ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் மோதும் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டி கடந்த வியாழன் அன்று சிட்னியில் தொடங்கியது. இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்பிற்கு 622 ரன்கள் அடித்து டிக்ளர் செய்தது. ஆஸ்திரேலியா அணி நேற்றைய ஆட்ட நேர முடிவில் தனது முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை இழந்து 236 ரன்கள் எடுத்தது. நேற்று மூன்றாவது செஸனில் போதிய வெளிச்சம் இல்லததால் ஆட்டம் பாதியில் நிறுத்திவிட்டு. எனவே இன்று ஒருமணி நேரத்திற்கு முன்னதாக ஆட்டம் தொடங்கியது.
இருப்பினும் மழை ஆட்டத்தை தொடங்க விடவில்லை. இன்றைய நான்காம் நாள் ஆட்டத்தின் முதல் செஸன் முழுவதும் மழையால் கைவிடப்பட்டது. பின்னர் உணவு இடைவேளை முடிந்து இரண்டாவது செஸனில் ஆட்டம் தொடங்கியது. இன்றைய ஆட்டத்தை தொடங்க பேட் கமின்ஸ் மற்றும் ஹான்ட்ஸ் கோம் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கி இன்றைய நாளின் முதல் ஓவரை முகமது ஷமி வீசிய பந்தில் பேட் கமின்ஸ் போல்ட் ஆனார். இவர் மொத்தமாக 44 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 25 ரன்களை அடித்தார்.
பின்னர் 80வது ஓவரில் பூம்ரா வீசிய பந்தில் பீட்டர் ஹான்ட்ஸ் கோம் , போல்ட் ஆனார். இவர் மொத்தமாக 111 பந்துகளை எதிர்கொண்டு 5 பவுண்டரிகளுடன் 37 ரன்களை அடித்தார். அதன்பின் களமிறங்கிய நாதன் லயான்-ம் , குல்தீப் சுழலில் டக் அவுட் ஆனார். ஸ்ட்ராக் மற்றும் ஹசில்வுட் சற்று நிலைத்து விளையாடினர். இவர்களது பார்ட்னர் ஷிப்பில் 42 ரன்கள் ஆஸ்திரேலிய அணிக்கு வந்தது. 104வது ஓவரில் குல்தீப் சுழலில் ஹசில்வுட் எல்.பி.டபுள்யு ஆனார். இவர் மொத்தமாக 45 பந்துகளை எதிர்கொண்டு 2 பவுண்டரிகளுடன் 21 ரன்களை அடித்தார்.
ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து மொத்தமாக 105 ஓவர்களில் 300 ரன்களை அடித்து ஃபாலோ ஆன் ஆனது. இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை விட 322 ரன்கள் முன்னிலையில் இருந்தது. ஸ்டார்க் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 55 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 29 ரன்களை அடித்தார். இந்திய அணி சார்பில் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளையும் , ஜடேஜா , முகமது ஷமி தலா இரண்டு விக்கெட்டுகளையும் , பூம்ரா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
பின்னர் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி தேநீர் இடைவேளையில் விக்கெட் இழப்பின்றி 4 ஓவர்களை எதிர்கொண்டு 6 ரன்கள் எடுத்திருந்தது. தேநீர் இடைவேளை முடிந்தும் மழை மீண்டும் குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. 11:50 மணியளவில் நடுவர்கள் போதிய வெளிச்சம் இல்லாததாலும், மழையினாலும் இன்றைய நாள் ஆட்டம் கைவிடப்போவதாக அறிவித்தனர். இன்று மொத்தமாக 25.3 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டது. கவாஜா 4 ரன்களுடனும் , மார்கஸ் ஹாரிஸ் 2 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். நாளை இறுதி நாள் என்பதால் ஆஸ்திரேலிய அணி டிரா செய்ய முயற்ச்சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.