இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 , 4 டெஸ்ட், 3 ஓடிஐ போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. டி20 தொடர் 1-1 என டிரா ஆனது. 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் முதல் மூன்று டெஸ்ட்டில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை இரண்டு டெஸ்ட்டில் வென்று 1-2 என முன்னிலையில் உள்ளது . நான்காவது மற்றும் தொடரை தீர்மானிக்கும் டெஸ்ட் போட்டி இன்று சிட்னி-யில் இந்திய நேரப்படி அதிகாலை 5:00 மணிக்குத் தொடங்கியது.
டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணி ஏற்கனவே நேற்று( ஜனவரி 2) 13 பேர் கொண்ட அணியை அறிவித்திருந்தது. ரோகித் சர்மா-வின் மனைவிக்கு குழந்தை பிறந்துள்ளதால் அவருக்கு இந்தியா செல்ல பிசிசிஐ அனுமதி அளித்துள்ளது. அதனால் அவருக்கு பதிலாக கே.எல்.ராகுலும் , இஷாந்த் ஷர்மா-விற்கு பதிலாக குல்தீப் யாதவ்-வும் இந்திய அணியில் இடம்பெற்றனர். அஸ்வின் உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாததால் அவர் அணியில் இடம்பெறவில்லை. 13 பேர் கொண்ட அணியில் இடம்பிடித்த உமேஷ் யாதவ் பென்சில் உட்காரவைக்கப்பட்டார். ஏனெனில் சிட்னி ஆடுகளம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக அமையும் என்பதால் அவரை 11 பேர் கொண்ட அணியில் சேர்க்கப்படவில்லை.
ஆஸ்திரேலிய அணியில் தொடக்க ஆட்டக்காரராக சொதப்பி வந்த ஆரோன் ஃபின்ச் அணியிலிருந்து கழட்டிவிடப்பட்டார். அத்துடன் இளம் டெஸ்ட் வீரர் மிட்செல் மார்ஷ்-க்கு கடந்த டெஸ்ட் போட்டியில் அளிக்கப் பட்ட வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளததால் அவரையும் அணியில் இருந்து நீக்கியது ஆஸ்திரேலிய அணி. ஆரோன் ஃபின்ச்-ற்கு பதிலாக மெர்னஸ் லேபுஷ்சேன்-வும் , மிட்செல் மார்ஷ்-க்கு பதிலாக பீட்டர் ஹான்ட்ஸ் கோம்-வும் அணியில் சேர்க்கப்பட்டனர்.
இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கே.எல் . ராகுல் மற்றும் மயான்க் அகர்வால் களமிறங்கினர். ஸ்டார்க் முதல் ஓவரை வீசினார். 2வது ஓவரில் ஹசில்வுட் வீசிய பந்தில் கே.எல்.ராகுல், ஷான் மார்ஸ்-டம் கேட்ச் ஆனார். இவர் மொத்தமாக 6 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 9 ரன்களை அடித்து வெளியேறினார். பின்னர் வந்த புஜாரா-வுடன் , மயான்க் அகர்வால் கைகோர்த்து விளையாட தொடங்கினார். 19வது ஓவரில் இவர்களது பார்ட்னர் ஷிப்பில் 50 ரன்கள் வந்தது. உணவு இடைவேளையில் இந்திய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 69 ரன்கள் அடித்திருந்தது.
29வது ஓவரில் மயான்க் அகர்வால் தனது இரண்டாவது சர்வதேச அரைசதத்தை விளாசினார். பின்னர் சற்று அதிரடியாக விளையாடி வந்த மயான்க் அகர்வால் , நாதன் லயன் வீசிய 33வது ஓவரின் கடைசி பந்தில் ஸ்டார்கிடம் கேட்ச் ஆனார். இவர் மொத்தமாக 112 பந்துகளை எதிர்கொண்டு 7 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 77 ரன்களை எடுத்து இந்த முறையும் தனது சதத்தை விளாச தவறினார்.பின்னர் களமிறங்கிய விராட் கோலி , புஜாரா-வுடன் சேர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இந்திய, ஆஸ்திரேலிய டெஸ்ட சீரிஸில் 1000+ பந்துகளை எதிர்கொண்ட இந்திய வீரர்கள் பட்டியலில் புஜாரா ஐந்தாவது இடத்தைப் பிடித்தார். புஜாரா 50வது ஓவரின் இரண்டாவது பந்தில் பவுண்டரியை விளாசி தனது 22வது சர்வதேச டெஸ்ட் அரை சதத்தை அடித்தார். விராட் கோலி அதிவேகமாக(399 இன்னிங்ஸ்) 19,000 சர்வதேச ரன்களை குவித்த முதல் கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை படைத்தார் . இதற்கு முன் சச்சின் டெண்டுல்கர் இந்த சாதனையை 432 இன்னிங்ஸில் அடித்து வைத்திருந்தார். இந்திய அணி தேநீர் இடைவேளையில் 2 விக்கெட் இழப்பிற்கு 52 ஓவர்களை எதிர்கொண்டு 177 ரன்கள் எடுத்திருந்தது.
பின்னர் தேநீர் இடைவேளை முடிந்து ஹசில்வுட் வீசிய முதல் ஓவரின் ஐந்தாவது பந்தில் விராட் கோலி டிம் பெய்ன்-டம் கேட்ச் ஆனார். இவர் மொத்தமாக 59 பந்துகளை எதிர்கொண்டு 4 பவுண்டரிகளுடன் 23 ரன்களை அடித்தார். அதன்பின் களமிறங்கிய ரகானே 70வது ஓவரில் ஸ்டார்க் வீசிய பந்தில் டிம் பெய்ன்-டம் கேட்ச் ஆனார். இவர் மொத்தமாக 55 பந்துகளை எதிர்கொண்டு 1 பவுண்டரியுடன் 18 ரன்களை அடித்தார்.
அதன்பின் களமிறங்கிய ஹனுமா விகாரி புஜாரவுடன் சேர்ந்து விளையாட ஆரம்பித்தார். 73வது ஓவரில் ஹசில்வுட் வீசிய கடைசி பந்தில் புஜாரா பவுண்டரியை விளாசி தனது 19வது சர்வதேச டெஸ்ட் சதத்தினை அடித்தார். 83வது ஓவரில் விகாரி மற்றும் புஜாராவின் பார்ட்னர் ஷிப்பில் 50 ரன்கள் வந்தது. இந்திய அணி முதல் நாள் ஆட்டமுடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 303 ரன்கள் அடித்திருந்தது. ஆஸ்திரேலிய அணி சார்பில் ஹசில்வுட் 2 விக்கெட்டுகளையும் , ஸ்டார்க் , நாதன் லயான் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். புஜாரா 130 ரன்களுடனும் , ஹனுமா விகாரி 39 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.