ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் மோதும் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி வெள்ளி அன்று பெர்த்தில் தொடங்கியது. ஆஸ்திரேலியா அணி தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 326 ரன்களை அடித்திருந்தது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 283 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா அணி 243 ரன்களை அடித்தது. நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 112 ரன்கள் எடுத்திருந்தது.
அதைத்தொடர்ந்து ஐந்தாம் நாள் ஆட்டத்தைத் தொடங்க இந்திய அணி வீரர்கள் ஹனுமா விகாரி மற்றும் ரிஷப் ஃபன்ட் களமிறங்கினர்.ஆட்டம் ஆரம்பித்த சில மணிநேரங்களிலே ஸ்டார்க் வீசிய பந்தில் ஹனுமா விகாரி, மார்கஸ் ஹாரிஸ்-டம் கேட்ச் ஆகி வெளியேறினார். இவர் மொத்தமாக 75 பந்துகளை எதிர்கொண்டு 4 பவுண்டரியுடன் 28 ரன்களை அடித்தார்.
பின்னர் ரிஷப் ஃபன்ட் இடையிடையே ஒரு சில பவுண்டரிகளை அடித்து வந்தார். 54வது ஓவரில் நாதன் லயான் வீசிய பந்தில் ரிஷப் ஃபன்ட் ஹான்ட்ஸ் கோம்-டம் கேட்ச் ஆகி வெளியேறினார். இவர் மொத்தமாக 61 பந்துகளை எதிர்கொண்டு 2 பவுண்டரிகளுடன் 30 ரன்களை அடித்தார்.
அதன்பின் களமிறங்கிய உமேஷ் யாதவ் 2 ரன்களிலும் , முகமது ஷமி , இஷாந்த் ஷர்மா , பூம்ரா ரன் ஏதும் எடுக்காமலும் தொடர்ச்சியாக அவுட் ஆகி பெவிலியன் திரும்பினர்.
ஆஸ்திரேலியா அணி சார்பில் ஸ்டார்க் , நாதன் லயான் தலா 3 விக்கெட்டுகளையும் , ஹசில் வுட் மற்றும் பேட் கமின்ஸ் தலா 2 விக்கெட்டுகளையும் இரண்டாவது இன்னிங்ஸில் கைப்பற்றினர்.
இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 140 ரன்களை மட்டுமே அடித்தது. இதனால் ஆஸ்திரேலியா அணி 146 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நாதன் லயான் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார் . 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-1 என ஆஸ்திரேலியா அணி சமன் செய்துள்ளது.
தோல்வி குறித்து கேப்டன் விராட் கோலி கூறியதாவது : " எங்கள் அணி வீரர்கள் பெர்த் ஆடுகளத்தில் சிறப்பாக செயல்பட்டனர். ஆனால் சில தவறுகள் எங்களிடம் உள்ளது அதை நாங்கள் அடுத்த போட்டியில் கண்டிப்பாக சரி செய்வோம். ஆஸ்திரேலியா அணி சிறப்பாக விளையாடியது. நாங்கள் 30-40 ரன்களுக்கு முன்னதாகவே கூட எதிரணியை கட்டுப்படுத்தியிருக்கலாம் . ஆஸ்திரேலியா அணி இதற்கு சில மாதங்கள் பல தோல்விகளினால் அவதிப்பட்டு வந்தது. இந்த வெற்றி அவர்களுக்கு ஒரு புது நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கும். இரண்டாவது இன்னிங்ஸில் எங்கள் அணியின் பந்துவீச்சாளர்கள் மிகவும் சிறப்பாக செயல்பட்டனர். நான் பெர்த் ஆடுகளத்தை பார்த்த பிறகு ஜடேஜாவை பற்றி நினைக்கவே இல்லை. நாதன் லயான் சிறப்பான பந்துவீச்சாளர். சுழற்பந்து வீச்சை பற்றி நான் இந்த ஆடுகளத்தில் நினைக்கவே இல்லை. இனிவரும் போட்டிகளில் எங்கள் தவறுகளை திருத்தி இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் செல்வோம் "
மூன்றாவது டெஸ்ட் போட்டி வரும் டிசம்பர் 26 ஆம் தேதி மெல்போர்ன் ஆடுகளத்தில் நடைபெறவுள்ளது.