ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி T 20 தொடரை தொடர்ந்து 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ளது. முன்னதாக நடந்த T 20 தொடரில், மூன்று போட்டிகளிலும் இந்திய அணிக்கு ஆதரவு அதிகமாகக் காணப்பட்டது.
பெரும்பாலான பார்வையாளர்கள் இந்திய அணியின் ஜெர்ஸியை அணிந்தவாறு காணப்பட்டனர். இந்தியாவின் கேப்டன் விராட் கோஹ்லி களமிறங்கும் போதெல்லாம் மைதானத்தில் பலத்த ஆரவாரம் காணப்பட்டது. இது தவிர ஆஸ்திரேலிய பௌலர்கள் பந்து வீசும்போது அவர்களுக்கு எதிரான கோஷங்களும் ஒலித்தது. இதனால் தனது சொந்த மண்ணிலேயே வெளியூரில் பங்கேற்பது போன்று உணர்வை ஆஸ்திரேலிய அணி அடைந்துள்ளது.
முதல் இரண்டு T 20 போட்டிகளில் பங்கேற்காத மிட்செல் ஸ்டார்க் தனது சொந்த ஊரான சிட்னியில் 3வது போட்டியில் களமிறங்கப்பட்டார். இவர் பந்து வீசும் இந்திய ரசிகர்கள் இவரை கேலிசெய்யும் விதமாக கூச்சல் போட்டனர். இதை பற்றி ஒரு தனியார் நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியில் - "என்னை கேலி செய்தவர்கள் யார் என்பது எனக்கு தெரியவில்லை. KKR அணியின் ரசிகர்களாக கூட இருக்கலாம்" என்று நகைச்சுவையாக தெரிவித்தார். IPL சீசன் 11ன் KKR அணியில் இருந்து விலக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அவர் - "இந்திய அணிக்கு கிடைத்த ஆதரவு எங்களுக்கு பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்த தொடர் முழுவதும் இது தொடரும் என்பதில் எங்களுக்கு சந்தேகமில்லை" என்று கூறியுள்ளார். இதே போன்று ஆஸ்திரேலியாவின் மற்றொரு வீரரான க்லென் மாஸ்வெல் கூறுகையில் - "இந்திய ரசிகர்கள் பலர் கூச்சல் போடுகின்றனர் ஆனால் அவர்கள் பேசுவது எதுவும் புரியவில்லை" என்றார்.
இதை பற்றி இந்தியாவின் ஷிகார் தவான் கூறுகையில் - "எனக்கு இங்கு கிடைத்த வரவேற்பு மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியது. அந்நிய மண்ணில் நாம் விளையாடுகிறோம் என்ற எண்ணமே இல்லை" என்று கூறினார். இதே போல் 3வது T 20 போட்டியின் ஆட்டநாயகன் க்ருனால் பாண்டியா கூறுகையில் - "என்னை போன்ற வீரர்களுக்கு இந்த தொடர் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. என் சொந்த மண்ணில் விளையாடுவதை போன்று உணர்ந்தேன். இதே போன்ற உற்சாகம் இந்த தொடர் முழுவதும் எங்களுக்கு கிடைத்தால், பெரிய பக்க பலமாக இருக்கும். மேலும் இது ஆஸ்திரேலிய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும்” என்று கூறினார்.
மேலும் அவர் கூறியதாவது "எங்கள் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி பேட்டிங் செய்யும் போது மைதானத்தில் இருந்த ரசிகர்கள் விராட் விராட் என்று உற்சாகப்படுத்துவதை பார்க்கும் போது, அவர் சொந்த ஊரான டெல்லியில் விளையாடுவதை போன்று எண்ணம் ஏற்பட்டது" என்று கூறினார். 3வது T 20யை காண மைதானத்திற்கு 37,399 ரசிகர்கள் வந்ததாக சிட்னி கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. அரங்கம் முழுவதும் பெரும்பாலும் இந்திய ரசிகர்களை தான் காண முடிந்தது. போட்டிக்கு பின் ரசிகர் ஒருவர் கூறுகையில் "இந்த போட்டியை காண மிகவும் ஆர்வமாக இருந்தேன். வழக்கத்தை விட நான்கு மடங்கு அதிக விலை கொடுத்து டிக்கெட் வாங்கினேன்" என்றார்.
இத்தொடரின் முதல் T 20 போட்டி பிரிஸ்பன் மைதானத்தில் நடைபெற்றது. இதனை காண 31,000 ரசிகர்கள் வந்ததாகவும், மழையால் கைவிடப்பட்ட மெல்போர்னில் நடைபெற்ற 2வது போட்டியை காண சுமார் 63,500 ரசிகர்கள் வந்ததாகவும் கூறப்படுகிறது. இதில் பெரும்பாலும் இந்திய ரசிகர்களே அதிகம் காணப்பட்டனர். இதை பற்றி ஆஸ்திரேலிய வீரர் அலேஸ் காரி கூறுகையில் "இத்தொடர் எங்களுக்கு பெரும் சவாலாக இருக்கும். இந்தியா ஒரு மிகச்சிறந்த அணி என்பதில் சந்தேகமில்லை. அவர்களை வீழ்த்த உள்ளோர் ரசிகர்களின் உற்சாகமும் எங்களுக்கு தேவை" என்று அவர் கூறினார். நான்கில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் சிட்னி மற்றும் மெல்போர்னில் நடைபெறுவதால் அங்கும் இந்திய ரசிகர்களின் வருகை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மீதம் உள்ள இரண்டு போட்டிகள் அடிலெய்டு மற்றும் பெர்த்தில் நடைபெறுகிறது. 2015ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் அடிலெய்டில் மோதியது. இதனை காண 52,000 ரசிகர்கள் வருகைபுரிந்தார்கள் என்பது கூடுதல் தகவல்.