ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் மோதும் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி வியாழன் அன்று அடிலெய்டில் தொடங்கியது. இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 250 ரன்கள் அடித்தது. ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்ஸில் 235 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. மூன்றாம் நாள் ஆட்டமுடிவில் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்திருந்தது.
அதைத்தொடர்ந்து நான்காம் நாள் ஆட்டத்தைத் தொடர்ந்த இந்திய அணி வீரர்கள் ரகானே மற்றும் புஜாரா நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 65வது ஓவரில் புஜாரா தனது அரை சதத்தை விளாசினார். இதன்மூலம் ஒரு டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸிலும் 50+ ரன்களை ஆஸ்திரேலியா ஆடுகளத்தில் அடித்த மூன்றாவது இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார் புஜாரா.
88வது ஓவரில் நாதன் லயான் வீசிய பந்தில் ஆரோன் ஃபின்ச்-யிடம் கேட்ச் ஆனார் புஜாரா. இவர் மொத்தமாக 204 பந்துகளை எதிர்கொண்டு 9 பவுண்டரிகளுடன் 71 ரன்களை அடித்தார். ரகானே மற்றும் புஜாரா இருவரின் பார்ட்னர்ஷிப்பில் 71 ரன்கள் குவித்தனர். பின்னர் 90வது ஓவரில் ரகானே தனது அரை சதத்தை விளாசினார்.
புஜாராவைத் தொடர்ந்து களமிறங்கிய ரோஹித் சர்மாவும் நாதன் லயான் வீசிய பந்தில் ஹாண்ட்ஸ் கோமிடம் கேட்ச் ஆனார். இவர் மொத்தமாக 6 பந்துகளை எதிர்கொண்டு 1 ரன் மட்டுமே எடுத்து வெளியேறினார். உணவு இடைவேளை வரை இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 260 ரன்கள் எடுத்திருந்தது. இந்திய அணி 275 ரன்கள் முன்னிலையில் இருந்தது.
பின்னர் வந்த ரிஷப் ஃபன்ட் மற்றும் ரகானே இணைந்து சிறிது நேரம் விளையாடினர். நாதன் லயான் வீசிய பந்தில் ரிஷப் ஃபன்ட் ஆரோன் ஃபின்ச்-யிடம் கேட்ச் ஆனார். இவர் மொத்தமாக 16 பந்தில் 4 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்சருடன் 28 ரன்களை விளாசினார். அதன்பின் வந்த ரவிச்சந்திரன் அஸ்வினும் நிலைத்து ஆடாமல் ஸ்டார்க் வீசிய பந்தில் மார்கஸ் ஹாரிஸிடம் கேட்ச் ஆனார். இவர் 18 பந்துகளை எதிர்கொண்டு 5 ரன்களை மட்டுமே அடித்தார்.
நிலைத்து நிதானமாக விளையாடிய ரகானே நாதன் லயான் வீசிய பந்தில் ஸ்டார்க்கிடம் கேட்ச் ஆனார். ரகானே மொத்தமாக 147 பந்துகளை எதிர்கொண்டு 7 பவுண்டரிகளுடன் 70 ரன்களை அடித்தார். பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் தங்களது விக்கெட்டை இழந்து வெளியேறினர். இந்திய அணி மொத்தமாக 2வது இன்னிங்ஸில் 107 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது 307 ரன்களை அடித்தது.
ஆஸ்திரேலியா அணியில் நாதன் லயான் அதிகபட்சமாக 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஸ்டார்க் 3 விக்கெட்டுகளையும், ஹசில்வுட் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.இந்திய அணி 32 ரன்களை ஆஸ்திரேலியா அணிக்கு இலக்காக நிர்ணயித்தது.
பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்க ஆரோன் ஃபின்ச் மற்றும் மார்கஸ் ஹாரிஸ் களமிறங்கினர். இஷாந்த் ஷர்மா வீசிய முதல் பந்தை எதிர்கொண்ட ஆரோன் ஃபின்ச் எல்.பி.டள்யு (LBW) ஆனார். ஆனால் அவர் நோ -பாலில் வீசியதால் அந்த விக்கெட் மறுக்கப்பட்டது. அதன்பின் ஆரோன் ஃபின்ச் மற்றும் மார்கஸ் ஹாரிஸ் கணித்து விளையாட ஆரம்பித்தனர்.
12வது ஓவரில் அஸ்வின் வீசிய பந்தில் ஆரோன் ஃபின்ச் விக்கெட் கீப்பர் ரிஷப் ஃபன்ட்-டிடம் கேட்ச் ஆனார். இவர் மொத்தமாக 35 பந்துகளை எதிர்கொண்டு 1 பவுண்டரியுடன் 11 ரன்களை அடித்தார். தேநீர் இடைவேளையில் ஆஸ்திரேலியா அணி 12 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 28 ரன்களை அடித்திருந்தது.
அதன்பின் 16வது ஓவரில் ஷமி வீசிய பந்தில் மார்கஸ் ஹாரிஸ் ரிஷப் ஃபன்ட்-டிடம் கேட்ச் ஆனார். இவர் மொத்தமாக 49 பந்தில் 3 பவுண்டரிகளுடன் 26 ரன்களை அடித்தார். 24வது ஓவரில் அஸ்வினின் சுழலில் கவாஜா ரோஹித் சர்மாவிடம் கேட்ச் ஆனார். இவர் மொத்தமாக 42 பந்தில் 8 ரன்களை அடித்தார்.
முகமது ஷமி-யின் வேகத்தில் ஹான்ட்ஸ் கோம் , புஜாரா-விடம் கேட்ச் ஆனார். இவர் மொத்தமாக 40 பந்தில் 1 பவுண்டரியுடன் 14 ரன்களை அடித்தார்.நான்காம் நாள் ஆட்டமுடிவில் ஆஸ்திரேலியா அணி 4 விக்கெட் இழப்பிற்கு 104 ரன்கள் எடுத்திருந்தது.
ஆஸ்திரேலியா வெற்றி பெற இன்னும் 219 ரன்களை எடுக்க வேண்டும். ஷான் மார்ஸ் 31 ரன்களுடனும் டிராவிஸ் ஹெட் 11 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இதனால் 5-ஆம் நாள் ஆட்டம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.