ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் மோதும் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டி வியாழன் அன்று சிட்னி-யில் தொடங்கியது. இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகளை இழந்து 622 ரன்களை அடித்து டிக்ளர் செய்தது. ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்ஸில் 300 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஃபாலோ ஆன் ஆனது.
பின்னர் ஆஸ்திரேலிய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. இரண்டாவது இன்னிங்ஸில் 4 ஓவர் மட்டுமே வீசப்பட்ட நிலையில் மழையினால் ஆட்டம் நிறுத்தப்பட்டது மழை மற்றும் போதிய வெளிச்சமின்மை காரணமாக நேற்று மொத்தமாக 25.3 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டது. இன்றைய 5-ம் நாள் ஆட்டம் தொடங்குவதற்கு முன்னர் இருந்தே மழை தன் ஆட்டத்தை ஆட ஆரம்பித்துவிட்டது.
ஆட்டம் டிரா:
உணவு இடைவேளை வரை மழை விடவில்லை. அதனால் முதல் செஸனில் ஒரு பந்து கூட வீசப்படவில்லை. உணவு இடைவேளை முடிந்து மழை மேலும் அதிகமானது. இதனால் கள நடுவர்கள் ஆராயந்தனர். பின்னர் சிறிது நேரத்திலேயே ஆட்டம் முழுவதுமாக நிறுத்தப்பட்டு "டிரா" என அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் இந்திய 2-1 என ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்று வரலாற்று சிறப்புமிக்க சாதனையை விராட் கோலி தலைமையிலான இந்திய அணி பெற்றுள்ளது. அத்துடன் முதல் ஆசிய அணியாக ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்துள்ளது இந்திய அணி.
டெஸ்ட் தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடி 3 சதங்களை விளாசிய புஜாரா ஆட்டநாயகன் விருதினை பெற்றார். அத்துடன் நான்காவது டெஸ்ட் போட்டியின் ஆட்ட நாயகன் விருதினையும் வென்றார்.
தொடர் நாயகன் புஜாரா :
இது குறித்து புஜார கூறியதாவது : "இந்த தொடரின் வெற்றி எங்களுக்கு. மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அன்னிய மண்ணில் தொடரை வெல்ல மிகவும் கடினமாக நாங்கள் உழைத்தோம். ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றுவது மிகவும் கடினமான ஒன்றாகும். அடிலெய்டில் அடித்த முதல் சதம் மிகவும் சிறப்பு வாயந்த சதமாகும். அத்துடன் அணியினருடன் சேர்ந்து 1-0 என முன்னேறினோம். இந்த வெற்றியின் மூலம் நாங்கள் தொடரை கைப்பற்றுவோம் என்ற நம்பிக்கை வந்ததால் இந்த சதம் எனக்கு சிறப்பான சதமாகும். இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் சில கவுண்டி கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி எனது பேட்டிங் திறனை மெருகேற்றினேன்.
ஒரு பேட்ஸ்மேனாக பேஸ் மற்றும் பவுண்ஸ் பந்துகளை எதிர்கொள்ள இந்த அனுபவம் மிகவும் உறுதுணையாக இருந்தது. எங்கள் அணியின் பந்துவீச்சாளர்கள் மிகவும் திறமைசாலிகள். டெஸ்ட் போட்டிகளில் நான்கு பந்துவீச்சாளர்களை வைத்து விளையாடுவது மிகவும் கடினம். ஏனெனில் நிறைய ஓவர்கள் டெஸ்ட்டில் வீச வேண்டும். ஆனால் எங்கள் பந்துவீச்சாளர்கள் திறமையாக செயல்பட்டு 20 விக்கெட்டுகளை எளிதாக வீழ்த்தினர்.
அடுத்த டெஸ்ட் தொடர் ஆரம்பிக்க இன்னும் 6-7 மாதங்கள் உள்ளன. எனவே நான் சில முதல்தர போட்டிகளில் விளையாட உள்ளேன். ஐபிஎல் போட்டிகளின் போது கவுண்டி விளையாட செல்வேன். நான் ஓடிஐ கிரிக்கெட் போட்டிகளில் இடம்பெற கடினமாக உழைப்பேன். ஆனால் டெஸ்ட் போட்டிக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பேன்".
கோஹ்லி பெருமிதம் :
இந்திய கேப்டன் விராட் கோலி வெற்றி குறித்து கூறியதாவது : "நான் எனது அணியை நினைத்து மிகுந்த பெருமையடைகிறேன். அணியில் கேப்டனாக நான் மிகுந்த அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன். கடந்த 12 மாத உழைப்பிற்கு சரியான பலன் கிடைத்துள்ளது. இதுதான் என்னுடைய வாழ்வில் மிகப்பெரிய சாதனையாக உணர்கிறேன். உலகக்கோப்பை நாங்கள் வென்ற மகிழ்ச்சி எங்களுக்கு தற்போது உள்ளது. இத்தொடரின் மூலம் நிறைய சாதனைகள் படைக்கப்பட்டு ஒரு புதிய அடையாளமாக இந்திய அணிக்கு உள்ளது. புஜாராவின் பங்கு இத்தொடரில் மகத்தானது ஆகும். கடந்த முறை ஆஸ்திரேலிய தொடரில் கிடைத்த அனுபவத்தை வைத்து தனது பேட்டிங் திறனை மாற்றியமைத்து மிகப்பெரிய ஆட்டத்திறன் கொண்ட வீரராக இத்தொடரில் கலக்கியுள்ளார். அத்துடன் மயான்க் அகர்வால் பாக்ஸிங் டே டெஸ்டில் அறிமுகமாகி, தொடரை கைப்பற்ற அருமையான தொடக்கத்தை அளித்தார். ரிஷப் பன்ட் விக்கெட் கீப்பராகவும், ஒரு அருமையான பேட்ஸ்மேனாகவும் தனது பங்கினை இந்த டெஸ்ட் தொடரில் அளித்தார் என விராட் கோலி தெரிவித்தார்".
4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நிறைவடைந்த நிலையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் வரும் ஜனவரி 12ஆம் நாள் சிட்னி மைதானத்தில் நடைபெறவுள்ளது.