ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் மோதும் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று பெர்த் ஆடுகளத்தில் தொடங்கியது. நேற்றைய ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 90 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 277 ரன்களை எடுத்திருந்தது.
இரண்டாம் நாளான இன்று ஆட்டத்தை தொடர்ந்த பேட் கம்மின்ஸ் மற்றும் டிம் பெய்ன் அற்புதமான ஆட்டத்திறனை வெளிபடுத்தினர். இவர்களது பார்ட்னர்ஷிப்பில் ஆஸ்திரேலிய அணிக்கு 59 ரன்கள் வந்தது. பின்னர் 105வது ஓவரில் உமேஷ் யாதவ் வீசிய பந்தில் பேட் கம்மின்ஸ் போல்ட் ஆனார். இவர் மொத்தமாக 66 பந்துகளில் 19 ரன்களை அடித்தார். பின்னர் அடுத்த ஓவரிலேயே பும்ரா வீசிய பந்தில் டிம் பெய்ன் எல்.பி.டபுள்யு ஆனார். இவர் மொத்தமாக 89 பந்துகளை எதிர்கொண்டு 4 பவுண்டரிகளுடன் 38 ரன்களை அடித்தார்.
இரண்டு ஓவர்களுக்குப் பிறகு இஷாந்த் ஷர்மா வீசிய அடுத்தடுத்த இரண்டு பந்துகளில் ஸ்ட்ராக் மற்றும் ஹசில்வுட் தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 108.3 ஓவர்களில் 326 ரன்களை அடித்தது. இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக இஷாந்த் ஷர்மா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பும்ரா மற்றும் உமேஷ் யாதவ், ஹனுமா விகாரி தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
10 நிமிட இடைவேளைக்குப் பிறகு இந்திய அணியின் தொடக்கவீரர்கள் முரளி விஜய் மற்றும் லோகேஷ் ராகுல் களமிறங்கினர். 3வது ஓவரில் ஸ்ட்ராக் வீசிய பந்தில் முரளி விஜய் ரன் ஏதும் இன்றி போல்ட் ஆனார். கடைசி 5 இன்னிங்ஸில் விஜய் 3 டக் அவுட் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது. உணவு இடைவேளையின் போது இந்திய அணி 3 ஓவர்களை எதிர்கொண்டு 1 விக்கெட் இழப்பிற்கு 6 ரன்கள் எடுத்திருந்தது.
பின்னர் 6 வது ஓவரில் ஹசில்வுட் வீசிய முதல் பந்தில் லோகேஷ் ராகுல் 2 ரன்களில் போல்ட் ஆகி வெளியேறினார்.ராகுல் கடந்த 11 டெஸ்ட் போட்டிகளில் 6 முறை போல்ட் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
பின்னர் களமிறங்கிய கேப்டன் விராட் கோலி மற்றும் புஜாரா ஆஸ்திரேலியா அணியின் பந்துவீச்சை கணித்து நிதானமாக விளையாட ஆரம்பித்தனர். தேநீர் இடைவேளையின்போது இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 32 ஓவர்களில் 78 ரன்களை எடுத்திருந்தது.
விராட் கோலி மற்றும் புஜாராவின் அற்புதமான பார்ட்னர்ஷிப்பால் 74 ரன்கள் இந்திய அணிக்கு வந்தது. 39-வது ஓவரில் ஸ்ட்ராக் வீசிய பந்தில் புஜாரா விக்கெட் கீப்பர் டிம் பெய்னிடம் கேட்ச் ஆனார். இவர் மொத்தமாக 103 பந்துகளில் 1 பவுண்டரியுடன் 24 ரன்களை அடித்தார். புஜாராவின் விக்கெட் இந்திய அணிக்கு மிகப்பெரிய இழப்பாக இருந்தது.
இந்திய அணி தனது 43வது ஓவரில் 100 ரன்களை கடந்தது. கேப்டன் விராட் கோலி 44வது ஓவரில் இரண்டாவது பந்தில் பவுண்டரியை விளாசி தனது அரை சதத்தை அடித்தார்.
ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி வந்த துனை கேப்டன் ரகானே 66வது ஓவரில் தனது அரை சதத்தை விளாசினார்.
இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 63 ஓவர்களை எதிர்கொண்டு 3 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்திருந்தது. இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை விட 154 ரன்கள் பின்தங்கியுள்ளது. விராட் கோலி 181 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 82 ரன்களுடனும் , ரகானே 103 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 51 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலிய அணி சார்பில் ஸ்ட்ராக் 2 விக்கெட்டுகளையும் , ஹசில்வுட் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.