ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் மோதும் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டி கடந்த புதன் அன்று மெல்போர்ன்-னில் தொடங்கியது. இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்பிற்கு 443 ரன்கள் அடித்து டிக்ளர் செய்தது.நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா அணி 6 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 8 ரன்களை எடுத்திருந்தது.
இன்று மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடங்க ஆஸ்திரேலிய அணி வீரர்கள் ஆரோன் பின்ச் மற்றும் மார்கஸ் ஹாரிஸ் களமிறங்கினர். 10வது ஓவரில் இஷாந்த் ஷர்மா வீசிய பந்தில் ஆரோன் ஃபின்ச், மயான்க் அகர்வால்-லிடம் கேட்ச் ஆனார். இவர் மொத்தமாக 36 பந்துகளை எதிர்கொண்டு 1 பவுண்டரியுடன் 8 ரன்களை அடித்தார். பின்னர் சில நிமிடங்களிலேயே பூம்ரா வீசிய பந்தில் மார்கஸ் ஹாரிஸ், இஷாந்த் ஷர்மா-விடம் கேட்ச் ஆனார். இவர் மொத்தமாக 35 பந்துகளை எதிர்கொண்டு 2 பவுண்டரிகளுடன் 22 ரன்களை அடித்தார்.

பின்னர் களமிறங்கிய கவாஜா-வும் நிதான ஆட்டத்தை வெளிபடுத்தாமல் ஜடேஜா-வின் சுழலில் மயான்க் அகர்வால்-லிடம் கேட்ச் ஆனார். இவர் மொத்தமாக 32 பந்துகளை எதிர்கொண்டு 3 பவுண்டரிகளுடன் 21 ரன்களை அடித்தார். சற்று நிலைத்து ஆடிய ஷான் மார்ஸ் பூம்ரா வேகத்தில் எல்.பி.டபுள்யு ஆனார். இவர் மொத்தமாக 61 பந்துகளை எதிர்கொண்டு 1 பவுண்டரியுடன் 19 ரன்களை அடித்தார். இந்த விக்கெட்டின் மூலம் அறிமுக டெஸ்ட் வீரராக ஒரு வருடத்தில் அதிகபட்ச டெஸ்ட் விக்கெட்டுகளை(42 விக்கெட்டுகள்) வீழ்த்திய முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார் பூம்ரா.

உணவு இடைவேளையில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 89 ரன்களை அடித்திருந்தது. 37வது ஓவரில் பூம்ரா வீசிய பந்தில் டிராவிஸ் ஹெட் போல்ட் ஆனார். இவர் மொத்தமாக 48 பந்துகளை எதிர்கொண்டு 2 பவுண்டரிகளுடன் 20 ரன்களை அடித்தார். பின்னர் களமிறங்கிய மிட்செல் மார்ஷ், ஜடேஜா சுழலில் ரகானே-விடம் கேட்ச் ஆனார். இவர் மொத்தமாக 36 பந்துகளை எதிர்கொண்டு 1 பவுண்டரியுடன் 9 ரன்கள் அடித்தார். மிட்செல் மார்ஷ் அவர் விளையாடிய கடந்த 12 இன்னிங்ஸில் மொத்தமாக 119 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதன்பின் களமிறங்கிய பேட் கமின்ஸ் முகமது ஷமி வேகத்தில் போல்ட் ஆனார். இவர் மொத்தமாக 48 பந்துகளை எதிர்கொண்டு 2 பவுண்டரிகளுடன் 17 ரன்களை அடித்தார். ஆஸ்திரேலியா அணி தேநீர் இடைவேளையில் 7 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் அடித்திருந்து.

மிகவும் பொறுமையாக விளையாடி வந்த டிம் பெய்ன் பூமரா வேகத்தில் ரிஷப் ஃபன்ட்-டிடம் கேட்ச் ஆனார். இவர் மொத்தமாக 85 பந்துகளை எதிர்கொண்டு 1 பவுண்டரியுடன் 22 ரன்களை அடித்தார். அதன்பின் களமிறங்கிய ஹசில் வுட் மற்றும் நாதன் லயான் ரன் ஏதும் எடுக்காமல் பூம்ரா வேகத்தில் தங்களது விக்கெட்டுகளை இழந்தனர். ஆஸ்திரேலிய அணி மொத்தமாக அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 151 ரன்களை எடுத்து ஃபாலோ ஆன் ஆனது. இந்திய அணி சார்பில் பூம்ரா 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஜடேஜா 2 விக்கெட்டுகளும் , இஷாந்த் ஷர்மா மற்றும் முகமது ஷமி தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

ஒரே வருடத்தில் இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா , மற்றும் ஆஸ்திரேலியா என 3 வெவ்வேறு நாடுகளில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் ஆசிய பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெற்றார் பூம்ரா. இதுவரை கோலியின் கேப்டன்ஷிப்பில் எதிரணியை 4 முறை ஃபாலோ ஆன் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
10 நிமிட இடைவேளைக்குப் பிறகு இந்திய அணி மீண்டும் பேட்டிங் செய்ய ஆரம்பித்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய மயான்க் அகர்வால் மற்றும் ஹனுமா விகாரி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 13 வது ஓவரில் பேட் கமின்ஸ் வீசிய பந்தில் விகாரி, கவாஜா-விடம் கேட்ச் ஆனார். இவர் மொத்தமாக 45 பந்துகளை எதிர்கொண்டு 1 பவுண்டரியுடன் 13 ரன்களை அடித்தார். பின்னர் அடுத்த ஓவரை வீசிய பேட்கமின்ஸ் விராட் கோலி மற்றும் புஜாரா ஆகிய இருவரையும் ஒரே ஓவரில் டக் அவுட் ஆக்கினார். பின்னர் வந்த ரகானேவையும் , பேட் கமின்ஸ் தனது வேகத்தில் வீழ்த்தினார்.

அதன்பின் சற்று நிலைத்து ஆட முயற்ச்சித்த ரோகித் சர்மா-வையும் ஹசில்வுட் தனது வேகத்தில் வீழ்த்தினார். இந்திய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மொத்தமாக 6 ரன்களை மட்டுமே இரண்டாவது இன்னிங்ஸில் அடித்தனர். இன்றைய ஆட்டநேர முடிவில் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 24 ஓவர்களை எதிர்கொண்டு 5 விக்கெட் இழப்பிற்கு 54 ரன்கள் அடித்தது. மயான்க் அகர்வால் 24 ரன்களுடனும் , ரிஷப் ஃபன்ட் 6 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலிய அணி சார்பில் பேட்கமின்ஸ் 4 விக்கெட்டுகளையும் ஹசில்வுட் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். இந்திய அணி 346 ரன்கள் முன்னிலையில் உள்ளது.