ஆஸ்திரேலியா vs இந்தியா 2018/19 : நான்காவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் மேட்ச் ரிப்போர்ட்

Pant & pujara
Pant & pujara

ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் மோதும் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டி நேற்று சிட்னியில் தொடங்கியது. இந்திய அணி முதல் நாள் ஆட்டமுடிவில் 90 ஓவர்களை எதிர்கொண்டு 4 விக்கெட் இழப்பிற்கு 303 ரன்கள் எடுத்திருந்தது.

இரண்டாம் நாளான இன்று புஜாரா (68) மற்றும் ஹனுமா விகாரி (47) களமிறங்கினர். 101வது ஓவரில் பவுண்டரி விளாசி தனது 150 ரன்களை நிறைவு செய்தார் புஜாரா. அதே ஓவரில் லயன் வீசிய பந்தில் ஹனுமா விகாரி , லபுசேனிடம் கேட்ச் ஆனார். இவர் மொத்தமாக 96 பந்துகளை எதிர்கொண்டு 5 பவுண்டரிகளுடன் 42 ரன்களை அடித்தார். இந்திய அணி உணவு இடைவேளையில் 5 விக்கெட் இழப்பிற்கு 389 ரன்கள் எடுத்திருந்தது.

Pujara
Pujara

மிகவும் நிதானமாக விளையாடி வந்த புஜாரா , நாதன் லயன் வீசிய 130வது ஓவரின் கடைசி பந்தில் லயனிடமே கேட்ச் ஆனார். மிகவும் சிறப்பாக விளையாடி வந்த புஜாரா 373 பந்துகளை எதிர்கொண்டு 22 பவுண்டரிகளுடன் 193 ரன்களை விளாசினார். 7 ரன்களில் இரட்டை சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார் புஜாரா. ஆஸ்திரேலியாவில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர்கள் பட்டியலில் 6வது இடத்தை பிடித்தார் புஜாரா. நாதன் லயன் இதுவரை 15 காட்டன் போல்ட் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதன்பின் களமிறங்கிய ஜடேஜா ரிஷப் பன்டுடன் சேர்ந்து நிதானமான ஆட்டத்தை வெளிபடுத்தினார். 131வது ஓவரில் ரிஷப் பன்ட் தனது அரை சதத்தை விளாசினார்.

தேநீர் இடைவேளையில் இந்திய 6 விக்கெட் இழப்பிற்கு 491 ரன்கள் எடுத்திருந்தது.141 ஓவரில் லபுசேன் வீசிய இரண்டாவது பந்தில் பவுண்டரியை விளாசி ரிஷப் பன்ட் தனது இரண்டாவது சர்வதேச சதத்தினை அடித்தார். இளம் வயதில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சதம் விளாசிய மூன்றாவது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார் ரிஷப் பன்ட்.

Pant & pujara
Pant & pujara

151வது ஓவரில் ரவீந்திர ஜடேஜா தனது 10வது சர்வதேச அரை சதத்தை விளாசினார். 167வது ஓவரில் ரிஷப் பன்ட் தனது 150 ரன்களை நிறைவு செய்தார். அத்துடன் ஜடேஜா- பன்ட் பார்ட்னர்ஷிப்பில் இந்திய அணிக்கு 185 ரன்கள் வந்தது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 7வது விக்கெட் பார்ட்னர்ஷிப்பில் அதிக ரன்களை குவித்த முதல் இந்தியர்கள் என்ற பெருமையை பெற்றனர் பன்ட் மற்றும் ஜடேஜா. 167வது ஓவரில் நாதன் லயன் வீசிய பந்தில் ஜடேஜா , போல்ட் ஆனார். இவர் மொத்தமாக 114 பந்துகளை எதிர்கொண்டு 7 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸருடன் 81 ரன்களை அடித்தார். இவரது விக்கெட்டுடன் இந்திய அணி டிக்ளர் செய்தது. இந்திய மொத்தமாக 167 ஓவர்களை எதிர்கொண்டு 7 விக்கெட் இழப்பிற்கு 622 ரன்களை எடுத்து டிக்ளர் செய்தது. இந்த ரன்கள் இந்திய அணி ஆஸ்திரேலியாவில் அடித்த இரண்டாவது அதிக ரன்களாகும்.

Pant
Pant

ரிஷப் பன்ட் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 189 ரன்களை விளாசினார். அந்நிய மண்ணில் அதிக டெஸ்ட் ரன்களை எடுத்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற பெருமையைப் பெற்றார். அத்துடன் அந்நிய மண்ணில் அதிக ரன்களை குவித்த முதல் ஆசிய விக்கெட் கீப்பர் என்ற பெருமையையும் பெற்றார்.

ஆஸ்திரேலிய அணி சார்பில் நாதன் லயன் 57 ஓவர்களை வீசி 4 விக்கெட்டுகளையும், ஹசில்வுட் 35 ஓவர்களை வீசி 2 விக்கெட்டுகளையும், ஸ்டார்க் 28 ஓவர்களை வீசி 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். கடந்த போட்டியில் சிறப்பாக பந்துவீசிய பேட் கமின்ஸ்-ற்கு ஒரு விக்கெட் கூட விழவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Lyon
Lyon

பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி வீரர்கள் கவாஜா மற்றும் மார்கஸ் ஹாரிஸ் நிதான ஆட்டத்தை வெளிபடுத்தினர். இதில் கவாஜா கொடுத்த எளிய கேட்சை பிடிக்க தவறினார் ரிஷப் பண்ட். இன்றைய ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி விக்கெட் இழப்பின்றி 10 ஓவர்களை எதிர்கொண்டு 24 ரன்கள் எடுத்திருந்தது. கவாஜா 5 ரன்களுடனும் , மார்கஸ் ஹாரிஸ் 19 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

Quick Links

App download animated image Get the free App now