இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 , 4 டெஸ்ட் , 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. டி20 தொடரில் 1-1 என மழையால் டிரா ஆனது . பின்னர் அடிலெய்டில் தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் புஜாரா மற்றும் இந்திய பந்துவீச்சாளர்களின் அற்புதமான ஆட்டத்திறன் மூலம் இந்திய அணி வெற்றி பெற்றது.
இதையடுத்து இரண்டாது டெஸ்ட் போட்டி இன்று (டிசம்பர் 14 ) காலை இந்திய நேரப்படி 7:50 -ற்கு பெர்த் ஆடுகளத்தில் தொடங்கியது . டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் டிம் பெய்ன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் ஏற்கனவே நேற்று 13 பேர் கொண்ட அணி அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த அணியிலிருந்து ரவீந்திர ஜடேஜா மற்றும் புவனேஸ்வர் குமார் ஆகியோர் விடுவிக்கப்பட்டனர்.
பெர்த் ஆடுகளம் அதிக புற்கள் நிறைந்து காணப்படுவதால் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக அமையும். எனவே முகமது ஷமி , பூம்ரா , இஷாந்த் ஷர்மா , உமேஷ் யாதவ் போன்ற வேகப்பந்து வீச்சாளர்களுடன் இந்திய அணி களமிறங்கியுள்ளது. இந்திய அணியில் பகுதி நேர சுழற்பந்து வீச்சாளராக ஹனுமா விகாரி உள்ளார். ரோஹித் சர்மா & அஸ்வின் காயம் காரணமாக ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா அணி அடிலெய்டு டெஸ்ட்டில் களமிறங்கிய அதே XI-வுடன் களமிறங்குகிறது. அந்த அணியின் தொடக்க வீரர்களான ஆரோன் ஃபின்ச் மற்றும் மார்கஸ் ஹாரிஸ் இந்திய பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை கணித்து சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினர். 12வது ஓவரில் முகமது ஷமி வீசிய பந்து ஆரோன் ஃபின்ச்-ன் பேடில் பட்டதால் எல்.பி.டபுள்யு கேட்கப்பட்டது. ஆனால் பந்து ஸ்டம்பிற்கு மேல்நோக்கி சென்றதால் விக்கெட் மறுக்கப்பட்டது. இதற்க்கு இந்தியா ரிவியூ கேட்டும் பலனில்லை.
உணவு இடைவேளையில் ஆஸ்திரேலியா அணி விக்கெட் இழப்பின்றி 26 ஓவர்களுக்கு 66 ரன்கள் எடுத்திருந்தது. மார்கஸ் ஹாரிஸ் 6 பவுண்டரிகளுடன் 36 ரன்களுடனும் மற்றும் ஆரோன் ஃபின்ச் 3 பவுண்டரிகளுடன் 28 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
உணவு இடைவேளைக்குப் பின் தொடர் பவுண்டரிகளை குவித்து வந்த மார்கஸ் ஹாரிஸ் 30 வது ஓவரில் தனது முதல் சர்வதேச டெஸ்ட் அரை சதத்தை அடித்தார்.அதைத் தொடர்ந்து 34வது ஓவரில் ஆரோன் ஃபின்ச் அரைசதத்தை அடித்தார்.
36வது ஓவரில் பூம்ரா வீசிய பந்தில் ஆரோன் ஃபின்ச் எல்.பி.டபுள்யு ஆனார். இவர் மொத்தமாக 105 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 50 ரன்களை அடித்தார். நீண்ட நேரத்திற்கு பிறகு இந்திய அணிக்கு விக்கெட் வந்தது. பின்னர் வந்த கவாஜா சொற்ப்ப ரன்களில் உமேஷ் யாதவ்-விடம் தனது விக்கெட்டை இழந்தார்.
49 ஓவரில் பகுதி நேர சுழற்பந்து வீச்சாளர் ஹனுமா விகாரி வீசிய பந்தில் மார்கஸ் ஹாரிஸ் ரகானேவிடம் கேட்ச் ஆனார். இவர் 141 பந்துகளில் 10 பவுண்டரிகளுடன் 70 ரன்களை அடித்தார். ஆஸ்திரேலிய அணி தேநீர் இடைவேளையில் 3 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்கள் எடுத்திருந்தது.
பின்னர் இஷாந்த் ஷர்மா வீசிய பந்தில் ஹாண்ட்ஸ் கோம் , விராட் கோலியிடம் கேட்ச் ஆகி 7 ரன்களில் வெளியேறினார். நிதானமாக விளையாடி வந்த ஷான் மார்ஸ் ஹனுமா விகாரி வீசிய பந்தில் ரகானேவிடம் கேட்ச் ஆனார். இவர் மொத்தமாக 98 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 48 ரன்கள் அடித்தார்.
பொறுமையாக விளையாடிய டிராவிஸ் ஹெட் 78வது ஓவரில் தனது அரை சதத்தை விளாசினார். பின்னர் இஷாந்த் ஷர்மா வீசிய வேகத்தில் முகமது ஷமி-யிடம் கேட்ச் ஆனார்.இவர் மொத்தமாக 80 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 58 ரன்களை அடித்தார்.
ஆஸ்திரேலியா அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 90 ஒவர்களை எதிர்கொண்டு 6 விக்கெட்டுகளை இழந்து 277 ரன்களை எடுத்திருந்தது. டிம் பெய்ன் 16 ரன்களுடனும், பேட் கமின்ஸ் 11 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர். இந்திய அணி சார்பில் இஷாந்த் ஷர்மா, ஹனுமா விகாரி தலா 2 விக்கெட்டுகளையும், பூம்ரா, உமேஷ் யாதவ் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர்.