ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் மோதும் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டி புதன் அன்று மெல்போர்ன்-னில் தொடங்கியது. இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகளை இழந்து 443 ரன்களை அடித்து டிக்ளர் செய்தது. ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்ஸில் 151 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஃபாலோ ஆன் ஆனது. இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்களை அடித்து டிக்ளர் செய்தது. நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா அணி 8 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்கள் எடுத்திருந்தது.
ஐந்தாவது மற்றும் கடைசி நாளான இன்று மழையினால் முதல் செஷன் தடைபட்டது. இரண்டாவது செஷனில் மழை நின்ற பிறகு ஆட்டம் ஆரம்பம் ஆனது. ஆஸ்திரேலிய அணி வீரர்கள் பேட் கமின்ஸ் மற்றும் நாதன் லயான் களமிறங்கினர். 88வது ஓவரில் பூம்ரா வீசிய பந்தில் பேட் கமின்ஸ் , புஜாரா-விடம் கேட்ச் ஆனார். இவர் மொத்தமாக 114 பந்துகளை எதிர்கொண்டு 4 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸருடன் 61 ரன்களை அடித்தார். இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா அணியில் அதிகபட்ச ரன்களை அடித்தவர் பேட் கமின்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் அடுத்த ஓவரிலேயே இஷாந்த் ஷர்மா வீசிய பந்தில் நாதன் லயான் , ரிஷப் பன்ட்-டிடம் 7 ரன்களில் கேட்ச் ஆனார். இவரது விக்கெட்டுடன் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இந்திய அணி 137 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1 என முன்னிலையில் உள்ளது. அத்துடன் இந்த டெஸ்ட் வெற்றியின் மூலம் இந்திய அணிக்கு 150 டெஸ்ட் வெற்றியும் வந்தது. 150 டெஸ்ட் வெற்றி பெற்ற ஐந்தாவது அணி என்ற பெருமையையும் பெற்றது இந்திய அணி.
இந்திய அணி சார்பில் இரண்டாவது இன்னிங்ஸில் ஜடேஜா மற்றும் பூம்ரா தலா 3 விக்கெட்டுகளையும் , இஷாந்த் ஷர்மா மற்றும் முகமது ஷமி தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். ரிஷப் பன்ட் இந்த டெஸ்ட் தொடரில் இதுவரை 20 கேட்சுகளை பிடித்துள்ளார். ஒரு தொடரில் அதிக கேட்சுகளை பிடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற பெரும் சாதனையை படைத்தார் ரிஷப் பன்ட். 3வது டெஸ்டில் சிறப்பாக பந்துவீச்சை மேற்கொண்ட ஜாஸ்பிரிட் பூம்ரா ஆட்ட நாயகன் விருதினை பெற்றார்.
இந்திய அணியின் வெற்றி குறித்து விராட் கோலி கூறியதாவது : "நாங்கள் இந்த வெற்றியுடன் நிறுத்த போவதில்லை , அடுத்து சிட்னி-யில் நடைபெறும் போட்டியிலும் வெற்றி முனைப்போடு செயல்படுவோம். நாங்கள் இந்த போட்டியில் மிகவும் சிறப்பாக செயல்பட்டுள்ளோம். எங்களது வீரர்கள் தங்களுக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பை சரியாக பயன்படுத்தி உள்ளனர். தற்போது உள்ள டெஸ்ட அணி மிகவும் திறமை வாய்ந்த வீரர்களை கொண்டு விளங்குகிறது. நான் மற்றவர்கள் செய்யும் விமர்சனங்களை கண்டு கொள்வதில்லை. ஆடுகளம் 3 மற்றும் 4 வது நாளில் சற்று மோசமடைந்து விட்டதை நான் உணர்ந்தேன். பூம்ரா சிறப்பாக பந்து வீசினார். எங்கள் மூன்று வேகப்பந்து வீச்சாளர்களும் இந்த வருடத்தில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி வரலாற்று உலகச்சாதனையை படைத்துள்ளனர். பூம்ராவிற்கு பெர்த் டெஸ்டில் அவ்வளவாக விக்கெட் வீழ்த்த இயலவில்லை. அவர் மெல்போர்ன்-னில் கடுமையான பயிற்சியின் மூலம் தனது பந்துவீச்சை மிகவும் அற்புதமாக மேம்படுத்தியுள்ளார். மயான்க் அகர்வால் மற்றும் புஜாரா-வின் பேட்டிங் மிகவும் அற்புதமாக இருந்தது. அடுத்த டெஸ்டிலும் இந்த டெஸ்டில் கிடைத்த வெற்றியின் நம்பிக்கையுடன் செயல்பட்டு தொடரை கைப்பற்றுவோம்".
ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணி மோதும் நான்காவது டெஸ்ட் போட்டி சிட்னியில் வரும் ஜனவரி 3ல் நடைபெறவுள்ளது.