ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் மோதும் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி வெள்ளி அன்று பெர்த்தில் தொடங்கியது. ஆஸ்திரேலியா அணி தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 326 ரன்கள் அடித்தது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 283 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. மூன்றாம் நாள் ஆட்டமுடிவில் ஆஸ்திரேலிய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்திருந்தது.
அதைத்தொடர்ந்து நான்காம் நாள் ஆட்டத்தைத் தொடர்ந்த ஆஸ்திரேலியா அணி வீரர்கள் கவாஜா மற்றும் டிம் பெய்ன் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். மிகவும் பொறுமையாக விளையாடிய கவாஜா 64வது ஓவரில் தனது 14வது டெஸ்ட் அரை சதத்தை அடித்தார். இவர் மொத்தமாக 156 பந்துகளை தனது அரை சதத்தை விளாச எடுத்துக் கொண்டார்.
இந்திய அணியின் பந்துவீச்சை சரியாக கணித்து கவாஜா மற்றும் டிம் பெய்ன் விளையாடி வந்தனர். உணவு இடைவேளையில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் எடுத்திருந்தது. நான்காம் நாள் முதல் செஷனில் விக்கெட் ஏதும் இன்றி 58 ரன்களை ஆஸ்திரேலியா அணி சேர்ந்தது. முதல் செஷனிற்கு ஆஸ்திரேலிய அணி 233 ரன்கள் முன்னிலையில் இருந்தது.
உணவு இடைவேளைக்குப் பிறகு ஷமி வீசிய முதல் ஓவரின் 5வது பந்தில் டிம் பெய்ன் அவுட்டானார். இவர் மொத்தமாக 116 பந்துகளை எதிர்கொண்டு 4 பவுண்டரிகளுடன் 37 ரன்களை அடித்தார். பின் அடுத்த பந்திலேயே ரிட்டயர்டு ஹர்ட் ஆகி மீண்டும் களமிறங்கிய ஆரோன் ஃபின்ச், ரிஷப் ஃபன்ட்-டிடம் கேட்ச் ஆகி வெளியேறினார். இவர் மொத்தமாக 31 பந்துகளை எதிர்கொண்டு 4 பவுண்டரிகளுடன் 25 ரன்களை அடித்தார்.
83வது ஓவரில் ஷமி வீசிய பந்தில் நிதானமாக விளையாடிய கவாஜா ரிஷப் ஃபன்ட்-டிடம் கேட்ச் ஆனார். இவர் மொத்தமாக 213 பந்துகளை எதிர்கொண்டு 5 பவுண்டரிகளுடன் 72 ரன்களை அடித்தார். 84வது ஓவரில் பூம்ரா வீசிய பந்தில் பேட் கமின்ஸ் 1 ரன்னில் போல்ட் ஆனார். அதன்பின் களமிறங்கிய நாதன் லயான் முகமது ஷமியின் வேகத்திற்கு தாக்குப்பிடிக்காமல் ஹனுமா விகாரி-யிடம் கேட்ச் ஆனார். இந்த விக்கெட்டின் மூலம் ஷமி இந்த இன்னிங்ஸில் மட்டும் 6 விக்கெட்டுகளை கைப்பற்றிருந்தார். ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் ஒரே இன்னிங்ஸில் அதிக விக்கெட் வீழ்த்தியோர் பட்டியலில் ஷமி 3 வது இடத்தை பெற்றார்.
பின்னர் களமிறங்கிய ஹசில் வுட் , ஸ்டார்க்-வுடன் சேர்ந்து 30 ரன்கள் பார்ட்னர் ஷிப்பில் ஈடுபட்டனர். 94வது ஓவரில் பூம்ரா வீசிய பந்தில் ஸ்டார்க் 14 ரன்களில் போல்ட் ஆனார்.
இறுதியில் ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 243 ரன்களை அடித்தது. இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக முகமது ஷமி 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பூம்ரா 3 விக்கெட்டுகளையும் , இஷாந்த் ஷர்மா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
287 என்ற இலக்குடன் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் தங்களது இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கினர். ஸ்டார்க் வீசிய முதல் ஓவரின் ஐந்தாவது பந்திலேயே கே.எல்.ராகுல் போல்ட் ஆகி அதிர்ச்சியை ஏற்படுத்தினார். பின்னர் களமிறங்கிய புஜாரா-வும் , பேட் கமின்ஸ் வீசிய பந்தில் 4 ரன்களில் டிம் பெய்னிடம் கேட்ச் ஆனார்.
தேநீர் இடைவேளையில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 6 ஓவரில் 15 ரன்கள் எடுத்திருந்தது.
பின்னர் களமிறங்கிய விராட் கோலி , முரளி விஜய்-யுடன் கைகோர்த்து நிதானமாக விளையாட ஆரம்பித்தார்.
20வது ஓவரில் நாதன் லயான் வீசிய பந்தில் நம்பிக்கை நாயகன் விராட் கோலி கவாஜா-விடம் கேட்ச் ஆனார். இவர் மொத்தமாக 40 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 17 ரன்களை அடித்தார்.
சற்று நிலைத்து ஆடிய முரளி விஜய் நாதன் லயான் வீசிய பந்தில் போல்ட் ஆனார். இவர் மொத்தமாக 67 பந்துகளை எதிர்கொண்டு 3 பவுண்டரிகளுடன் 20 ரன்களை அடித்தார்.
பின்னர் வந்த ஹனுமா விகாரி , ரகானே-வுடன் சேர்ந்து 43 ரன்கள் பார்ட்னர் ஷிப் சேர்த்தார். 35வது ஓவரில் ஹசில்வுட் வீசிய பந்தில் ரகானே , டிராவிஸ் ஹெட்-டம் கேட்ச் ஆனார். இவர் மொத்தமாக 47 பந்துகளில் 2 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸருடன் 30 ரன்களை அடித்தார்.
இந்திய அணி நான்காம் நாள் ஆட்டமுடிவில் 41 ஓவர்களை எதிர்கொண்டு 5 விக்கெட் இழப்பிற்கு 112 ரன்கள் எடுத்திருந்தது. இந்திய அணி வெற்றி பெற இன்னும் 175 ரன்கள் தேவை. ஆஸ்திரேலியா அணி சார்பில் ஹசில்வுட் , நாதன் லயான் தலா 2 விக்கெட்டுகளையும் , ஸ்ட்ராக் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். ஹனுமா விகாரி 24 ரன்களுடனும் , ரிஷப் ஃபன்ட் 9 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.