ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் மோதும் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி வியாழன் அன்று அடிலெய்டில் தொடங்கியது. இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 250 ரன்களை அடித்திருந்தது. ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்ஸில் 235 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 307 ரன்களை அடித்தது. நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா அணி 4 விக்கெட் இழப்பிற்கு 104 ரன்கள் எடுத்திருந்தது.
அதைத்தொடர்ந்து ஐந்தாம் நாள் ஆட்டத்தைத் தொடர்ங்க ஆஸ்திரேலியா அணி வீரர்கள் ஷான் மார்ஸ் மற்றும் டிராவிஸ் ஹெட் களமிறங்கினர். ஆட்டம் ஆரம்பித்த சில மணிநேரங்களிலே இஷாந்த் ஷர்மா வீசிய பந்தில் டிராவிஸ் ஹெட், ரகானே-விடம் கேட்ச் ஆகி வெளியேறினார். இவர் மொத்தமாக 62 பந்துகளை எதிர்கொண்டு 1 பவுண்டரியுடன் 14 ரன்களை அடித்தார். நிதானமாக விளையாடிய ஷான் மார்ஸ் 66 வது ஓவரில் தனது அரை சதத்தை விளாசினார்.
பின்னர் 73 வது ஓவரில் பூம்ரா வீசிய பந்தில் ஷான் மார்ஸ், ரிஷப் ஃபன்ட்டிடம் கேட்ச் ஆனார். இவர் மொத்தமாக 166 பந்துகளை எதிர்கொண்டு 5 பவுண்டரியுடன் 60 ரன்களை அடித்தார். அதன்பின் களமிறங்கிய பேட் கமின்ஸ் மற்றும் டிம் பெய்ன் நிதானமாக இந்திய பந்து வீச்சை கணித்து விளையாட ஆரம்பித்தனர். உணவு இடைவேளை வரை ஆஸ்திரேலியா அணி 6 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்திருந்தது.
பின்னர் பூம்ரா வீசிய பந்தில் டிம் பெய்னும் ரிஷப் ஃபன்ட்-டிடம் கேட்ச் ஆகி வெளியேறினார். இவர் மொத்தமாக 73 பந்துகளை எதிர்கொண்டு 4 பவுண்டரிகளுடன் 41 ரன்களை அடித்தார்.அதன் பின் வந்த ஸ்டார்க் பேட் கமின்ஸ்-உடன் சேர்ந்து 41 ரன்களை அடித்தனர். 101வது ஓவரில் முகமது ஷமி வீசிய பந்தில் ரிஷப் ஃபன்ட்-டிடம் கேட்ச் ஆனார் ஸ்டார்க். இவர் மொத்தமாக 44 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 28 ரன்களை அடித்தார்.
ரிஷப் ஃபன்ட்-டின் இந்த கேட்சின் மூலம் இந்த டெஸ்ட் போட்டியில் மொத்தம் 11 கேட்சுகளை பிடித்துள்ளார். சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் ஒரு போட்டியில் அதிக கேட்சை பிடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் மற்றும் உலகில் மூன்றாவது வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.
பின்னர் களமிறங்கிய நாதன் லயான் , பேட் கமின்ஸ்-உடன் சேர்ந்து நிதானமான ஆட்டத்தை வெளிபடுத்தினர்.
மிகவும் நிதானமாக விளையாடிய பேட் கமின்ஸ் பூம்ரா வீசிய பந்தில் விராட் கோலியிடம் கேட்ச் ஆனார். இவர் மொத்தமாக 121 பந்தில் 3 பவுண்டரிகளுடன் 28 ரன்களை அடித்தார். பின்னர் நாதன் லயான் நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்து வந்தார்.
120 வது ஓவரில் அஸ்வின் வீசிய பந்தில் ஹசில்வுட் , ராகுலிடம் கேட்ச் ஆனார். இவர் மொத்தமாக 43 பந்துகளை எதிர்கொண்டு 1 பவுண்டரியுடன் 13 ரன்கள் எடுத்தார். நாதன் லயான் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 47 பந்தில் 3 பவுண்டரிகளுடன் 38 ரன்களை அடித்திருந்தார். இறுதியில் ஆஸ்திரேலியா அணி அணைத்து விக்கெட்டுகளையும் இழந்தது 291 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது. இந்திய அணி சார்பில் அஸ்வின், முகமது ஷமி மற்றும் பூம்ரா தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இஷாந்த் சர்மா 1 விக்கெட்டையும் வீழ்த்தினார்
இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுது, ஆஸ்திரேலிய ஆடுகளத்தில் இதுவரை நடந்த டெஸ்ட் தொடரில், முதல் போட்டியிலேயே வெற்றியை குவித்து வரலாற்று சாதனையை படைத்திருக்கிறது இந்திய அணி. இரண்டு இன்னிங்ஸிலும் 50+ ரன்களை விளாசிய புஜாரா ஆட்ட நாயகன் விருதினை பெற்றார். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 1-0 என முன்னிலையில் உள்ளது. இரண்டாவது டெஸ்ட் போட்டி 14ம் தேதி பெர்த்தில் நடைபெறுகிறது.