவரும் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. 50 ஓவரில் நாதன் லயன் வீசிய பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் ஆனார். இவர் மொத்தமாக 38 பந்துகளில் 25 ரன்களை அடித்து வெளியேறினார்.

முதலாவது விக்கெட்டில் களமிறங்கிய புஜாரா மட்டும் பொறுமையாக நிலைத்து நின்று விளையாடினார். ரவிச்சந்திரன் அஸ்வின் அவருடன் கைகோர்த்து விளையாட ஆரம்பித்தார். இவர்களது பார்ட்னர் ஷிப் சிறிது நேரம் நீடித்தது. 74வது ஓவரில் பேட் கமின்ஸ் வீசிய பந்தில் பீட்டர் ஹான்ட்ஸ் கோம்- இடம் அஸ்வின் கேட்ச் ஆனார். இவர் மொத்தமாக 76 பந்துகளை எதிர்கொண்டு 1 பவுண்டரியுடன் 25 ரன்களை அடித்தார். அதன்பின் களமிறங்கிய இஷாந்த் சர்மா 4 ரன்களில் ஸ்ட்ராக் வீசிய பந்தில் போல்ட் ஆனார்.
ஆரம்பம் முதல் பொறுமையாக விளையாடிய புஜாரா மொத்தமாக 246 பந்துகளை எதிர்கொண்டு 7 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்களுடன் 123 ரன்களை விளாசித்தள்ளினார். இவர் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக மட்டும் 7 சதங்களை விளாசியுள்ளார். ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை சரியாக கணித்து விளையாடிய ஒரே வீரர் புஜாரா மட்டுமே. 10 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து வெறும் 19 ரன்கள் மட்டுமே அடித்திருந்த இந்திய அணியை பொறுமையாக விளையாடி 250 என்ற ஒரு நிலைத்தன்மையான ரன்களை பெறச் செய்தார் புஜாரா.
88வது ஓவரில் புஜாராவும் ரன் அவுட் ஆனார். அவரது விக்கெட்டுடன் இன்றைய நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இந்திய அணி மொத்தமாக 88 ஓவர்கள் விளையாடி 9 விக்கெட் இழப்பிற்கு 250 ரன்களை அடித்தது. ஆஸ்திரேலியா அணி சார்பாக ஸ்ட்ராக், ஹாசில்வுட், பேட் கமின்ஸ், நாதன் லயன் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். முகமது ஷமி மற்றும் பூம்ரா களத்தில் உள்ளனர்.
